பு.கஜிந்தன்
சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் செயற்பாட்டினை கடற்படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போதிலும் இந்திய மீனவர்களை கைது செய்யும் செயற்பாட்டில் கடற்படையினர் தயக்கம் காட்டுவதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இன்றைய கூட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறிப்பாக வடபகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது அதற்கு கடந்த 20 வருட காலமாக நான் முயற்சித்து வருகின்றேன். இந்த அத்துமீறலை கட்டுப்படுத்துவதற்காக பல பேச்சுவார்த்தைகளிலும் நான் கலந்து கொண்டேன்.ஆனால் அந்த பேச்சுவார்த்தைகளில் எந்த சாதகமான முடிவும் எட்டப்படவில்லை அதேபோல இலங்கை கடற்படையினரும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதில் பின்னடிப்பதாகவே நான் கருதுகின்றேன்.
நான் கடந்த சில நாட்களாக ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கின்றேன். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா சென்று இந்த விடயம் தொடர்பில் அங்குள்ள முதலமைச்சருடன் கலந்துரையாடி ஒரு உண்மையான நிலைமையினை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு.அதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பார்கள் என நம்புகின்றேன்.
எனவே எதிர்வரும் காலத்தில் இந்தியா சென்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது மீனவர்களின்உண்மையான நிலையினை இந்திய மீனவர்களுக்கு எடுத்துரைப்பதன் மூலம் இதற்கு ஒரு சாதகமான முடிவினை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.மீனவர்கள் எல்லை தாண்டும் பிரச்சனை, இலங்கையில் மாத்திரமல்ல இது ஏனைய உலக நாடுகளிலும் காணப்படுகின்றது இரு நாடுகளின் பிரச்சனை இரு நாடுகளுடனான பேச்சு வார்த்தை மூலமே தீர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.