நடராசா லோகதயாளன்.
யாழ்ப்பாணம் கீரிமலையில் உள்ள ஜனாதபதி மாளிகை அமைந்துள்ள பிரதேசத்தினை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என தமிழ் அரசுக் கடசியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சாள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றபோதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்குரிய பணிகளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியுடன் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி செயலகத்தினால் ஆலோசணை முன் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து நகர அபிவிருத்தி அதிகார சபையின் 8 பணிகளிறகான முன் அனுமதி கோரப்பட்டது. இதன்போது கீரிமலை ஜனாதபதி மாளிகை அமைந்துள்ள பிரதேசத்தினை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கும் தீர்மானத்திற்கும் ஒப்புதல் அளிக்குமாறு கோரப்பட்டது.
இது தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நீண்ட விவாதம் இடம்பெற்றது. இந்த விவாதத்தின்போது, தனியாரிடம் இருந்து சுவீகரிக்காத காணி எவ்வாறு வழங்கப்பட்டது. இதன்போது நாம் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல நில உரிமையாளர்களிற்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த தெல்லிப்பளை பிரதேச செயலாளர் முதல்கட்டமாக இந்த அனுமதி கோரினாலும் நில உரிமையாளர்களிற்கும் அந்த இழப்பீடு வழங்குவதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளதாக பதிலளித்தார்.
அந்த கட்டிடத்தை மாகாண சபைக்குத் தருமாறு கோரினோம். அல்லது அதனை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திடம் கொடுங்கள். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் வேண்டாம் என்றோ அல்லது மறுதலித்தாலோ தனியார் தொடர்பில் பரிசீலிக்கலாம். மாறாக நில உரிமையாளரின் ஒப்புதல் இன்றி பிடுங்கிய நிலத்தை எவ்வாறு இன்னுமொருவருக்கு வழங்குவது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கேளவி எழுப்பினார்.
அங்கே உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் பலர் நிலத்தை கோருகின்றனர். அத்தோடு அங்கே இருந்த மத அடையாளங்களை பாதுகாத்து தாருங்கள் என ஆறு.திருமுருகன் ஐயா கோருகின்றார். நீங்களோ அந்த நிலத்தை வீதி அபிவிருத்தி அதகார சபைக்கு வழங்க ஒப்புதல் தாருங்கள் என இன்றுதான் கோருகின்றீர்கள். இருந்தபோதும் கடந்த வாரமே தனியார் பல்கலைக்கழகத்திற்கு ஒப்பந்தம் எழுதி வழங்கி விட்டதாக படங்களுடன் செய்தி வந்துள்ளது. இது ஒரு ஏமாற்றுவேலை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
அவ்வாறு எந்த தனியார் பல்கலைக்கழகத்திற்கும் இதுவரை அப்படி வழங்கவில்லை என நகர அபவிருத்தி அதிகார சபையின் பிரதிநிதி தெரிவித்தபோது.
தற்போது நகர அபவிருத்தி அதிகார சபையினருக்கு வழங்குவதற்கான அனுமதிதானே அதனை வழங்குவோம் என இணைத் தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான பி.எம்.எஸ்.சாள்ஸ் கோரினார்.
இதன்போது கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த நிலம் காணி சுவாகரிப்புச் சட்டத்தின் கீழ் நில உரிமையாளரின் ஒப்புதல் இன்றி 38ஏஇன் கீழ் எடுக்கப்பட்டதல்லவா எனக் கோரியபோது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி ஆம் எனப் பதிலளித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவத்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 38 கீழ் பாதுகாப்புத் தரப்பினருக்கு மட்டுமே நிலத்தை சுவீகரிக்க முடியும். அவ்வாறு இருக்க நகர அபிவருத்தி அதிகார சபைக்கு நிலத்தை வழங்கும் கோரிக்கைக்கு எப்படி அனுமதி வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இதன் ஆரம்பமும் நடவடிக்கையும் பிழையாக இருப்பதனால் இந்த அனுமதியை வழங்க முடியாது என்றார் சுமந்திரன் அதனையடுத்து தலைமை அலுவலகத்துடன் உரையாடுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை பிரதிநிதிக்கு அறிவுறுத்தப்பட்டது.