மனிதநேயப் பணியே மருத்துவம் ஆகிடும்
கனிவொடும் கண்ணிய உணர்வொடும் செய்வது
பிணியொடு வருவோர்க்குப் பணிவொடு சேவையாற்றும்
மணியான தொழிலே மருத்துவத் தொழில்
காலம் பாராக் கடமை ஆற்றியே!
காலன் கவராக் காக்கும் தொண்டாம்
ஆறா வலியொடு அரற்றும் மனிதர்க்கு
ஆறுதல் சொல்லியே அணைக்கும் சேவை
இயற்கை உபாதைக்கு எழும்ப இயலார்க்கு
இயன்றவரை ஏவல் செய்திடும் தாதியர்
தானாய் உணவைச் சாப்பிட முடியார்க்கு
போனகம் ஊட்டும் பொறுமைப் பணியாளர்
ஆய்வு கூடத்தில் அரும்பணி ஆற்றுவோர்
ஓய்விலா உழைக்கும் உத்தமப் பணியாள்
காவல் கடமையைக் கவனமாய்ப் புரிவோர்
ஏவும் வேலையை ஏற்றிடும் ஊழியர்
தொழில்நுட்ப வேலையைத் தொய்விலாச் செய்வோர்
அழுக்கினை நீக்கிட அயரா உழைப்போர்
மக்கள் சேவையே மகேசன் சேவையாய்
விகாசமாய் விரும்பிச் செய்யும் தொண்டர்கள்.
அவசர தேவையில் அம்புலன்ஸ் ஓட்டுவோர்
அவனியில் ஆண்டவன் அடுத்தநிலை உள்ளோர்
மகத்தான சேவையாம் மருத்துவச் சேவையை
யுகத்தில் உள்ளோர்க்கு யோகிபோல் தந்துமே!
மருத்துவச் செயலில் மகிழ்வொடு உழைப்போரை
விருப்போடு நாமும் வாழ்த்தி நிற்போமே!
போனகம்———–உணவு விகாசம்——–முகமலர்ச்சி
ஆக்கம் …… கவிஞர் மார்க்கம் சந்திரன்.