பு.கஜிந்தன்
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை ராஜனாமா செய்துள்ளதுடன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
குறித்த இந்த சம்பவம் பெரும் நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக முக்கிய தீர்மானத்தை எடுப்பதற்காக தமிழ் தேசியக் கட்சிகள் யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றிரவு ஒன்றுகூடினர்.
தமிழ் நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் காத்திரமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் தமிழர்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என பலராலும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுவரும் நிலையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அவர்களின் பதவி விலகல் குறித்து தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க போராட்டங்களை நடத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதன்படி எதிர்வரும் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மிக பெருமெடுப்பில் போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது .
யாழ்ப்பாண மருதனார் மடத்தில் இருந்து யாழ்ப்பாணம் நகர் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படவுள்ளது.
பின்னர் முல்லைத்தீவை முடக்கி போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதற்கான திகதி இதுவரை அறிவிக்கபபடவில்லை.
அத்துடன் ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது.
இந்தக்கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், த.சித்தார்த்தன், எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் க.பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், சட்டத்தரணி சிறீகாந்தா, வடக்குமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், மற்றும் வடக்கு மாகாணாசபை முன்னாள் உறுப்பினர்கள், மற்றும் தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.