நடராசா லோகதயாளன்
காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினத்திற்கான பயணிகள் கப்பல் சேவை ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பினை நிறைவேற்றுமா என்பது குறித்து ஆரம்பத்திலேயே கேள்விகள் எழும்பியுள்ளன.
காங்கேசன்துறை-நாகபட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் சேவையின் வெள்ளோட்டம் இம்மதம் 8ஆம் திகதி ஆரம்பமானது. பயணிகள் சேவை 10ஆம் திகதி எனப்பட்டு பின்னர் 12 என்றனர். அது தற்போது 14இல் இருந்து ஆரம்பமாகும் எனக் கூறப்படுகின்றது. 12 ஆம் திகதி இலங்கையின் கப்பல்துறை அமைச்சருக்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வேறு பணியின் காரணமாக தற்போதைய திகதியும் மாற்றப்படுவதாக அறிவிக்கக்பட்டுள்ளது.
இவ்வாறு இலங்கை-இந்தியா இடையே பயணிப்பதற்காக நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு இதுவரை 36 பேரும் காங்கேசன்துறையில் இருந்து பயணிக்க 15 பேரும் மட்டுமே பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இந்த தரவுகள் ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தின் அடிப்படையிலானவை.
காங்கேசன்துறையில் இருந்து எந்தக் காலத்திலும் பயணிகள் சேவை இடம்பெற்றதே கிடையாது. அவ்வாறானால் அந்த துறைமுகம் அப்போதே பயணிகள் சேவைக்கு பொருத்தமற்ற இடம் எனக் கண்டுகொள்ளப்பட்டுள்ளதா எனவும் கேள்வி எழுந்தாலும் இந்தவாரத்தின் தொடக்கம்வரை (ஒக்டோபர் 9) இதுகாலம் கப்பல் சேவையற்ற புதியதோர் இடத்திற்கு இச்சேவை ஆரம்பிப்பதனால் யாருக்கு இலாபம் எனில், சிவ பக்தர்கள் இந்தியாவிற்கு யாத்திரிகர்களாகச் செல்வோர் மற்றும் வீட்டில் இடம்பெறும் சுபநிகழ்வுகளிற்கு இந்தியாவில் சென்று ஆடைகள் போன்றவற்றை கொள்வனவு செய்து வர விரும்புபவர்கள் மற்றும் வியாபர நோக்கம் கொண்டவர்களிற்கு இச்சேவை நன்மை பயக்கும் எனக் கருதப்படுகின்றது.
ஏனெனில், தற்போது பலாலியில் இருந்து சென்னைக்கு பயணிக்கும் விமானத்திற்கான சிட்டை இரு வழிக் கட்டணமாக 60 ஆயிரம் ரூபாவிற்கும் உட்பட்ட தொகையில் இருக்கும்போது கப்பலிற்கு 53 ஆயிரத்து 500 ரூபா செலுத்தி பயணிப்பார்களா என்பதே பெரிய கேள்விக்குரியாகவுள்ளது.
விமானப் பயணம் ஒரு மணிநேரமும் 20 நிமிடமாக உள்ளபோதும் இங்கே கப்பல் சேவை 4 மணி நேரமாகவும் பின்னர் நாகபட்டினத்தில் இருந்து சென்னைக்கு பயணிக்க மேலும் 6 மணிநேரம் ஆகும் என்பதால் அரை நாள் பயணத்தின் பின்பே சென்னையை அடைய முடிகின்றது.
இவையே இக்கப்பல் சேவையில் உள்ள மந்த நிலையாக இருக்கும் சூழலில் தற்போது 150 பயணிகள் மன்டும் பயணிக்கும் 4 மணிநேர பயணக் கப்பலிற்கு, பதிலாக 250 பயணிகள் பயணிக்கும் 2 மணிநேரத்தில் நாகபட்டினத்தை அடையும் கப்பலை இந்த சேவைகளில் ஈடுபடுத்தும் திட்டமும் இருப்பதனால் அந்த வகையான கப்பலை பயன்படுத்தும்போது கட்டணமும் குறைந்து, எடுத்துச் செல்லும் பொதியின் அளவும் அதிகரிப்பதோடு கப்பல் கட்டணமும் குறைவடையும். அப்போதுதான் கப்பல் சேவையை நாடும் பயணிகளின் தொகை அதிகரிக்கும் எனக் கூறப்படுகின்றது.
இவை தொடர்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான பொ.பாலசுந்தரம்பிள்ளை கருத்து தெரிவிக்கையில்:
”இலங்கை இந்தியா இடையிலான போக்குவரத்து அதிகரிப்பது தமிழ் நாட்டுடனான உறவையும் அதிகரிக்கும். 1940ற்கு முதல் இலங்கையிலேயே இரண்டாவது பெரிய துறைமுகமான ஊர்காவற்றுறை துறைமுகத்தின் ஊடாக கப்பல் சேவை இடம்பெற்றது. இதேநேரம் கட்டணம் ஓர் பெரிய தொகையாகவே காணப்படுகின்றது”. இருந்தபோதும் கொண்டு வரும் பொதியின் அளவு அதிகம் என்பதனால் பயணிகளிற்கும் நட்டம் ஏற்படாது என்றார்.
இதேநேரம் குடாநாட்டின் பிரபல தனியார் வைத்தியசாலை மற்றும் மருந்தக உரிமையாளரான சி.குலேந்திரராஜா கருத்து தெரிவிக்கையில்:
”தற்போதைய சூழலில் வர்த்தக நோக்கில் அடிக்கடி பயணிக்கும் எம்போன்ற வர்த்தகர்களிற்கு கப்பல் சேவை வரப்பிரசாதமாகவே அமையும் இருப்பினும் பருவகால மழைக்காலம் மற்றும் பயணிகள் இன்மையால் இச்சேவை தடைப்படாதுவிடின் நேர விரயம், பிரயாணம் போன்றவற்றை கருத்தில்க்கொண்டு எம்போன்ற வர்த்தகர்கள் இங்கிருந்து பயணிக்கும்போது விமான சேவையினையும் இந்தியாவில் இருந்து திரும்பும்போது கட்டிப்பாக கப்பல் சேவையினையும் நாடுவார்கள்” என்றார்.
இதேநேரம் சங்காணையைச் சேர்ந் கட்டிடத் தொழிலாளியான 47 வயது ஜீவரஞ்சன் கருத்து தெரிவிக்கையில்:
”கப்பல் தொடர்பான செய்திகள் வெளிவந்தபோது இருவழிக் கட்டணம் 19 ஆயிரம், 20 ஆயிரம் என்றே செய்திகள் வெளவந்தன. அதனால் எம்போன்ற தொழிலாளர்களும் பயணித்து இந்திய ஆலயங்களையும் தரிசித்து எமது பிள்ளைகளிற்கும் இந்தியாவை காட்ட முடயும் என நம்பினோம். ஆனால் அந்த கட்டணம் எந்தக் காலத்திலும் இனி இல்லை என்பதனை தற்போது வெளியான கப்பல் கட்டணம் கட்டியம் கூறுகின்றது. இதனால் வீட்டில் உள்ளவர்களும் உறவுகளும் மீண்டும் ஏக்கப் பெருமூச்சே விடுகின்றனர்” என்றார்.
இரு நாடுகளிலும் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த கப்பல் சேவை அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யுமா அல்லது ஏமாற்றத்தை அளிக்குமா என்பது அடுத்த சில மாதங்களில் தெரியவரும்.