நடராசா லோகதயளன்
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் காரணமாக அதிகம் பாதித்த வடக்கு மாகாண விவசாயிகளின் நன்மை கருதி 2011ஆம் ஆண்டு இந்தியா வழங்கிய 500 உழவு இயந்திரங்களும் இரும்பாக காட்சி அளிக்கின்றன.
போரின் பின் வடக்கு மக்களை மீட்டெடுக்க என்னும் செயற் திட்டங்களின் கீழ் வடக்கின் 5 மாவட்டத்திற்கும் 500 உழவு இயந்திரங்களை இந்தியா வழங்க முன்வந்தபோது அதனை விவசாயிகளிடம் அல்லது வவிசாய அமைப்புக்களிடம் நேரடியாக வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாணாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இருந்தபோதும் அரசோ அதில் தமது பிடி இருக்க வேண்டும் எனக கருதி கமநல சேவை நிலையங்களிற்கு வழங்கி விவசாயிகளிற்கு குறைந்த விலையில் சேவையை வழங்குவதாக அப்போதைய வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி வழங்கிய உத்தரவின் பெயரில் அவை கமநல சேவை நிலையங்களிற்கே வழங்கப்பட்டன.
இதில் 5 மாவட்டத்திற்கும் வழங்கிய 500 உழவு இயந்திரங்களுமே இன்று அநாதரவாகவும் பாவிப்பு இன்றியும் உள்ளதோடு பராமரிப்பும் இன்றியே உள்ளது.நாட்டில் இன்று 35 லடசம் ரூபா வரையில் உழவு இயந்திரம் விற்பனையாகும் நிலையில் இவையோ வெறும் 8 லட்சம்,10 லட்சம் ரூபா பெறுமதியிலேயே காட்சியளிக்கின்றன.
இதில் கிளிநொச்சி மாவட்ட கமநல சேவைத் திணைக்களத்தின் கீழ உள்ள 100 உழவு இயந்திரங்களில் 30 உழவு இயந்திரங்கள் மட்டுமே இயங்குவது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்கிய பதிலில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு இந்திய அரசின் அன்பளிப்பில் வடக்கிற்கு 500 உழவு இந்திரங்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட 500 உழவு இயந்திரங்களில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 100:உழவு இயந்திரங்கள் வழங்கி வைக்க்பட்டன.
இவ்வாறு வழங்கப்பட்ட நூறு உழவு இயந்திரங்களும் மாவட்டத்தின் 10 கமநல சேவை நிலையங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இவை விவசாயிகளின் வயல் உழவிற்கு நியாயமான கட்டணத்தில் வழங்கும. ஏற்பாடு செய்யப்பட்டபோதும் அவை நான்கு ஆண்டுகளிற்கும் உட்பட்ட காலத்தில் பழுதடைந்தபோதும் எந்தவொரு உழவு இயந்திரங்களும் திருத்தப்பணியின்றியே கமநல சேவை நிலையங்களில் தற்போதும் தரித்து நிற்கின்றன.
இவ்வாறு தரித்து நிற்கும் 100 உழவு இயந்திரங்களினதும் இன்றைய சந்தைப் பெறுமதியாக 6 கோடியே 77 லட்சம் ரூபா மட்டுமே அரச திணைக்களத்தால் 2023ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 23 ஆம் திகதியில் கணிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் இந்த 100 உழவு இயந்திரங்களும் திருத்தம் செய்வதற்கு உழவு இயந்திரங்களின் பெறுமதியின் 150 வீதமான 9 கோடியே 6 லட்சம் ரூபா தேவை எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு காணப்படும் உழவு இயந்திரங்களில் 30 உழவு இயந்திரங்களை திருத்தம் செய்வதற்கும் 70 உழவு இயந்திரங்களை ஏலத்தில் விற்பனை செய்யவும் மாவட்ட கமநல ஆணையாளர் அலுவலகம் விவசாய அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப.பியுள்ளார்.
இதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 100 உழவு இயந்திரங்களில் 70 உழவு இயந்திரங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு நிதி அரச திறைசேரியின் வருமானத்திற்குச் செல்லவுள்ளது.
இது தொடர்பில் கிளிநொச்சி இரணைமடு விவசாயிகள் சம்மேளணச் செயலாளர் மு.சிவமோகன் கருத்து தெரிவிக்கையில்,
இவ்வாறான நிலை ஏற்படும் எனபதனை அன்றே கணித்தே நாம் அதனை விவசாயிகளிடம் நேரடியாகத் தருமாறு கோருனோம். தற்போதுதன்னும் அவற்றை ஒவ்வொரு விவசாய அமைப்பிற்கு அல்லது சிறந்த விவசாயிகளிற்கு அல்லது வறுமைப்பட்ட விவசாயிகளிற்கு இலவசமாக வழங்கலாம். ஏனெனில் அவை விவசாயிகளிற்காக இந்திய அரசின் அனபளிப்பே அன்றி அரசிற்கான அன்பளிப்பு அல்ல என்றார்.
இதேநேரம் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இவ்வளவு தரவுகள் பேணப்படுகின்றபோதும் ஏனைய மாவட்டங்களிடம் இவ்வாறான தரவுகளும் காணப்படவில்லை.