பு.கஜிந்தன்
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என்ற தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு தமிழ் மக்களுக்கான உரிமைகளுக்கா அல்லது ரணில் விக்ரமசிங்கவிடம் பெட்டிகளை மாற்றிக் கொள்வதற்காக என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இப்போது ஊடகங்கள் வாயிலாக தெரிய வருகின்றது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்துவோம் என்கின்ற கருத்து இன்றைக்கு பேசப்படும் பொருளாக மாறி இருக்கின்றது,
ஆனால் ஒன்றை நாங்கள் இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும் தமிழ் வேட்பாளர் அல்லது தமிழ் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. அதன் மூலமாக இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களுடைய உரிமைகள் தொடர்பான குரல் எழுப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கின்றது, ஆனால் இந்த தேர்தலில் இருப்பது எங்களுக்கு தெரிகின்றது வேறு எதுவும் அல்ல, இப்போது இவ்வாறான அறிவிப்பின் மூலமாக ரணில் விக்கிரமசிங்க நினைத்துக் கொண்டிருக்கின்றார் தமிழ் மக்களுடைய வாக்கு வேற யாருக்கும் அல்ல ரணில் விக்ரமசிங்கவுக்கே கிடைக்கும் என்று ஆனால் இன்று மக்களுக்கு நன்றாக தெரியும் மக்கள் அனைவரும் குறிப்பிடுகின்றார்கள் ரணில் விக்ரமசிங்க என்கின்ற நரிக்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்று கூறுகின்றார்கள்.
அதன் அடிப்படையை பார்க்கின்ற போது தமிழ் கட்சியினுடைய இவ்வாறான செயற்பாடு என்பது ஒரு புறத்தில் தமிழ் மக்களுக்கான உரிமைகளுக்கா அல்லது ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து ஏதாவது பெட்டிகளை மாற்றிக் கொள்வதற்காக என்கின்ற கேள்வி ஒன்று எழுகின்றது,
அதனால் நாங்கள் தேசிய மக்கள் சக்தி என்கின்ற வகையில் மிகவும் தெளிவாக சொல்லுகின்றோம் அதாவது தமிழ் கட்சிகள் இந்த வேளையில் மிகவும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது, 75 வருடங்களாக இந்த நாட்டை ஆண்டவர்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கவில்லை, தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை தங்களுடைய பகடைக்காய்களாக பயன்படுத்தி இருக்கின்றார்கள். தமிழ் மக்களை அதாவது அங்கு செல்லுகின்ற இங்கு செல்லுகின்ற நிலமைக்கு தள்ளிய பாவித்தனமான நடவடிக்கையை எடுத்தவர்கள் வேறு யாரும் அல்ல இந்த ரணில் ராஜபக்சக்களின் ஆட்சியாகும்.
மக்கள் விடுதலை முன்னணி என்கின்ற வகையிலும், தேசிய மக்கள் சக்தி என்கின்ற வகையிலும் நாங்கள் மிகவும் தெளிவாக சொல்லுகின்றோம் இம்முறை நடைபெறுகின்ற தேர்தலிலே, விசேடமாக ஜனாதிபதி தேர்தலிலே இனிமேலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ, அல்லது ராஜபக்சகளுக்கோ, அல்லது அங்கிருந்து வருகின்ற எந்த ஒரு வேட்பாளருக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஏனென்றால் இவர்களாலேயே தமிழ் மக்களுடைய நிலையை இந்த நிலைமைக்கு உள்ளாக்கிய பாவிகள் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். அந்த நிலையை உணர்ந்து கொண்டு தமிழ் கட்சிகள் தங்களுடைய அரசியல் நகர்வுகளை மக்களுக்கு சாதகமானதாக முன்னெடுக்க வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.