யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில்,இந்தியஅமைதி காக்கும் படையினர் செய்த படுகொலைச் சம்பவம் கடந்த இருபதாம் திகதி நினைவு கூரப்பட்டது. அதே நாளில் யாழ்ப்பாணம் முத்த வெளியில் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. ஆஸ்பத்திரிப் படுகொலைகளை நினைவு கூரும் நாளில் இசை நிகழ்ச்சியைச் செய்யாமல் வேறு ஒரு நாளைத் தெரிவு செய்யுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சந்தோஷ் நாராயணனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. யாழ் நகரப் பகுதியில் உள்ள சுவர்களில் ஆஸ்பத்திரி படுகொலைகளை நினைவு கூர்ந்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அன்றைய தினம் ஆஸ்பத்திரியில் அதன் பணிப்பாளர் தலைமையில் மேற்படி படுகொலை நினைவு கூரப்பட்டது.
அன்று பின்னேரம் யாழ் முத்த வெளியில் ஆயிரக்கணக்கானவர்கள் நிரம்பி வழிந்தார்கள். அன்று மழை நாள். எனினும் பின்னேரம் மழை விட்டுத் தந்தது. அதனால் இசை நிகழ்ச்சி பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சந்தோஷ் நாராயணன் போரில் உயிர் நீத்த தமிழ் மக்களை நினைவு கூர்ந்தார். பாடகர்கள், ஈழப் போரைப் பிரதிபலிக்கும் பாடல்கள் சிலவற்றைப் பாடினார்கள்.
2009க்கு பின் முத்தவெளியில் அவ்வளவு தொகையான மக்கள் கூடியது அதுதான் முதல் தடவை. பல்லாயிரக் கணக்கானவர்கள் அங்கே கூடியிருந்தார்கள். குடா நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் அங்கு கூடியிருந்தார்கள். சிங்கள ரசிகர்களும் அங்கே காணப்பட்டார்கள். வயது வேறுபாடு இன்றி, பால் வேறுபாடு இன்றி, எல்லாத் தரப்பினரையும் அங்கே காண முடிந்தது. முத்தவெளியில் தொடங்கி முனியப்பர் கோவில் வரையிலும் வாகனங்கள் அடுக்கப்பட்டிருந்தன. அதற்கு அப்பாலும் சாலை ஓரங்களில் வாகனங்கள் வரிசையாக நின்றன. முத்தவெளி மனிதத் தலைகளால் நிரம்பி வழிந்தது. யாழ்ப்பாணத்தில் இளையோர் தாகத்தோடு இசை நிகழ்ச்சியை ரசித்தார்கள், கொண்டாடினார்கள். சந்தோஷ் நாராயணன் குழுவினர் பாடப் பாட தாளத்துக்கு ஏற்ப ஆடினார்கள்..
அதாவது மக்கள் கொண்டாட வேண்டும் என்ற மனோ நிலையோடு காணப்படுகிறார்கள். அவர்களுக்குக் கொண்டாட்டங்கள், பெருவிழாக்கள் தேவைப்படுகின்றன. அது இயல்பானது. இசை விழாக்களில் மட்டுமல்ல முத்தவெளியில் ஒழுங்கமைக்கப்படும் வர்த்தகக் கண்காட்சிகளிலும் மக்கள் பெருந்திரளாகக் கூடுவார்கள்.ஒரு கோவில் திருவிழாவையும் விடாமல் பெருந்திரளாகக் கூடுவார்கள். மக்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க விரும்புகிறார்கள். கொண்டாடக் கிடைக்கும் எந்த ஒரு தருணத்தையும் அவர்கள் இழக்க விரும்பவில்லை.
அதுதான் சரி வாழ்க்கையைக் கொண்டாட வேண்டும். விடுதலை என்பதே பெரிய கொண்டாட்டம்தான். கட்டற்ற கொண்டாட்டம். விட்டு விடுதலையாகி நிற்பது.
எனவே மக்கள் சந்தோஷமாக இருப்பதிலோ, கொண்டாட்டங்களில் தாகமாக இருப்பதையோ தவறு என்று கூற முடியாது. கொண்டாட்டங்கள் இல்லை என்றால் மக்கள் போராட்டத்தின் பக்கம் வருவார்கள் என்பது தவறான கருத்து. ஒரு போராட்ட அமைப்பு அல்லது கட்சி மக்களுக்கு பொருத்தமான நம்பிக்கைகளை ஊட்டி அவர்களை இலட்சியத்தை நோக்கி ஈர்க்கும் போது மக்கள் போராடுவதை ஒரு கொண்டாட்டமாக ஏற்றுக்கொள்வார்கள்.
