மன்னார் நிருபர்
10.03.2023
நாட்டில் நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் சவால்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் அதே நேரம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கோரியும் செவ்வாய்க்கிழமை மன்னார் சிவில் சமூக அரசியல் பிரதிநிதிகள் கவனயீர்ப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
மன்னார் நகர பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய சிவில் சமூக மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இலங்கையில் தொடர்ச்சியாக சட்டத்துறை மற்றும் நீதித்துறை எதிர்கொண்டு வரும் அழுத்தங்கள் மற்றும் சவால்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அத்துடன் அரசாங்கம் ஒவ்வொரு பிரச்சனைக்கும் அமைக்கும் விசாரணைக் குழுக்களில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் சர்வதேச விசாரணை ஒன்றே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் அதே நேரம் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும் விரைவில் மன்னாரில் பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.
குறித்த போராட்டத்தில் மெசிடோ நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ, மன்னார் நகரசபை முன்னாள் தலைவர் அன்ரனி டேவிட்சன், மன்னார் நகர சபை முன்னாள் உப தலைவர் ஜான்சன், சிவில் சமூக அமைப்பினர்,அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் முன்னாள் நகரசபை,பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்