நான் சொல்வதுதான் இங்கே நடக்கும். பிக்குவின் கதையைக் கருத்தில் எடுக்க முடியாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நெடுந்தீவு பயணிகள் படகுச் சேவை தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டபோதே அமைச்சர் இவ்வாறு கடுந்தொனியில் தெரிவித்தார்.
நெடுந்தீவு பயணிகள் படகுச்சேவை தொடர்பாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய நெடுந்தீவுப் பிரதேசசெயலர், நயினாதீவு பிக்கு தனது படகை குறிகாட்டுவான் இறங்குதுறையில் நெடுந்தீவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தரித்து நிறுத்துகின்றார். இதனால் நெடுந்தீவு செல்லும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள் கின்றனர். கடற்படையினர் பிக்குவுக்குப் பயந்து எதுவும் கூறுவதில்லை என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், நீங்கள் என்ன சொன்னாலும் பிக்கு கேட்கமாட்டார் எனக் கூறினார்.
அதையடுத்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நான் சொல்வதுதான் இங்கே நடக்கும், பிக்கு சொல்வது அல்ல. அவரது படகு இனியும் அந்த இடத்தில் தரித்து நின்றால் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்வேன். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அங்கு நேரில் சென்று பார்ப்பேன் என்று கடும் தொனியில் குறிப்பிட்டார்.