மன்னார் நிருபர்
29.09.2023
மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் மீது தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களை மன்னார் மக்கள் முன் வைத்து வருகின்றனர்.
குறிப்பாக மன்னார் தீவக பகுதியில் நீண்ட நாட்களாக பல அபிவிருத்தி திட்டங்கள் கிடப்பில் இருப்பதாகவும் அது தொடர்பில் அபிவிருத்தி குழு தலைவர் என்ற வகையில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை எனவும் அதே நேரம் வடக்கில் உள்ள பல மாவட்டங்களில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன வள திணைக்களத்தின் கீழ் கையகப் படுத்தப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்ற போதும் மஸ்தான் அது தொடர்பில் அக்கறையீனமாக செயற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க கடந்த வருடம் மன்னார் நகர் பகுதியின் மையத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் பழடைந்து காணப்படும் பல நோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தை அகற்றி தருமாறு முன்னாள் அரசாங்க அதிபரினால் மஸ்தான் மற்றும் நகர திட்டமிடலுக்கு பொறுப்பான அமைச்சர் அர்ஜுன ரன துங்கவிடமும் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை .
குறித்த கட்டிடமும் மிகவும் ஆபத்தை ஏற்படுத்த கூடிய வகையில் அவ்வப்போது வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறான பல விடயங்களை முக்கியத்துவப்படுத்தி செயல்படுத்தாத மஸ்தான் அவர்கள் தற்போது முசலி வாக்காளர்களை மையப்படுத்தி மீலாத் நபி விழா ஏற்பாடு என்ற பெயரில் முசலி பகுதியின் மக்களின் அவல நிலையை மறைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் மன்னாரில் ஆபத்து நிறைந்த குறித்த கட்டிடத்தை அகற்ற நிதி ஒதுக்கீட்டை பெற்று கொடுக்க முடியாத மஸ்தான் சிலாவத்துறை மக்களை ஏமாற்றுவதற்காக சுற்றுவட்டம் ஒன்றை அமைப்பதற்கு 84 மில்லியன் ரூபாய் ஒதுக்கி உள்ளதாக முகநூலில் பதிவிட்டுள்ளார்.
முசலி மற்றும் மன்னாரில் செய்ய வேண்டிய பல முன்னுரிமையான செயற்பாடுகளில் தொடர்ச்சியாக கவனயீனமாக செயற்படுவதாகவும் மக்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.