போராளிகள் அல்லது தலைவர்கள் அல்லது செயற்பாட்டுத் தலைவர்கள் சன்னியாசிகளாக இருக்கலாம். முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதனால்தான் அவர்களை சமூகம் மதிக்கின்றது. அண்ணாந்து பார்க்கின்றது. அவர்கள் சொல்வதைக் கேட்கின்றது. அதற்காக முழுச் சமூகமும் சன்னியாசிகளாக உலக சுகங்களைத் துறந்து போராட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
எனவே 2009 க்கு பின்னரான தமிழ் மக்களின் அரசியலைக் குறித்த ஒரு சரியான தரிசனம் தமிழ் அரசியல்வாதிகளிடமும் செயற்பாட்டாளர்களிடமும் கருத்துருவாக்கிகளிடமும் இருக்க வேண்டும். தமிழ் மக்களின் கூட்டு மனோநிலையை விளங்கிக் கொள்ளாமல் அவர்களை வழிநடத்த முடியாது.
முத்த வெளியில் சந்தோஷ் நாராயணன் ஈழப்போரை எதிரொலிக்கும் பாடல்களைப் பாடிய பொழுது மக்கள் ஆரவாரத்தார்கள்? அதற்குள் இருக்கிறது விடயம். எல்லாருடைய அடிமனதிலும் அது இருக்கிறது. விடுதலைக்கான பெரு விருப்பு. அதற்கு யார் தலைமை தாங்குவது? அதை எப்படி ஒரு ஆக்கபூர்வமான அரசியல் சக்தியாக மாற்றுவது?
ஓர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் என்ற அடிப்படையில் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு தியாகியின் நாளாகத்தான் இருக்கும். அல்லது ஏதோ ஒரு நினைவு கூர்வதற்கான நாளாகத்தான் இருக்கும். ஈழத் தமிழர்களின் அரசியல் நாட்காட்டி எனப்படுவது அப்படித்தான் இருக்கும். எனவே நினைவு கூர்தல் இல்லாத ஒரு நாளாகப் பார்த்து கொண்டாட்டங்களை செய்வது என்பது யதார்த்தமானது அல்ல. அதே சமயம் பிரதான நினைவு கூர்தலின் கூட்டு உளவியலைக் குழப்பாதபடி கொண்டாட்டங்களை ஒழுங்குபடுத்தலாம். அதை யார் செய்வது? இதை இன்னும் ஆழமான பொருள் கேட்டால் தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு ?
இதுதான் பிரச்சனை. தமிழ் மக்களின் இன்ப துன்பங்களுக்கு யார் பொறுப்புக் கூறலாம் என்றால் தமிழ் மக்களை முழுமையாக பொறுப்பெடுக்கக்கூடிய அரசியல், சமூக, மதத் தலைவர்கள்தான். அப்படிப்பட்ட தலைவர்கள் இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் உண்டா? அல்லது அவ்வாறு தலைவர்களாக வர வேண்டும் என்ற ஆசையாவது தமிழ் கட்சித் தலைவர்கள் மத்தியில் உண்டா ?
அவ்வாறு தமிழ் மக்களுக்கு பொறுப்பு கூறத்தக்க தலைவர்கள்தான் தமிழ் மக்களின் இன்ப துன்பங்களைத் தீர்மானிக்கும் விடையங்களில் தமிழ் மக்கள் மத்தியில் கருத்தை உருவாக்கலாம். அவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பொதுக் கருத்தை உருவாக்கத்தக்க தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டு உளவியலை, கூட்டு அபிப்பிராயத்தை, கூட்டுக் கருத்தைத் திரட்ட முடியாத கட்சிகளோ, செயற்பாட்டு அமைப்புகளோ குடிமக்கள் சமூகங்களோ சொல்வதை அந்த மக்கள் கேட்கப் போவதில்லை. எனவே இந்த விடயத்தில் தமிழ் மக்களின் கூட்டு உளவியலை ஆகர்சிக்கக்கூடிய, அந்தக் கூட்டு உளவியலில் தாக்கத்தைச் செலுத்தக்கூடிய தலைவர்கள் உருவாக வேண்டும். இல்லையென்றால் நீதிக்காகப் போராடும் தமிழ் மக்களின் கூட்டுச் சக்தியானது விரயமாகிவிடும். அல்லது திசை திருப்பப் பட்டு விடும்.
