ரணிலுக்கு பிள்ளை இருந்தால் தாயின் வலி தெரிந்திருக்கும் – மட்டக்களப்பு மாவட்ட தலைவி தாக்கப்பட்டமையை கண்டிக்கிறோம்
வடக்கு கிழக்கு வலிந்து காணமலாக்கப்பட்ட சங்கத்தின் தலைவி யோகராசா கனக ரஞ்சனி தெரிவிப்பு
ரணிலுக்கு பிள்ளை இருந்தால் தாயின் வலி தெரிந்திருக்கும் – மட்டக்களப்பு மாவட்ட தலைவி தாக்கப்பட்டமையை கண்டிக்கிறோம்.
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியமை ஒரு மறைமுகமான நாடு கடத்தலாகும்.
பிள்ளைகளை தொலைத்து விட்டு நீதி கேட்டுப் போராடிவரும் தாயின் வலி தெரியாத சிறிலங்கா காவல் துறை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி மீது தமது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டமையை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு கிழக்கு வலிந்து காணமலாக்கப்பட்ட சங்கத்தின் தலைவி யோகராசா கனக ரஞ்சனி தெரிவித்தார்.
திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இறுதி யுத்தத்தில் சரணடைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளை தேடி அம்மார் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முந்தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் மேச்சல் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக எமது மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பங்கெடுத்தனர்.
இந்தப் போராட்டம் இடம்பெற்று கொண்டிருந்தபோது நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அவரிடம் தமிழர் நிலப் பகுதிகளால் மறைக்கப்படுவதற்கு நீதி கேட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கேட்டும் ஜனநாயக வழியில் போராடிய மக்களை காடை சட்டங்களை பயன்படுத்தும் சிறிலங்கா பொலிசார் முர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.
நாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமிடம் ஒன்றை கேட்க விரும்புகிறோம் உங்களுக்கும் பிள்ளை இருந்திருந்தால் ஒரு தாயின் வலி எவ்வாறு இருந்திருக்கும் என்பதை அறிந்திருப்பீர்கள்.
ஏனெனில் ஜனநாயக வழியில் நீதி கேட்டு போராடிய எமது மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி அமலதாஸ் அமலநாயகி பலத்த ஆடி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த அம்மாவின் உயிருக்கு ஆபத்து வரும் ஆனால் அத்தனை பொறுப்புகளையும் இந்த அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இலங்கையில் ஜனநாயக நீதியில் போராடுபவர்களை காட்டுமிராண்டித்தனமாக அடக்கியமை தொடர்பில் சர்வதேச சமூகம் மௌனம் காக்க கூடாது.
இலங்கையில் தமிழ் மக்கள் மறைமுகமாக காணாமல் ஆக்கப்படுகிறார்கள் கடத்தப்படுகிறார்கள் வெளிநாடு அனுப்பப்படுகிறார்கள் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதை அறிகிறோம்.
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியமை ஒரு மறைமுகமான நாடு கடத்தலாகும்.
ஆகவே அடக்குமுறைகளுடன் கூடிய இந்த அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்காமல் சர்வதேச நீதியில் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.