சமூக ஊடகங்கள் வாயிலாக போலியான செய்திகளைப் பரப்புதல்,அவதூறு பரப்புதல்,தனி மனிதர்களை இலக்கு வைத்துத தாக்குதல் நடத்துதல், அகௌரவத்தை ஏற்படுத்துதல்,வெறுப்பு பேச்சுக்களைப் பேசுதல் உள்ளிட்ட செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இச்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை அவசியமாக உள்ளது. இதன்மூலம் சமூக ஊடகங்களையும் எதிர்கால சமூகத்தினையும் பாதுகாக்க முடியும் என்று அரசாங்கம் கருதுகின்றது. அந்த அடிப்படையில்தான் நிகழ்நிலை காப்புச் சட்ட மூலம் வரையப்பட்டுள்ளது என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறியுள்ளார். நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் அண்மையில் அரச வருத்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாகவே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஆனால் அமைச்சர் கூறுவதில் உள்ள அடிப்படை முரண் என்னவென்றால், நாட்டின் அதி உயர் சட்டமன்றம் ஆகிய நாடாளுமன்றம் தமிழ் மக்களுக்கு எதிரான பொறுப்பு பேச்சைப் பாதுகாக்கும் ஒரு களமாக காணப்படுகின்றது என்பதுதான். அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தன் பதவியைத் துறந்து விட்டு நாட்டை விட்டுச் சென்று விட்டார். அவரை நாடாளுமன்றத்தில் வைத்து சரத் வீரசேகர இரண்டு தடவைகள் கீழ்த்தரமான வார்த்தைகளால் அவமதித்திருக்கிறார். நாடாளுமன்ற சிறப்புரிமை என்ற மறைவில் நின்றபடி சரத் வீரசேகர அவ்வாறு கூறினார்.அவர் நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்து அவ்வாறு கூறட்டும் பார்க்கலாம் என்று சட்டத்தரணிகள் சங்கம் சில வாரங்களுக்கு முன் சவால் விட்டது.
நாடாளுமன்ற சிறப்புரிமையை ஒரு கவசமாகப் பயன்படுத்தி வெறுப்புப் பேச்சுக்களை உமிழ்வது சரத் வீரசேகர மட்டுமல்ல, கடந்த பல தசாப்தங்களாக இலங்கை நாடாளுமன்றம் எனப்படுவது தமிழ் மக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களை கக்கும் ஓரிடமாகத்தான் காணப்படுகிறது. வெறுப்புப் பேச்சு தொடர்பாக ஐநா நிபுணர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்… “யூத இனப்படுகொலை எனப்படுவது நச்சு வாயு கிடங்குகளில் இருந்து தொடங்கவில்லை. அது வெறுப்புப் பேச்சுகளில் இருந்தே தொடங்கியது” என்று.
யூத இனப்படுகொலை மட்டுமல்ல மியான்மர், ருவண்டா போன்ற இடங்களில் நிகழும் இனப்படுகொலைகள் வெறுப்புப் பேச்சுக்களால் தூண்டப்படுகின்றன என்று ஐநா சுட்டிக்காட்டுகின்றது.
வெறுப்புப் பேச்சுக்களை இலகுவாகப் பரப்பக்கூடிய ஒரு களமாக சமூக ஊடகங்கள் காணப்படுகின்றன என்பது உண்மை. ரோகியங்கா முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலையில் ஐநா முகநூலை குற்றம் சாட்டியதை இங்கு சுட்டிக் காட்டலாம்.
சமூக ஊடகளுக்கு இரண்டு முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவது, தகவல் உடனடியாக பகிரப்படும். இரண்டாவது, சாதாரண மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு அதிகரித்த வாய்ப்புகளை அவை வழங்குகின்றன.
ஆனால் சாதாரண மக்கள் அவ்வாறு தங்களுக்கு தோன்றியதை எல்லாம் பகிரங்கமாக வெளிப்படுத்தும் ஒரு போக்கினால் நிபுணர்கள் சமூக ஊடகங்களை விட்டு வெளித்தள்ளப்படுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. எனது நண்பர் ஒருவர் சொல்லுவார்…. தனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றிக் கருத்துக்கூறும் துணிச்சலை முகநூல் வழங்குகின்றது என்று. உண்மை. பாரம்பரிய ஊடகங்களைப் பொறுத்தவரை கருத்தைத் தெரிவிப்பதற்கு ஒரு முதிர்ச்சி வேண்டும்; தகைமை வேண்டும். ஒரு காலம் பொதுவெளியில் கருத்தைத் தெரிவிக்கும்போது அவைக்கூச்சம் இருந்தது; அவையடக்கம் இருந்தது. ஆனால் சமூக சமூக ஊடகங்களில் அவை அரிதாகி விட்டன. இணையத் தொடுப்பு இருந்தால் போதும், ஒரு பேக் ஐடியை உருவாக்கிவிட்டு யாரும் எந்த மொட்டைக் கடிதத்தையும் சமூக ஊடகங்களில் உடனடியாகப் பிரசுரிக்கலாம் என்ற நிலைமை அதிகரித்துவிட்டது. இதனால் அபிப்பிராயங்கள் உடனடியாகவும் அதிகரித்த அளவிலும் பகிரப்படும் வாய்ப்புகள் அதிகரித்துவிட்டன.
