நடராசா லோகதயாளன்.
யாழ்ப்பாணம் கீரிமலையில் சைவ அடையாளங்கள் மக்கள் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு மகிந்த ராஜபக்சவினால் அடாத்தாக கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகையினை கோட்டபாய நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்க இன்றைய ஜனாதிபதி ரணில் அரசில் நொதேன் யுனி என்னும் தனியார் பல்கலைக் கழக முதலீட்டாளருக்கு குத்தகைக்கு வழங்கியமை தொடர்பில் பலரும் கண்டணம் தெரிவிக்கின்றனர்.
கீரிமலை நகுலேஸ்வரம் பகுதியில் ஜே/226 இலக்க கிராம சேவகர் பிரிவில் சைவ அடையாளங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அமைத்த ஜனாதிபதி மாளிகைப் பிரதேசம் உள்ளிட்ட 29 ஏக்கர் நிலம் உரிமையாளர்களின் சம்மதம் இன்றி நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவதாக 2021-09-09 அன்று அப்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சாவினால் இரகசியமாக வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டது.
இவ்வாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான 29 ஏக்கர் நிலத்தில் இருந்து 12 ஏக்கர் நிலம் தற்போது இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் ஊடாக நொதேன் யுனி என்னும் தனியார் பல்கலைக் கழக முதலீட்டாளருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுவிட்டது.
50 வருட குத்தகைக்கு அண்ணளவாக 5 ஆயிரம் பில்லியன் ரூபாய்கள். முதலீட்டில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு திங்கட்கிழமை (16) பத்தரமுல்லயில் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, தலைவர் இண்டி பத்மநாதன் மற்றும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் லக்ஷ்மன் எல். ரத்நாயக்க உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
தனியார் பல்கலைக் கழகம் என்றபெயரில் வழங்கப்படும் முதலீட்டிற்கு மக்களின் நிலத்தை அபகரித்து வழங்குகின்றமை தொடர்பில் அந்த நில உரிமையாளர்களுடன் அப்பகுதியில் அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவ ஆலயங்களின் தர்ம கர்த்தாக்களும் தமது கடும் கண்டனத்தை பதிவு செய்வதோடு இது சர்வதேச நியமங்களிற்கும் முரணானது என்றவகையில் சர்வதேசமும் இது தொடர்பில் தமது கரிசணையை செலுத்த வேண்டும் என்கின்றனர்.
ஏனெனில் வரலாற்று சரித்திரம் மிக்க 7 சைவ (ஆலய) அடையாளங்களை அழித்தே அன்று 29 ஏக்கரில் ஆடம்பர மாளிகை அமைத்தனர். மிகப் பழமை வாய்ந்த ஆலயங்களை இடித்து அழித்து அந்த இடத்திலேயே ஜனாதிபதிக்கு ஆடம்பர மாளிகை அமைக்கப்பட்ட விடயம் அண்மையிலேயே தெரியவந்தது. இதில் கீரீமலையில் மிகப் பழமை வாய்ந்த சிவன் ஆலயம், சடையம்மா மடம், கதிர்காமத்திற்கு யாத்திரை ஆரம்பிக்கும் முருகன் ஆலயம் என்பன அமைந்திருந்த இடங்கள் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டே மகிந்த தனக்கு ஆடம்பர மாளிகை அமைத்தார் எனப் பலரும் குற்றம் சாட்டியபோதும் அன்று அதனை ஆவண ரீதியில் நிரூபணம் செய்ய முடியாமல் போனது. ஆனால் தற்போது அது நிரூபணம் செய்து வெளிவந்துள்ளது.
வலி. வடக்கு கீரிமலை பகுதியில் இருந்த சிவன் ஆலயம் அருகே கிருஸ்ணன் ஆலயம் ஒன்றும் இருந்தது. இந்த ஆலயத்தின் ஆலய நிர்வாகத்தினர் சிலர் மார்ச் மாதம் 2 ஆம் திகதி கடற்படையினரின் பாதுகாப்பு வலயத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டு கிருஸ்ணர் ஆலயத்தின் தற்போதைய நிலையைக் காண்பித்துள்ளனர்.
கிருஸ்ணர் ஆலய நிர்வாகத்தினர் 1990ஆம் ஆண்டின் பிற்பாடு, முதல் தடவையாக இந்த ஆலயத்தைச் சென்று பார்வையிட்டனர். ஆலயத்தைச் சென்று பார்வையிட்ட ஆலய பரிபாலனசபையினருடன் அப்பகுதி கிராம சேவகரும் பயணித்துள்ளார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவன் ஆலயம் இருந்த தடயமே தெரியாது இடித்து அடியோடு அழிக்கப்பட்டே மகிந்த ராஜபக்சவின் காலத்தில் உல்லாச விடுதி அமைத்துள்ளனர் என
அங்கு சென்று திரும்பிய கிருஸ்ணர் ஆலய பரிபாலன சபைத் தலைவர் கதிரவேலு நாகராசா உறுதி செய்த்தோடு சிவன் கோவிலின் தடயமே இப்போது இல்லை என்று கூறினார்.
