நடராசா லோகதயாளன்
இம்மாதம் 13ஆம் திகதி, (அதாவது இன்று வெள்ளிக்கிழமை) தமிழ் தேசிய கட்சிகள் திட்டமிட்டுள்ள கதவடைப்பு போராட்டத்துக்கு யாழ் வணிகர் கழகம் முழுமையான ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நீதி கோரும் விவகாரத்துடன், தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு முழுமையான சர்வதேச தலையீட்டையும் கோரி இந்த கதவடைப்பு போராட்டம் நடத்தப்பட வேண்டுமென்றும் வணிகர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும், தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த விடயங்கள் பேசப்பட்டன.
தமிழீழ விடுதலை இயக்க தலைவர் தசித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தமிழ் மக்களின் உரிமை போராட்டம் சார்ந்த எந்த நடவடிக்கைக்கும் பரிபூரண ஆதரவை வழங்கி வரும் பாரம்பரியத்தையுடைய யாழ்ப்பாண வணிகர் கழகம், இந்த போராட்டத்தையும் முழுமையாக ஆதரிப்பதாக வணிகர் கழகத்தினர் தெரிவித்தனர்.
எனினும் நீதிபதி விவகாரத்துடன், தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு, முழுமையான சர்வதேச தலையீட்டையும் கோரி இந்த சுதவடைப்பு போராட்டம் நடந்தப்பட வேண்டுமென்றும் வணிகர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
போராட்ட அறிவிப்பில் இந்த கோரிக்கையும் இணைக்கப்பட வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் அவர்களது கோரிக்கைக்கு அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்தன.
இதேவேளை, நீதிபதி சரவணராஜாவை கொச்சைப்படுத்தும் விதமாக அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் வணிகர் கழகத்தினர் வலியுறுத்தினர்.
இதனிடையே பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் அண்மையில், ரி.சரவணராஜாவின் ஆங்கில புலமை தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு வணிகர் கழகத்தினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.