சாதாரண ஜனங்கள் எல்லா விடயங்களிலும் அறிவுபூர்வமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் சிந்திப்பார்கள் என்று இல்லை. அவர்கள், தாம் சார்ந்த இனம், மதம், மொழி, பிரதேசம், பால் போன்ற உணர்வுகளால் உந்தப்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். இவ்வாறு அறிவு சாராத முதிர்ச்சியற்ற கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகையில் அவை பல சமயங்களில் இன, மத,நிற,மொழி,பிரதேச,பால் வேறுபாடுகளை தூண்டத்தக்கவைகளாக காணப்படுகின்றன. கும்பல் மனோநிலை என்பது அநேகமாக புத்திசாலித்தனமானதாகவோ அல்லது அறிவுபூர்வமானதாகவோ நிதானமானதாகவோ இருப்பது குறைவு. இதனால் சாதாரண ஜனங்கள் கும்பல் மனநிலையோடு பகிரும் கருத்துக்கள் இன, மத, மொழி, நிற, பிரதேச, பால் வேறுபாடுகளைத் தூண்டுபவைகளாக அமைந்து விடுவதுண்டு.மியான்மரில் ஆபிரிக்காவில் அவ்வாறு சமூகஊடகங்கள் இன முரண்பாடுகளை, வெறுப்பைத் தூண்டியதாக ஐநா குற்றம் சாட்டுகின்றது
பல ஆண்டுகளுக்கு முன் அம்பாறையில் இருந்து தொடங்கி கண்டி வரையிலும் பரவிய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின்போது அரசாங்கம் சமூக வலைத்தளங்களை முடக்கியதை இங்கு சுட்டிக்காட்டலாம். மேலும் வலதுசாரிப் போக்கு அதிகமுடைய தலைவர்கள் தமது சமூக ஊடகங்களுக்கு ஊடாக இன, மதமொழி,நிற பிரதேச உணர்வுகளைத் தூண்டி, அவற்றை வாக்குகளாக அறுவடை செய்கிறார்கள் என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டிரம்ப் தன்னுடைய ருவிட்டர் தளத்தை அவ்வாறு பயன்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.
இவ்வாறு சமூக ஊடகங்கள் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தூண்டும் கருத்துக்களையும் வலதுசாரி கருத்துக்களையும் உடனடியாகவும் அதிகமாகவும் பகிரும் வாய்ப்புகளைக் கொண்டிருப்பதனால்,அவை வெறுப்பு பேச்சுக்களை அதிகமாக பகிர்கின்றன என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
ஆனால் இதை இவ்வாறு எழுதுவதன்மூலம் இக்கட்டுரையானது அரசாங்கத்தின் உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டத்தை ஆதரிப்பதாக வாசகர்கள் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. சமூக ஊடகங்களை நிதானத்திற்கு கொண்டு வருவது என்பது ஒரு விதத்தில் சட்ட விவகாரம்தான். ஆனால் அதைவிட ஆழமான அர்த்தத்தில் அது பண்பாட்டு ரீதியிலானது. அதை சட்டரீதியாக அணுக முற்பட்டால் ஒரு கட்டத்தில் அது கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்குவதில் போய் முடியும். எனவே இதுவிடயத்தில் ஆழமான கலந்துரையாடல்கள் தேவை.அவற்றைக் கட்டுப்படுத்தும் பொழுது அதை ஒரு சட்ட விவகாரமாக மட்டும் பார்க்காமல், பண்பாட்டு விவகாரமாகவும் பார்க்க வேண்டும்.தொடுதிரைக்கும் விரலுக்கும் இடையில் இருப்பது வெறுமனே சட்ட வெளி மட்டுமல்ல, அது பொறுப்புக்கூறப் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு பண்பாட்டு வெளியாகவும் இருக்க வேண்டும். இந்த விளக்கத்தின் பின்னணியில் இனி உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்ட வரைபைப் பார்க்கலாம்.
“நிகழ்நிலை காப்பு ஆணைக் குழுவை ஸ்தாபிப்பதற்கும்: இலங்கையில் நிகழ்வு பற்றிய குறித்த சில கூற்றுக்களின் நிகழ்நிலை தொடர்பாடலைத் தடை செய்வதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; தடை செய்யப்பட்ட நோக்கங்களுக்காக நிகழ்நிலைக் கணக்குகள் மட்டும் மெய்யுறுதிப் படுத்தப்படாத நிகழ்நிலை கணக்குகளின் பயன்பாட்டை தடுப்பதற்கும்; இலங்கையில் தடை செய்யப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் நிகழ்நிலை அமைவிடங்களை அடையாளம் கண்டு வெளிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும்; நிகழ்வு பற்றிய பொய்யான கூற்றுக்களின் தொடர்பாடலுக்கு நிதியளித்தல் மற்றும் வேறு ஆதரவை ஒடுக்குவதற்கும் அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்……”என்று வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் நிகழ்நிலை காப்பு ஆணைக் குழு ஒன்றை ஜனாதிபதி நியமிப்பார். அதில் ஐந்து பேர் இருப்பார்கள். அந்தக் குழு சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்படும் விடையங்களைத் தவறானவை என்று கருதினால் அப்பதிவுகளை பிரசுரித்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும். அணைக்குழுவின் தீர்ப்புக்கு எதிராக, அல்லது அறிவுறுத்தல்களுக்கு எதிராக, இணைய சேவை வழங்குனர்களோ அல்லது பயனாளிகளோ நீதிமன்றத்தை நாட முடியாது.
