வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
- பௌத்தமயமாக்கல் புள்ளியில் மையம் கொண்டுள்ள தென்னிலங்கை
- மதத்தை அல்ல நாட்டை நினையுங்கள்”. – இந்திய உச்ச நீதிமன்றம்.
செவ்விந்தியர்களுடைய நாடு அமெரிக்கா. ஆனால் அங்கு செவ்விந்தியர்கள் இல்லை.
மாயர்களுடைய நாடு மெக்சிக்கோ. இன்று அங்கு மாயர்கள்இல்லை.
சுலு பழங்குடியினருடைய நாடு தென்னாபிரிக்கா. இன்று அங்கு சுலு பழங்குடியினர் இல்லை.
பார்சிகளின் நாடு ஈரான். இன்று பார்சிகள் அங்கு இல்லை.
இத்தகைய ஒரு நிலையை உருவாக்கி வடக்குக் கிழக்கில் தமிழர் தாயகத்தை முழுமையாக கபளீகரம் செய்து இலங்கை மண்ணை சிங்கள பௌத்தத்தின் தேசமாக பிரகடனப்படுத்துவதை இலக்காகக் கொண்டே இலங்கை அரசு மிக வேகமாகக் காய்களை நகர்த்தி வருகின்றது. இந்த நகர்வு இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல் மாத்திரமல்ல தென்னிலங்கை அரசியல் தலைமைகளினதும் அவர்கள் சார்ந்த கட்சிகளினதும் தாரக மந்திரமாக உள்ளது. இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் தென்னிலங்கை சக்திகள் கட்சி அரசியல் பேதங்களுக்கப்பால் கைகோர்த்துப் பயணிக்கின்றன.
தென்னிலங்கையின் 90 வீதத்துக்கு மேற்பட்டவர்கள் எவ்வித கேள்விகளுக்கும் இடமின்றி பௌத்தமயமாக்கல் புள்ளியில் மையம் கொண்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் தமிழ் மக்களுடன் சில விட்டுக் கொடுப்புகளுக்கு கீழிறங்கி வந்த போதும் அது ஒரு தற்காலிக இராஜதந்திர நகர்வாகவே இருந்ததே அன்றி அதிகாரப் பகிர்வு விடயத்தில் சமரசரத்திற்கு இடமில்லை என்ற தமது கோட்பாட்டை மாற்றிக் கொள்வதற்கான சமிக்கையாகக் கூட அமையவில்லை என்பதை 2009 போர் மௌனிக்கப்பட்டதற்குப் பின்னரான 14 வருடகால பதிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
- இஸ்ரேல் தீர்வினைக்காணக் காண விரும்பவில்லை
பலஸ்தீன விவகாரம் குறித்து வழங்கிய நேர்காணலில் இஸ்ரேல் இராணுவ தலைவரும் அரசியல்வாதியுமான மோஸே தயான் (Moshe Dayan) பலஸ்தீனப் பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்பியிருந்தால் தீர்வினை எப்பொழுதோ கண்டிருக்கலாம். ஆனால் இஸ்ரேல் தீர்வினைக்காணக் காண விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
- இஸ்ரேல் வழியில் இலங்கை
இலங்கை அரசும் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் இதே நிலைப்பாட்டில்தான் உள்ளனர். இலங்கை அரசும் ஆட்சியாளர்களும் தமிழர் விவகாரத்துக்குத் தீர்வினைக் காண வேண்டுமென்ற எண்ணப்பாடு இருந்திருக்குமேயானால் எப்பொழுதோ தீர்வினைக் கண்டிருக்கலாம். ஆனால் அத்தகைய ஒரு எண்ணப்பாடு இல்லை என்பதை சுதந்திர இலங்கையின் வரலாறு தொடர்ச்சியாக உணர்த்தி நிற்கின்றது.
- இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இந்தியாவில் மன்னர்களின் பெயர்களில் உள்ள வரலாற்று இடங்களின் பெயர்களை மாற்றக் கோரி பாரதீய ஜனதா கட்சியின் அஸ்வினி உபாத்தியா உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்ற நீதிபதிகள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.
“ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிடுவதன் நீங்கள் சாதிக்க முயற்சிப்பது என்ன?
நாட்டைக் கொதிப்பான நிலையில் வைத்திருக்க வீரும்புகின்றீர்களா?
நாட்டை நினையுங்கள் மதத்தை அல்ல”.
இவ்வாறு கூறக் கூடிய நிலையில் இலங்கையில் நீதிமன்றங்களும் இல்லை. நீதிபதிகளுக்கே நீதியும் பாதுகாப்பும் இல்லாத நிலையில் குறிப்பாக தமிழ் நீதிபதிகள் நாட்டை விட்டு வெளியேறும் நிலையில் இலங்கையில் நீதி உள்ளது.
- ஆயிரமாயிரம் தமிழர்கள் தண்டிக்கப்படலாம் ஆனால் எந்த ஒரு பௌத்த சிங்களவரும் தண்டிக்கப்படக் கூடாது.
அது மாத்திரமல்ல ஆயிரமாயிரம் தமிழர்கள் தண்டிக்கப்படலாம் ஆனால் எந்த ஒரு பௌத்த சிங்களவரும் தண்டிக்கப்படக் கூடாது என்பதில் இலங்கையின் அரசியல் கட்டமைப்பு உள்ளது. நீதிமன்றங்கள் தண்டித்தால் கூட அரசியல் கட்டமைப்பு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்னொரு நீதியை வழங்கிவிடும். கெர்லைகாரர்களுக்கு வெள்ளளை அடிக்கும் மரபு துடுகமுனு காலத்தில் இருந்து இன்றுவரை இலங்கையில தொடர்கின்றது.
