பு.கஜிந்தன்
நவராத்திரி விரதமானது உலகெங்கும் பரந்து வாழும் இந்துக்களால் கடைப்பிடிக்கக் கூடிய ஒரு முக்கிய விரதமாக காணப்படுகிறது.10 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் இந்த விரதத்தில் முதல் மூன்று நாட்களும் வீரத்தை வேண்டி துர்க்கையையும், அடுத்து மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி இலக்குமியையும், இறுதி மூன்று நாட்களும் கல்வியை வேண்டி சரஸ்வதிதேவியையும் பூஜித்து, 10ஆம் நாளான இறுதி நாள் விஜயதசமி அனுஷ்டிக்கப்படுகிறது.
அந்தவகையில் இல்லங்களில் ஒன்பதாவது நாள் இரவு வேளையில் ஆயுத பூஜை இடம்பெறும். இந்த ஆயுத பூஜையானது இலங்கையை விட இந்தியாவிலேயே மிகவும் கோலாகலமாக நடைபெறும். ஆனால் யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள குருக்கள் ஒருவரது இல்லத்தில் நேற்றிரவு ஆயுத பூஜையானது முற்றிலும் இந்திய முறைப்படி கோலாகலமாக அனுஷ்டிக்கப்பட்டது.
ஏழு படிகளில் கொலு வைத்து, நாதஸ்வர இசையுடன் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இறுதியில் சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் கூறை என்பன வழங்கப்பட்டன. அத்துடன் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பின்னர் பூஜைகளை நடாத்திய குருக்கள் கௌரவிக்கப்பட்டதுடன், பிரசாதம் வழங்கலுடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.
இந்த இல்லத்தில் நடைபெற்ற ஆயுத பூஜையானது அனைவராலும் பேசப்பட்டுகிறது.