தமிழின் அன்றைய முன்னணி நட்சத்திரங்கள் சிவாஜி கணேசன், எம்ஜி ராமச்சந்திரன் ஆகியோரது படங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் இந்தி பேசும் பகுதிகளில் ஓடியிருக்கின்றன. கடல் கடந்து இலங்கையிலும் சாதனைகள் படைத்துள்ளன. நடிகர் திலகத்தின் பைலட் இலங்கையில் ஆயிரம் தினங்கள் ஓடியது. அதுபோல் கமலின் குரு திரைப்படம். தென்னாப்பிரிக்காவில் சிவாஜி கணேசனின் படம் வெளியாகியிருக்கிறது. நடிகர் திலகத்தின் இன்னொரு சாதனை, ஒரே நாளில் இரு படங்கள் வெளியாகி, இரண்டும் வெற்றி பெற்றது. இப்படி ஒன்றல்ல இரண்டல்ல… பதினேழு முறை ஒரே நாளில் இரு படங்கள் வெளியாகியிருக்கின்றன.
இலங்கையில் தமிழ்ப் படம் இங்கு வெளியாகும் அதேநாளில் வெளியாகும், அல்லது சில வாரங்கள் தள்ளி வெளியாகும். 1979 ஜனவரியில் நடிகர் திலகம் நடித்த அந்தமான் காதலியுடன், தீபம் படம் வெளியானது. அந்த வருடம் ஜனவரி 27 நடிகர் திலகத்தின் திரிசூலம் வெளியாகி பம்பர்ஹிட்டானது. 1973 இல் வெளியான எம்ஜி ராமச்சந்திரனின் உலகம் சுற்றும் வாலிபன் வெளியாகி அதுவரை வெளியான அனைத்து தமிழ்ப் படங்களின் வசூலையும் முறியடித்து வெற்றி பெற்றது. இந்நிலையில், 1979 வெளியான திரிசூலம் உலகம் சுற்றும் வாலிபனின் வசூல் சாதனையை முறியடித்து வெற்றி பெற்றது.
அதே வருடம் திரிசூலத்துக்கு முன்பாக ஜனவரி 9 ஆம் தேதி இலங்கையில் நடிகர் திலகத்தின் அந்தமான் காதலி, தீபம் இரண்டு படங்களையும் ஒரே நாளில் வெளியிட்டனர். அந்தமான் காதலியை முக்தா ராமசாமி தயாரிக்க, அவரது தம்பி முக்தா சீனிவாசன் படத்தை இயக்கியிருந்தார். நடிகர் திலகம் பிரபு என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உடன் சுஜாதா, சந்திரமோகன், மனோரமா, தேங்காய் சீனிவாசன், கவிதா, சுகுமாரி, சீமா, சிஐடி சகுந்தலா, கத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் நடித்தனர். எம்எஸ்வி இசையில் கண்ணதாசன் எழுதிய பணமென்னடா பணம் பணம்…, நினைவாலே சிலை செய்து…, அந்தமானை பாருங்கள் அழகு… ஆகிய பாடல்கள் வெற்றிபெற்றன. அந்தமானில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படமான இது தமிழகத்தில் 100 நாள்களை கடந்து ஓடியது.