ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரேநாளில் 3 தங்கம் உட்பட 12 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தி உள்ளது.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை கைப்பற்றினர். இதில் நீரஜ் சோப்ரா 88 புள்ளி எட்டு எட்டு மீட்டர் தூரம் எறிந்து தங்கமும், 87 புள்ளி ஐந்து நான்கு மீட்டர் தூரம் எறிந்து கிஷோர் ஜனா வெள்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.
ஆடவர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டி சென்றது.
இதேபோல் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனைகள் வித்யா, ஐஸ்வர்யா, பிராச்சி, சுபா ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினர்
கலப்பு இரட்டையர் பிரிவு வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் பிரவீன் ஓஜாஸ், ஜோதி சுரேகா இணை 158 – 159 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்..
ஆடவர் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அவினாஷ் சேபிள் வெள்ளி வென்றார்.
மகளிர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹர்மிலான் பெய்ன்ஸ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மகளிர் குத்துச்சண்டை 66 முதல் 75 கிலோ பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் லவ்லினா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதேபோல் மகளிர் குத்துச்சண்டை 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா வெண்கலத்தை கைப்பற்றினார்.
ஆடவர் மல்யுத்த போட்டியின் 87 கிலோ எடைப்பிரிவில் 3 ஆம் இடம்பிடித்த சுனில்குமார் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அனாகத் சிங், அபய் சிங் இணை வெண்கலப் பதக்கம் வென்றது.
இதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவு 35 கிலோ மீட்டர் நடைப்போட்டியில் ராம், மஞ்சு ராணி இணை வெண்கலம் வென்றது.