(மன்னார் நிருபர்)
(12-10-2023)
மன்னார் பள்ளிமுனை கடற்கரை யில் இருந்து அட்டை பிடிக்க கடலுக்குச் செல்லும் பள்ளிமுனை கிராம மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு,கடற்படையினர் இடையூரை ஏற்படுத்துவதாகவும் மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் (12) வியாழக்கிழமை காலை பள்ளிமுனை கடற்கரையில் இருந்து கடலட்டை பிடிக்க தொழிலுக்குச் செல்ல முயன்ற போது தொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களின் பின்னர் தற்போது கடலட்டை பிடிக்கும் சீசன் என்பதால் மீனவர்கள் கடலட்டை பிடிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் படகு ஒன்றில் சுமார் 10 பேர் வரை கடலட்டை பிடிக்க சென்று வருகின்றனர்.தற்போது படகு ஒன்றில் 8 சிலீண்டர்களுடன் 3 பேர் மாத்திரமே தொழிலுக்குச் செல்ல முடியும் என மன்னார் கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால் மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
தற்போது எரிபொருள் விலையேற்றம் காரணமாக ஒரு படகில் 7 அல்லது 8 பேர் வரை செல்கின்றோம்.இரண்டு படகில் செல்ல வேண்டியவர்கள் ஒரு படகில் சேர்ந்து தொழிலுக்குச் செல்கின்றோம்.
இன்றைய தினம் (12) படகு ஒன்றில் 3 பேர் மாத்திரமே செல்ல முடியும் என கடற்படை அறிவித்தமையினால் மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரம் இன்றி மீன் பிடிக்கச் சென்றால் மீன் மாத்திரமே கொண்டு வர முடியும்.
அட்டை பிடிக்கச் சென்றால் அட்டை மாத்திரமே பிடித்து வர முடியும்.இவ்வாறான நடவடிக்கைகளினால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் கடலில் ஒரு தொழிலை மட்டுமே நம்பி செல்ல முடியாது.
எனவே கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் பள்ளிமுனை மீனவர்கள் இன்றைய தினம் தொழிலுக்குச் செல்லவில்லை.
உரிய தீர்வு இல்லாது விட்டால் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக பள்ளிமுனை மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.