குரு அரவிந்தன்
35 வது வருட நிறைவைக் கொண்டாடும் கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை 24-9-2023 ரொறன்ரோ சீனக்கலாச்சார மண்டபத்தில் குறிப்பிட்ட நேரப்படி மாலை 5:05 மணிக்கு ஆரம்பமாகிச் சிறப்பாக நடந்தேறியது.
திரு. பஞ்சன் பழனிநாதனின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றும் நிகழ்வு இடம் பெற்றது. சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த பழையமாணவர் திரு. மகாதேவன் வேலுப்பிள்ளையும் இதில் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து கனடா தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து, கல்லூரிக்கீதம் ஆகியன இடம் பெற்றன. சமீபத்தில் எம்மைவிட்டுப் பிரிந்த பாலஸ்கந்தன், சாந்திநாதன், சசிதரன் மற்றும் மகாஜனன்கள் நினைவுகூரப்பட்டனர். ஆசிரியர் எழுத்தாளர் மயிலங்கூடல் நடராஜன், சங்கீத ஆசிரியை திருமதி நாகம்மா, நாடக ஆசிரியர் கதிரேசம்பிள்ளை ஆகியோரது நினைவாக அரங்கம் இயல், இசை, நாடகம் என்று மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு நிகழ்வுகள் நடந்தன.
பல்லியம், ராகசங்கமம் இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து திரு. விஜயசீலன் தியாகராஜாவின் வரவேற்புரை இடம் பெற்றது. அடுத்து ‘வானவில்’ திரையிசை நடனத்தைத் தொடர்ந்து சங்கத் தலைவர் திரு. விஜயகுமார் தியாகராஜா அவர்களின் தலைமையுரை இடம் பெற்றது. தலைமையுரையைத் தொடர்ந்து ‘காலிங்க நர்த்தனம்’ நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. நடன நிகழ்ச்சிக்கு அடுத்ததாக விஜயசீலன் தியாகராஜாவின் நெறியாள்கையில் ‘ஒரு நாய்க்கதை’ என்ற நாடகம் இடம் பெற்றது.
நாடகத்தைத் தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட நடன ஆசிரியை திருமதி செந்தில்செல்வி சுரேஸ்வரன் அவர்களின் உரை இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து ‘நவீன பரதம்’ என்ற நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. நடன நிகழ்ச்சியைத் தொடர்ந்து ‘பொன்னரும் சங்கரும்’ என்ற வில்லுப்பாட்டு இடம் பெற்றது. இதில் பல இளையதலைமுறையினர் கலந்து சிறப்பித்தனர்.
அடுத்துக் கவிச்சரம் என்ற ‘கவியரங்க நிகழ்வு’ சத்தியமூர்த்தி மாணிக்கத்தின் தலைமையில் இடம் பெற்றது. அகணி சுரேஸ், பவானி தர்மகுலசிங்கம், இராஜ்மீரா கனி இராசையா, சயந்தன் பசுபதி ஆகியோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர். இதைத் தொடர்ந்து ‘காற்றினிலே வரும் கீதம்’ என்ற இசைக்கச்சேரி நிகழ்வு இடம் பெற்றது. ஈழத்து மெல்லிசை நிகழ்வில் சத்தியமூர்த்தி மாணிக்கம் ‘ஓ..வண்டிக்காரா’ என்ற நீலாவணனின் பாடலைப்பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். அடுத்து ஆரணி மகேஸ்வரனின் நடன அமைப்பில் ‘மாங்கல்யம் தந்து’ என்ற நடன நிகழ்ச்சி இடம் பெற்றது.
இதைத் தொடர்ந்து விஜயசீலன் தியாகராஜாவின் நெறியாள்கையில் ‘அஞ்சலி’ என்ற மேடை நாடகம் இடம் பெற்றது. நாடகத்தின் முதற்பகுதி காணெளி வடிவத்திலும், மிகுதிப்பகுதி மேடை நாடகமாகவும் இடம் பெற்றிருந்தது. மல்வேன் பூங்காவில் உள்ள அதிபர் பொ.கனகசபாதி நினைவுப்பூங்காவில் அவரை நினைவுகூரும் வகையில் முற்பகுதி அங்கு படமாக்கப்பட்டிருந்தது. சாந்திநாதனுடன் இணைந்து இது போன்ற பல நிகழ்வுகளில் பணியாற்றியதால், நெறியாளர் விஜயசீலன் மற்றும் குழுவினரின் கடின உழைப்பை இந்த மேடையில் காணமுடிந்தது, பங்குபற்றிச் சிறப்பாக இந்த விழா நிகழ்வைத் தந்த எல்லோருக்கும் எமது பாராட்டுக்கள். இறுதியாக உபசெயலாளர் ரதி சாம்பவலிங்கத்தின் நன்றியுரையுடன் முத்தமிழ் விழா இனிதே நிறைவு பெற்றது.