இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘இறுகப்பற்று’. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதையடுத்து படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதில், இயக்குனர் யுவராஜ் தயாளன் பேசியதாவது, விக்ரம் பிரபு நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நிறைய பேர் தயங்கினார்கள். காரணம் இது மல்டி ஸ்டார் படமாக இருந்தது. அது மட்டுமல்ல கதாநாயகியை மையப்படுத்திய படமாகவும் இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால் விக்ரம் பிரபு இந்த படத்தில் நடிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று கூறி ஒப்புக்கொண்டார். அவரும் ஷ்ரத்தாவும் நடிக்க வேண்டிய ஏழு நிமிட காட்சியை ஒரே நேரத்தில் படமாக்கினோம். அவருக்கும் எனக்கும் சிறுவயதில் இருந்தே ஒரு தொடர்பு இருக்கிறது.
என்னுடைய தந்தை தீவிரமான சிவாஜி ரசிகர். சிறுவயதில் சிவாஜியின் படத்தைக் காட்டி இவர்தான் உன்னுடைய தாத்தா என்று சொல்வார். நானும் அவரையே என்னுடைய தாத்தா என்று எல்லோரிடமும் கூறுவேன். பள்ளி தலைமை ஆசிரியரே என் தந்தையை அழைத்து விசாரிக்கும் அளவிற்கு சிவாஜி தான் என் தாத்தா என நம்பினேன். அதன்பிறகு அவர் என் தாத்தா இல்லை என சொன்னதும் அழுதுவிட்டேன். சிவாஜியை பார்த்து வளர்ந்த குடும்பம் எங்களுடையது. சிவாஜி இறந்த அன்று இரவு என் தந்தை ரொம்பவே அழுதார்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவின் ஒத்துழைப்பால் இப்படத்தை முழுவதுமாக நான் நினைத்தபடி எடுக்க முடிந்தது. நான் சில பேர் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று நினைப்பவர்களில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு சாரும் ஒருவர். இன்று நடப்பதை எல்லாம் பார்க்கும்போது நாளை தான் என் படம் வெளியீடு ஆகிறது என்பது போல உணர்கிறேன்” என்று கூறினார்.