நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் இந்நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாகிறது அங்கஜன் எம்.பி
தனக்கு ஏற்படுத்தப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக தனது பதவிவை துறப்பதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா அறிவித்துள்ளமையானது, நாட்டின் நீதித்துறை எத்தகைய சவால்களை சந்தித்துள்ளது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
29-09-2-23 அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் உள்ளதாவது,
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான நீதிமன்ற வழக்கின் தீர்ப்புகள் மற்றும் கள விஜயங்கள் மீதான அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் நீதிபதி அவர்களுக்கு விடுக்கப்பட்டு வந்துள்ளது இதனூடாக வெளிப்பட்டுள்ளது. சுயாதீனமாக செயற்பட வேண்டிய நீதிக்கட்டமைப்பை ஆட்டங்காணச் செய்த குறித்த அச்சுறுத்தல்வாதிகளை ஜனநாயக மாண்பற்றவர்களாகவே கருத வேண்டியுள்ளது.
குருந்தூர்மலை வழக்கு தொடர்பாக நீதிபதி சரவணராஜா அவர்கள் கடந்த 04.07.2023 அன்று குருந்தூர்மலைக்கு விஜயம் செய்திருந்தபோது தெரிவித்த கருத்துகளை சுட்டிக்காட்டி 07.07.2023 அன்றைய பாராளுமன்ற உரையிலும், தொடர்ந்து பொதுவிலும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு எதிராக, பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர கடுமையான அவதூறுகளை வெளிப்படுத்தியிருந்தார்.
பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நீதித்துறையை கேலிக்குள்ளாக்கிய ஒருவரது நிலைப்பாட்டுக்கு அமைவாக நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களமும் செயற்பட்டுள்ளமை அதிர்ச்சியை தருகிறது. குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு சட்டமா அதிபர் மட்டத்திலிருந்தும், அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளமையானது மோசமான அதிகார துஸ்பிரயோகமாக அமைகிறது.
அத்துடன் நீதிபதிக்கான பொலிஸ் பாதுகாப்பு அண்மையில் குறைக்கப்பட்டிருந்ததோடு, புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக தன்னைக் கண்காணித்து வந்திருந்ததாகவும் நீதிபதியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவற்றுக்கு மேலதிகமாக குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி தனக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் ( Court of Appeal) தனிப்பட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் கோப்பிடப்பட்டுள்ளதாகவும், இவற்றின் அடிப்படையில் தனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் மிகவும் நேசித்த தனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ. சரவணராஜா அறிவித்துள்ளார்.
இந்த பதவி துறத்தலானது, பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இலங்கையின் அனைத்து அரச நிறுவனங்களும் செயற்பட வேண்டும் என்ற கடும்போக்குவாதத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. அந்த கடும்போக்குவாதத்துக்கு நீதித்துறையும் விலக்கல்ல என்ற துர்ப்பாக்கிய நிலையை கண்டு நான் பெரிதும் கவலையடைந்துள்ளேன்.
தனிநபர்களாலும், அரச கட்டமைப்புகளாலும் வஞ்சிக்கப்படும் மக்கள் சட்டத்தை நம்பி, அதை நடைமுறைப்படுத்தும் நீதித்துறையை நாடுகிறார்கள். நீதித்துறை ஒன்றே சுயாதீனமாக செயற்பட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இத்தனை காலமும் இருந்து வந்துள்ளது.
ஆனால் நீதித்துறையையும் வளைத்துப்போடும் வகையில் சிலர் செயற்படும்போது அதை தடுக்காமல் நீதித்துறைக்கு காவலாக இருக்க வேண்டியவர்களே நீதித்துறையின் சுயாதீனத்தை கேள்விக்குட்படுத்தும் போது, நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சம் மக்களிடம் உருவாக்குகிறது.
ஏற்கனவே இந்நாட்டின் சட்டங்கள், வடக்கு – தெற்கு என்ற பேதங்களை பார்க்கின்றன என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் இந்த சம்பவமானது அக்குற்றச்சாட்டுகளை இன்னும் வலுச்சேர்த்துள்ளது.
வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல்கள் தொடர்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பணிப்புரைகளையே மீறிச் செயற்படக்கூடிய தரப்புகள் இந்நாட்டை ஆபத்தான பாதைக்கு இட்டுச் செல்கிறார்கள் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஜனநாயக மாண்புகள் தெரியாத, அவற்றை மதிக்காத அரசியல்வாதிகளாலும், நாட்டில் இன ஒற்றுமையை சிதைத்து அதில் இலாபம் பார்க்க நினைக்கும் தரப்புகளாலும் முன்னெடுக்கப்படும் இத்தகைய செயற்பாடுகளை தடுத்துநிறுத்தி, சுயாதீனமான சட்ட, நீதித்துறையின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணிகளை இச்சந்தர்ப்பத்திலாவது நாம் ஆரம்பிக்க வேண்டும் – என குறிப்பிட்டுள்ளார்.