முல்லைத்தீவு, அக்.2-
உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் இருந்து தமிழ் நீதிபதி தப்பி ஓடினார்.
இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக பதவி வகித்தவர் சரவணராஜா. இலங்கைத் தமிழரான இவர் மிகவும் சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை, விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் தீலிபன் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்தார்.
சமீபத்தில் 42 ஆண்டுகளாக நடந்து வரும் மதப்பிரச்சினை சார்ந்த குருந்தூர்மலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்புக்குப் பிறகு அவருக்கு பல வகைகளில் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைக்குமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. மேலும் மிரட்டல்களும் வந்தன.
இதையடுத்து நீதிபதி சரவணராஜா தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், மன அழுத்தம் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதி பொறுப்புகள் அனைத்தையும் ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார். தான் விரும்பி செய்த நீதிபதி பதவியை விட்டு விலகுவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை அவர் நிதிச்சேவை ஆணைக்குழு செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து நீதிபதி சரவணராஜா இலங்கையை விட்டு வெளியேறி தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக உயிருக்கு பயந்து நீதிபதி ஒருவர் நாட்டை விட்டு ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.