பு.கஜிந்தன்
அச்சுறுத்தல் மத்தியில் மக்களின் உணர்வுக்கு பாரத தேசம் தாமதிக்காது நீதி வழங்க வேண்டும் – சபா குகதாஸ்
தியாகி திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தல் அரசின் சட்ட மற்றும் இராணுவ காவல்துறை இயந்திரத்தின் அச்சுறுத்தல் மத்தியில் உணர்வு பூர்வமாக தமிழர் தாயகம் எங்கும் மக்களால் அனுஸ்டிக்கப்பட்டது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.
இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி வெளிநாடுகளில் சகல நினைவேந்தல்களையும் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக கூறிவரும் சமநேரம் உள் நாட்டில் அரச இயந்திரத்தை பயன்படுத்தி தடைகளை ஏற்படுத்துவதும் புலனாய்வாளரைக் கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தல் மற்றும் நேரடி அச்சுறுத்தல் என்பன தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஆகவே அரசாங்கம் நினைவேந்தல் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது.
உண்மையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அச்சுறுத்தல் இல்லாவிட்டால் மாபெரும் மக்கள் எழுச்சியை காணமுடியும் இது அரசாங்கத்திற்கு தெரியும். சர்வதேசத்திற்கும் புரியும்.
தியாகி திலீபன் ஐந்து அம்ச கோரிக்கைகளை பாரத தேசத்தை நோக்கி முன் வைத்து உண்ணா நோன்பை ஆரம்பித்தமை அனைவரும் அறிந்த வரலாறு. ஆனால் இன்றுவரை அக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அவசரகால சட்டம் தற்காலிக நீக்கமே தவிர பயங்கரவாத தடைச் சட்டத்துடன் இணைந்துள்ளது. இது தொடர்பில் கடந்த காலத்தில் கசப்பான நிலையில் பாரத தேசம் இருந்தாலும் இன்று மக்களின் உணர்வுக்கு நீதி வழங்க வேண்டும்.
2009 ஆயுத போராட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் மௌனிக்கப்பட்ட பின்னர் ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் விடுதலைப் போராட்ட நினைவேந்தல்களை நினைவு கொள்ள தவறவில்லை. பல அரச எதிர்ப்புக்கள் மத்தியில் அனுஸ்டிக்கின்றனர். இதன் மூலம் ஒரு செய்தியை மக்கள் வெளிப்படுத்துகின்றனர். தமக்கான விடுதலை வேண்டும் அது இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்பதே ஆகும்.
அத்துடன் ஈழத்தில் நடந்த விடுதலைப் போராட்டம் வெறுமனே ஒரு அமைப்பு சார்ந்த விடயம் இல்லை அது ஒட்டுமொத்த மக்களின் விடுதலை வேட்கை என்பதை வெளிப்படுத்துகின்றது.
தியாக தீபம் திலீபனுக்கான நீதியை பாரததேசம் இனியும் அலட்சியம் செய்யாது தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வழங்க முன்வர வேண்டும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை பலவீனப்படுத்தும் சிங்கள ஆட்சியாளர்களின் செயற்பாடுகளுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.