பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினரும் (2023-2024) 1997 – 2004 க.பொ.த உ/த பழைய மாணவனுமான, அமரர் வைத்தியகலாநிதி வேலாயுதம் சாரங்கன் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது பெற்றோரின் நிதிப்பங்களிப்புடன் பழைய மாணவர் சங்கத்தினால் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சுகாதார மேம்பாட்டு அலகு திறப்பு விழா நிகழ்வு சாரங்கனின் பிறந்த தினமான 2023 புரட்டாதி 30 ஆம் திகதி காலை 8:30 மணி அளவில் நடைபெற்றது.
கல்லூரி ஞானவைரவர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுடன், கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் வைத்திய கலாநிதி கோ. றஜீவ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமரர் வைத்தியகலாநிதி வேலாயுதம் சாரங்கனின் பெற்றோர், கல்லூரி பிரதிஅதிபர் எஸ். பரமேஸ்வரன், வைத்திய கலாநிதி சி. சிவதாஸ், மாணவர் சங்க தலைவர் வைத்திய கலாநிதி கோ. றஜீவ் ஆகியோர் சுகாதார மேம்பாட்டு அலகினைத் திறந்துவைத்து நினைவுக் கல்லினை திரை நீக்கம் செய்து வைத்தனர்.
சாரங்கனின் திருஉருவப்படுத்திற்கு சாரங்கனின் தாயார் விளக்கேற்றி மலர்மாலை அணிவித்தார். இந் நிகழ்வில் சாரங்கனின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், பெற்றோர், உறவினர்கள், கல்லூரி பிரதி அதிபர், சுகாதார அலகு பொறுப்பாசிரியர், ஆசிரியர் சங்க தலைவர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.