இணையத் தளங்களின செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு அல்லது நிறுத்துமாறு இணைய சேவை வழங்குனர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கவும் இணைய சேவை வழங்குனர்களுக்கு எதிராகவோ அல்லது சமூக ஊடகங்களுக்கு எதிராகவோ நடவடிக்கை எடுக்கவும் மேற்படி ஆணைக் குழுவுக்கு அதிகாரம் உண்டு.
எனவே, இச்சட்டமூலமானது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பறிக்கவும் மாற்றுக் கருத்துக்குரியவர்களை ஒடுக்கவும் பயன்படுத்தப்படும் அபாயம் காணப்படுவதாக சுதந்திர ஊடக இயக்கம் கருத்து தெரிவித்துள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆணைக்குழுவை ஒரு சுயாதீன ஆணைக் குழு என்று அழைப்பது நியாயமானதா என்றும் சுதந்திர ஊடக இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களுக்கு பரந்த விளக்கங்கள் கொடுக்கப்படலாம் என்பதால், அதைப் பயன்படுத்தி மாற்றுக் கருத்துக்களை முடக்குவதற்கு ஆணைக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்படும். மேலும் சமூக ஊடக வசதிகளை வழங்கும் இணையத் தளங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தேச சட்டமூலம் கூறுகின்றது.இதனால் பதிவு செய்யப்படாத சமூக ஊடகத் தளங்களை இந்நாட்டு மக்கள் இழக்கும் ஆபாயம் காணப்படுகிறது என்றும் சுதந்திர ஊடக இயக்கம் கருத்து தெரிவித்துள்ளது
மேற்கண்டவற்றை தொகுத்துப் பார்த்தால், ஒன்று தெளிவாகத் தெரிகிறது.உத்தேச சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்காக அரசாங்கம் சேவை வழங்குனர்களையும் பயனர்களையும் சட்டரீதியாகத் தண்டிக்க முடியும். இது சமூக வலைத்தளங்கள் மற்றும் கைபேசிச் செயலிகள் மூலம் பகிரப்படும் தகவல்களை பெருமளவுக்கு கட்டுப்படுத்தும். அது அதன் தர்க்கபூர்வ விளைவாக கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும்.
எனவே அண்மையில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்புச் சட்டம் ஆகிய இரண்டும் அவற்றின் இறுதி விளைவுகளைப் பொருத்தவரை கருத்து சுதந்திரத்தையும் போராடும் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தக் கூடியவை. அதாவது அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எழுச்சிகளை கட்டுப்படுத்தும் நோக்கம் இந்த சட்டமூலங்களில் உண்டு.
அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு மேற்கு நாடுகள் இந்தியா சீனா போன்றவற்றிலும் உலக வங்கி, பன்னாட்டு நாணய நீதியும் போன்றவற்றிலும் தங்கியிருக்கும் ஒரு காலகட்டத்தில், இச்சட்டமூலங்கள் குறித்து நாட்டில் விவாதிக்கப்படுகிறது. இவ்வாறு உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியும், மேற்கு நாடுகள் ஜப்பான் போன்றவற்றில் தங்கியிருக்கும் ஒரு காலகட்டத்தில், இது போன்ற சட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்த விளைகிறது என்றால், அதன் பொருள் என்ன?
அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். ஜனாதிபதி அவருடைய அரசியல் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பைக் கைவிடத் தயாரில்லை. எனவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இடையில் நாட்டை யாரும் குழப்பி விடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் இது போன்ற சட்டங்களை கொண்டு வருகிறார்.
கடந்த ஆண்டு நிகழ்ந்த மக்கள் எழுச்சிகளை பெருமளவுக்கு ஒருங்கிணைத்தது சமூக வலைத்தளங்களை என்று நம்பப்படுகிறது. மீண்டும் அப்படி நடக்கக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு தான் நிகழ்நிலை காப்புச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. அதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்கள் பரவுவதை தடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம். மாறாக, வெறுப்பு பேச்சை தடுப்பது அல்ல. வெறுப்பு பேச்சைத் தடுப்பது என்றால் அதை முதலில் நாடாளுமன்றத்தில் இருந்து தொடங்க வேண்டும். எந்த நாடாளுமன்றம் வெறுப்பு பேச்சுக்கு எதிரான நிகழ்நிலை காப்புச் சட்டத்தை நிறைவேற்றப் போகின்றதோ,அதே நாடாளுமன்றத்தில் முதலில் வெறுப்பு பேச்சை நிறுத்த வேண்டும்.