நடராசா லோகதயாளன்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட நிர்வாகங்களில் இருந்து 133 உத்தியோகத்தர்கள் நீண்ட விடுமுறையிலும் 81 உத்தியோகத்தர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகம் தகவல் அறியும் சட்ட மூலத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் அதிக பொருளாதார நெருக்கடி காரணமாக அரச உத்தியோகத்தர்கள் விரும்பினால் 5 வருட விடுமுறை பெற்று வெளிநாடுகளிற்குச் செல்ல முடியும் என அரசு 2022 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சுற்று நிரூபம் மூலம் அறிவித்தல் வெளியிட்டது.
இந்த அறிவித்தலைப் பயன்படுத்தி பலர் நாட்டில் இருந்து வெளியேறும் நிலையில் வடக்கில உள்ள மாகாண மற்றும் மத்திய அரசிற்கு உட்பட்ட திணைக்களங்களில் பணியாற்றும் பலரும் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
இதில் வடக்கு மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் மட்டும் 6 தரங்களைச் சேரந்த ஊழியர்களில் இருந்து இதுவரை 81 அரச ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வடக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர் அலுவலக நிர்வாகம் வழங்கிய தகவல் அறியும் சட்டத்தின் கீழான பதிலில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய வடக்கு மாகாண சபையின் கீழ உள்ள இணைந்த சேவையில் உள்ள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையே இவ்வாறு காணப்படுகின்றது. இதன்பால் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 47 பேரும் முகாமைத்துவ உதவியாளர்கள் 21 பேரும், அலுவலக உத்தியோகத்தர்கள் 6 பேரும், சாரதிகள் 6 பேரும் வெளிநாடு செல்வதற்கான அனுமதிகளைப் பெற்று வெளியேறியுள்ளனர்.
இவ்வாறே தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் இருவருமாகவே இந்த 81 உத்தியோகத்தர்களும் வெளிநாடு செல்வதற்கான விடுமுறையைப் பெற்று வெளயேறியுள்ளனர். 81 உத்தியோகத்தர்கள் மட்டுமே வெளிநாட்டிற்கான அனுமதியை பெற்றபோதும் 133 உத்தியோகத்தர்கள் 5 வரு விடுமுறையினைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் அதே நேரம் மேலும் 10 உத்தியோகத்தர்கள் விடுமுறைகளிற்கு விண்ணப்பித்த அனுமதி நிராகரிக்கப்பட்டமையும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாகாண சபைக்கு உட்படாது மத்திய அரசின் கீழ் உள்ள மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்களில் இருந்தும் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதேநேரம் மாவட்டச் செயலகங்களிலில் இருந்து வெளிநாடு சென்றவரகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 14 உத்தியோகத்தர்களும் , வவுனியாவில் இருந்து 6 பேரும், மன்னார் மாவட்டத்தில் இருந்து 12 பேரும் பயணித்துள்ளதாக மாவட்டச் செயலகங்கள் தபவல் அறியும் சட்டத்தின் கீழ் உறுதி செய்துள்ளனர்.
இவ்வாறு செல்லும் உத்தியோகத்தர்கள் விரைவில் ஓய்வு பெறும் உத்தியோகத்தர்களோ அல்லது இயலாமை கொண்ட உத்தியோகத்தர்களோ கிடையாது இதனால் தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி போன்று அதிகாரிகள் நெருக்கடியும் எழும் நிலை ஏற்படும் என்றே கூறப்படுகின்றது.
இதற்கு ஓர் உதாரணமாக யாழப்பாணம் மாவட்டச் செயலகத்தின் பதிவாளர் பிரிவிலே காணி உறுதிகளின் பிரதி எடுப்பதில் இருந்த துரித சேவையான ஒரே நாளில் பிரதியை பெற்றுக்கொள்ளும் சேவை முழுமையாக இழுத்து மூடப்பட்டு சாதாரண சேவை மட்டுமே இடம்பெறுகின்றது. இந்த ஒரு நாள் சேவை மூடப்பட்டதற்கு துறைசார் அறிவுகொண்ட உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை காரணம் அல்ல, துறை சார் அனுபவம் கொண்ட சிற்றூழியர்கள் அதாவது அலுவலக உதவியாளர்கள் இன்மையே காரணம் என மாவட்டச் செயலகம் கூறுகின்றது.
சிற்றூழியர் இன்மை காரணமாகவே ஒரு மாவட்டத்தின் காணி உறுதி வழங்கும் செயலகம் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதானால் துறைசார் உத்தியோகத்தர்கள் அதுவும் நீண்ட அனுபவம் கொண்டேர் நாட்டை விட்டு வெளயேறுவதனால் ஏற்படும் அபாயத்திற்கான சங்கு தற்போதே ஊதப்படுகின்றது.
இதேநேரம் வைத்தியர்கள், பொறியிலாளர்களும் தொடர்ச்சியாக வெளயேறும் படலமும் நீண்டு செல்கின்றது. இருந்தபோதும் இதனை தடுக்கவோ அல்லது மாற்று வழி காணவோ வழியின்றி அரசும் திணறுகிறது.