கிருஸ்ணர் ஆலய நிர்வாகம் சென்று வந்த பின்பு அப்பகுதிக்குச் சென்று திரும்பிய அகில இலங்கை இந்துமா மன்றத்தின் ஆறு .திருமுருகன் தனது கண்டனத்தை பதிவு செய்யும்போது
போர்த்துக்கீசர் காலத்து ஆதிசிவன் ஆலயத்தில் பாதாள கங்கை எனப்படும் கிணற்றுடன் கூடிய சிவன் ஆலயம், அதன் அருகே சித்தர்களின் தியான மடம், அதிலே நல்லூர் தேரடிச் சித்தரான சடையம்மாவின் சமாதி மற்றும் அவரது மடம் ஆகியவையும் இருந்தன”. அது மட்டுமின்றி அந்த பிரதேசமே இந்துக்களின் புனித பூமியாக திகழ்ந்ததற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன.
”நல்லை ஆதீனத்தின் முதலாவது குரு முதல்வரான மணி ஐயரின் குருவான சங்கர சுப்பையாவின் சமாதி ஆகியவையும் அங்கே இருந்தன. அதேபோன்று மிகவும் பழமையான கதிரை ஆண்டவர் ஆலயமும் இருந்தது. இவ்வாறான ஆண்மீக அடையாளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை மீள அமைத்தே ஆக வேண்டும் என்பதோடு அவற்றினை அழித்தமைக்கும் எமது வன்மையான கண்டனங்களையும் நாம் பதிவு செய்கின்றோம்” என்றார்.
இதேநேரம் இப்பகுதியில் அமைந்திருந்த கதிரை ஆண்டவர் ஆலயத்தின் மதகுருவாக இருந்த 71 வயதான கிருஸ்ணமூர்த்திக் குருக்கள் கணேசமூர்த்தி சர்மாவை ”கதிரைமலை முருகன் ஆலயத்திற்கு எனது குடும்பத்தில் மூன்றாம் தலைமுறையாக நான் பூசை மேற்கொண்டு வந்தேன். இந்த ஆலயத்தின் மூல மூர்த்தியாக வேலே இருந்து வந்தது. பண்டயகால சிற்ப முறையிலே அமைக்கப்பட்ட ஆலயம் இது. அதனோடு குருக்கள் தங்குமிடம், மடப்பள்ளி மட்டுமன்றி 3 கேணிகள் ஒன்றாக காணப்பட்ட வரலாறும் உண்டு. அதேநேரம் இந்த ஆலயம் கடற்கரையோடு ஒட்டியிருந்த போதும் இந்த ஆலயத்திற்கு அப்பால் இருந்த கிணற்று நீரே உவராக இருந்தது. எனினும் ஆலயத்தின் கேணியிலிருந்த நீர் நன்னீராகவே இருந்ததால் அயலவர்களின் பாவனைக்கும் பெரிதும் உதவியது. இந்தப் பிரதேசம் அனைத்து சைவ மரபுகளோடு இருந்தமையால் திருச்செந்தூரை ஒத்த வடிவில் அமைக்க கனவு கண்டோம் அது வெறும் கனவாகவே போய்விடுமோ என்ற அச்சம் காணப்படுகின்றது. ஏனெனில் இந்தப் பிரதேசம் மீண்டும் விடுவிக்கப்படுமா இல்லையா என்ற கேள்வி ஒருபுறமும் அவை இருக்கின்றனவா இல்லையா என்ற அச்சம் மறுபுறமும் எம்மை சூழ்கின்றது”. என்கின்றார்.
இப்பிரதேச நிலத்தை அரசு சுவீகரிக்க முற்பட்டபோதெல்லாம் எதிர்ப்புத் தெரிவித்து வந்தோம். ஆனால் 38ஏயின் கீழ் பிரதேச செயலாளர் சுவீகரித்து நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கியதாகவும் அதனை நகர அபிவிருத்தி அதிகார சபை ஓர் முதலீட்டு நிறுவனத்திற்கு வாடகைக்கு வழங்க ஒப்பந்தம் இடப்பட்டுள்ளதாக தற்போது கூறப்படுகின்றது.
இவ்வாறு சட்ட விரோதமாக வழங்கும் இடம்தொடர்பில் நாம் எமது மக்கள் மற்றும் ஆலய சபைகளின் கோரிக்கையின பெயரில் நீதிமன்றின் ஊடாக தடையை பெறவே முயற்சிக்கின்றோம் என தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.