ஓர் ஆயுதப் போராட்டம் நடக்கும் பொழுது, அங்கே கொண்டாட்டங்களுக்கு வரையறைகள் இருக்கும். அந்தச் சமூகம் அல்லது நாடு யுத்த எல்லைகளால், அல்லது காவலரண்களால் சுற்றிவழைக்கப்பட்டிருக்கும். அதாவது மூடப்பட்டிருக்கும். ஆனால் ஆயுதப் போராட்டம் இல்லாத ஒரு சூழலில் அப்படியல்ல. யுத்தம் இல்லாத ஒரு சூழலில் அந்தச் சமூகம் வெளிச்சக்திகளுக்குத் திறக்கப்பட்டு விடும். அல்லது போரில் வெற்றி பெற்ற தரப்பு எந்த வழியைத் எதற்காக திறப்பது என்று திட்டமிட்டு வழிகளைத் திறந்து விடும்.
போரில் தோற்கடிக்கப்பட்ட பின் வெளிச்சக்திகளுக்குத் திறந்து விடப்பட்ட ஒரு சமூகத்தை நோக்கி எல்லாத் தீங்கான விடையங்களும் உட்பாய்ச்சப்படும். நுண்கடன் நிதி நிறுவனங்கள்; போதைப்பொருள் விநியோகஸ்தர்கள்; நுகர்வுத் தாகத்தைத் தூண்டும் வணிகர்கள்; இடைத்தரகர்கள்; எல்லாருமே உள்ளே வருவார்கள். வேலியில்லாத வயலை கட்டாக்காலிகள் மேய்ப்பதுபோல மேய்ந்து விட்டுப் போவார்கள். ஒரு காலம் இலட்சிய முன்மாதிரிகளால் துண்டப்பட்டு, தியாகத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் தயாராக இருந்த இளையோரை எப்படி அரசியல் நீக்கம் செய்யலாம்; போதைக்குள் மூழ்கடிக்கலாம்; வாள்களைக் கொடுத்து மோத விடலாம்; கட்சிகளாகப் பிரிக்கலாம்…… என்றெல்லாம் திட்டமிட்டு அவர்கள் வேலை செய்வார்கள்.
2009க்குப் பின் வெளி உலகத்துக்கும் சூதான உட் சக்திகளுக்கும் திறந்து விடப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தை கட்டுக்கோப்பானதாக இலட்சிய பாங்கானதாக மாற்றுவதற்கு அரசியல்வாதிகளால் மட்டும் முடியாது. அதற்கு அரசியல் செயற்பாட்டாளர்கள், குடிமக்கள் சமூகங்கள், படைப்பாளிகள், மத நிறுவனங்கள், மருத்துவர்கள், உளநல மருத்துவர்கள் போன்றோர் கூட்டாகச் செயல்பட வேண்டும். அது ஒரு கூட்டுச்சிகிச்சையாக கூட்டுக் குணமாக்கல் அரசியலாக அமைய வேண்டும். ஆனால் அவ்வாறான கூட்டுச் செயற்பாடுகளை தமிழ் மக்கள் மத்தியில் யாரிடமும் பார்க்க முடியவில்லை.
இந்த மண் எங்களின் சொந்த மண் என்று பாடிய ஒரு சமூகத்தில் இருந்து கனடாவை நோக்கியும் பிரித்தானியாவை நோக்கியும் ஒரு புலப்பெயர்ச்சி அலை தோன்றியிருக்கிறது என்றால் அதற்கு யார் பொறுப்பு?
ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் ,பண்பாட்டு ரீதியாகவும் தோற்கடிப்பதற்கு சிங்கள பௌத்த அரசியல் நிகழ்ச்சி நிரல் தொடர்ந்து துடிப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில், தமிழ்க் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?
பலமான பண்பாட்டு அடித்தளத்தைக் கொண்டிருக்கும் ஒரு மக்களை இலகுவாகத் தோற்கடிக்க முடியாது. ”கலாச்சாரமே தேசிய விடுதலையின் திறப்பு” என்று அமில்கார் கப்ரால் கூறுவார். சுதந்திரத்துக்காக போராடி வென்ற எல்லா மக்களுக்கும் இது பொருந்தும். தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது அரசியல் மறுமலர்ச்சி மட்டுமல்ல, பண்பாட்டு மறுமலர்ச்சியுந்தான். எந்தக் கட்சியிடமாவது கலை கலாச்சார அமைப்பு உண்டா என்று ஒரு ஊடக நண்பர் கேட் டார்.
தோற்கடிக்கப்பட முடியாத பலமான பண்பாட்டு அடித்தளத்தை கொண்ட தமிழ் மக்களை கடந்த 15 ஆண்டுகளாக ஆண்டுகளாக ஒரு திரளாக கூட்டிக்கட்ட தவறிய தவறிய எல்லா தமிழ் கட்சிகளும், குடிமக்கள் சமூகங்களும், மதத்தலைவர்களும் படைப்பாளிகளும், கருத்துருவாக்கிகளும் இதற்குக் கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.