இலங்கை அரசும் ஆட்சியாளர்களும் தமிழர் விவகாரத்தை அரச பயங்கரவாத கரங்களைக் கொண்டே தொடர்ச்சியாக அடக்கி வருகின்றனர்.தமிழ் மக்களை கொன்று குவித்து வருகின்றது.மறுபுறம் தமிழர் விவகாரத்துக்கத் தீர்வுகாணவும் தயார் இல்லை;
- ரணில் விக்ரமசிங்கவின் நான்கு தேச தீர்வு
ஆனால் பலஸ்தீன விவகாரத்துக்கு இலங்கையின் ஜனாதிபதி தீர்வினை முன்வைக்கின்றார். பலஸ்தீன விவகாரத்தில் இரு நாடுகள் என்ற கோட்பாட்டின் கீழ் சாவதேச அரங்கில் பேசப்பட்டு வருகின்றது.ஆனால் ரணில் விக்ரமசிங்க நான்கு தேசங்கள் என்ற அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டுமென தீர்வினை முன் வைக்கின்றார். அதாவது “இஸ்ரேல்இ பாலஸ்தீனம்இ காசா மற்றும் லெபனானை உள்ளடக்கிய நான்கு நாடுகளின் தீர்வுக்கான சாத்தியம் உட்பட மாற்றுத் தீர்வுகள் ஆராயப்பட வேண்டும்” என்று அவர் ; கூறுகின்றார். அவர் முன் வைத்துள்ள .”நான்கு-அரசு தீர்வு” என்ன என்பதை மேலும் விவரிக்கவில்லை.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் வன்முறை அதிகரித்ததால்இ இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததை அடுத்துஇ விக்கிரமசிங்க வெளியே வந்து ஹமாஸ் தாக்குதலைக் கண்டித்தார். எவ்வாறாயினும்இ “இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் என்ற இரு நாடுகளின் கருத்தாக்கத்திற்கு இலங்கையின் நீண்டகால ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதாக” அவர் குறிப்பிட்டார்.
பலஸ்தீன விவகாரத்துக்கு நான்கு தேசங்கள் என்ற தீர்வினை முன்வைக்கும் இலங்கை ஜனாதிபதி இலங்கை விவகாரத்தில் இரு தேசங்கள் என்ற தீர்வுக்கு முன்வருவாரா? அல்லது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எனற தீர்வுக்காவது முன் வருவாரா? என்ற தமிழ் மக்களின் கேள்விக்கு ரணில் விக்ரமசிங்க பதில் கூறவேண்டும்.
- “போர் ஒரு போதும் தீர்வாகாது” -மகிந்த
எங்கள் விவகாரத்தை நாங்களே பார்த்துக் கொள்வோம் எனக் கூறும் ரணில் விக்ரமசிங்க உற்பட இலங்கையின் அரசியல்வாதிகளில் தமிழ் மக்களின் குருதியில் குளித்த மகிந்த ராஜபக்ச சாத்தான் வேதம் ஓதுவது போல் “போர் ஒரு போதும் தீர்வாகாது” என இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியருக்கும் அறிவுரை வழங்குகின்ரார்.
- ஐ.நா.பாதுகாப்பு பேரவையைக் கூட்டுக – சஜித்
எதிர்கால ஜனாதிபதி கனவில் மிதந்து கொண்டிருக்கும் சஜித் பிரேமதாசாபலஸ்தீன் விவகாரத்துக்கு நாடாளுமன்ற விவாதத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன் ஐ.நா.பாதுகாப்பு பேரவையைக் கூட்டுமாறு கோரிக்கைவிடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் அவலம் நடைபெற்ற போது இவர் எங்கிருந்தார் என்ற தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும்.
- ஐ.நா. தலையிட வேண்டும் – அநுரா குமார திசாநாயக்க
அடுத்த ஜனாதிபதி தேர்தலை எதிர் நோக்கி இருக்கும் ஜே.வி.பி அநுரா குமார திசாநாயக்க பலஸ்தீன பிரச்சனையில் ஐ.நா. தலையிட வேண்டுமென கோரிக்கைவிடுத்துள்ளார். தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்ட போது அநுரா ஏன் ஐ.நா. தலையீட்டைக் கோரவில்லை என்பதற்கான பதிலை தமிழ் மக்களுக்குத் தந்தாக வேண்டும்.
தமிழ் மக்களை அழித்து சிங்கள மக்களுக்கு தென்னிலங்கை சிங்களத் தலைமைகள் பரிசாக எதனை வழங்கினர் என்பது குறித்து சிங்கள மக்கள் சிந்தித்தாக வேண்டும். சிங்கள ஆளும் வர்க்கத்தின் 75 வருடகால ஆட்சி மூலம் சிங்கள மக்களுக்கு மாத்திரமல்ல ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்கும் தோற்றுப் போன நிமிர்த்த முடியாத ஒரு அரசையே வழங்கியுள்ளனர்.
இதில் இருந்து மீள்வதாயின் தனித்து சிங்கள மக்களால் முடியாது.தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதிலேயே மீட்சி தங்கியுள்ளது.
சிங்கள தேசம் இதனை ஏற்குமா? பக்குவப்படுமா?
அதே வேளையில் பலஸ்தீனத்துக்கான தீர்வுக்கு வழி காட்டும் சிங்களத் தலைமைகள் தமிழர் விவகாரத்திற்கும் அதேபாணியில் தீர்வு காண முன் வாருங்கள்.
ஏனெனில் சிங்களத் தலைமைகளின் பலஸ்தீனத்துக்கான தீர்வுப் பாதை இலங்கை விவகாரத்துக்கும் பொருந்தும்.