வடக்கிலும் தெற்கிலும் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதக் கிளர்ச்சிகளின் போது இடம்பெற்ற பாரியளவிலான கடத்தல்கள் வரலாற்று ரீதியாக தீர்க்கப்படாத ஒரு நாடாக இலங்கையை சுட்டிக்காட்டும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, ஜே.வி.பி காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் ‘சிரத்தையுடன்’ இருந்தால், 87-89 காலப்பகுதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயற்பட்ட மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பாளர்களின் பெயர்களை பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
தென்னிலங்கையில் உள்ள உறவினர்கள் காணாமல் போனவர்களை நினைவுகூரும் முக்கிய நாளான ஒக்டோபர் 27ஆம் திகதியன்று சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் (ITJP) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக போராடிவந்துள்ள நிலையில், உண்மையினை நிலைநாட்டுவதிலும் பொறுப்புக்கூறலை ஏற்படுத்துவதிலும் இலங்கை அரசு தான் சிரத்தையுடன் செயற்படுகின்றது என்பதை வெளிப்படுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது எனக் கூறியுள்ளது.
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை, காணாமல் போனவர்களின் குடும்பச் சங்கத்தின் தலைவர் மனித உரிமைச் செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னாண்டோ அவர்களின் முயற்சியால், தென்னிலங்கைச் சிங்களத் தாய்மார்கள் 33ஆவது தடவையாக சீதுவ ரத்தொலுவையில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத் தூபிக்கு முன்பாக தமது அன்புக்குரியவர்களை நினைவு கூர்ந்தனர்.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களுக்கு நீதி கிடைக்கும் வரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் படம் பொறிக்கப்பட்ட மாலையை (chain with pendant) அணிந்துகொள்வதாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இன்று நினைவுத்தூபிக்கு முன்பாக உறுதியளித்துள்ளனர்.
தென்னிலங்கையில் காணாமல் போன உறவினர்கள் மற்றும் உறவுகளின் நினைவாக முப்பது வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் உண்மைக்கான நீண்டதும் வேதனை தருவதுமான உண்மைக்கான தேடல், 2009இல் போரின் முடிவிலிருந்து இவர்களைபோலவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே இருப்பதாக குறித்த ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களைச் சுற்றியுள்ள உண்மையை மீட்டெடுப்பது என்பது, அரசாங்கம் சர்வதேச சமூகத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க இந்த பிரச்சினையை கையாள்வதாக பாசாங்கு செய்து கொண்டு, ஆனால் உண்மையில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் இறக்கும் வரையும் இந்த பிரச்சனை மறையும் வரையும் காத்திருக்கும் பரிகசிக்கத்தக்க செயற்பாடாக இருக்க முடியாது.” என ITJP’இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கூறியுள்ளார்.
போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 188 தமிழ்ப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பான உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கு முன்னதாக ஏற்கனவே உயிரிழந்துள்ள அதேவேளையில் வடக்கிலும் கிழக்கிலும் நடந்த போராட்டங்களில் அல்லது நினைவேந்தல்களில் பங்குபற்றிய இளைஞர்களை வாயடைக்கச் செய்வதற்காக அவர்களை கடத்திச்சென்று சித்திரவதை செய்யும் நடவடிக்கையும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
ஏராளமான கடத்தல்கள் வரலாற்று ரீதியாக தீர்க்கப்படாமல் இருக்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுத கிளர்ச்சி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போருடன் தொடர்புடைய சம்பவங்கள் இதில் உள்ளடங்கும் என உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டம் வலியுறுத்தியுள்ளது.
” சர்வதேச நியமங்களுக்கும் நெறிகளுக்கும் அமையவும், உள்நாட்டில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமையவும் உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் தார்மீக உரிமை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உண்டு – ஆனால், இப்பிரச்சினைகள் தொடர்பாக, குறிப்பாக ஏற்கனவே விரிவான விசாரணைகள் நடாத்தப்பட்ட ஜே.வி.பி யுக
காணாமற்போனமை தொடர்பாக, விசாரணை மேற்கொள்வதற்கென சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியான ஆணைக்குழுக்களை அமைப்பது காணாமற்போனவர்களின் குடும்பங்களுக்கு எந்தவொரு நீதியையோ அல்லது ஆறுதலையோ கொண்டுவரமாட்டாது,” என யஸ்மின் சூக்கா மேலும் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம், ஜே.வி.பி. காலப்பகுதியில் இடம்பெற்ற காணாமல் போதல்கள் தொடர்பில் சிரத்தையாக இருக்குமாயின், கீழே தரப்பட்டுள்ள நடவடிக்கைகளை உடனடியாக அது செயற்படுத்தவேண்டும்:
• ஐ.நா. பணிக்குழு, மற்றும் நீதிக்குப் புறம்பான, முழுமையான விசாரணைகளற்ற, ஏதேச்சதிகாரக் கொலைகள் தொடர்பான சிறப்புத் தூதுவர் மற்றும் உண்மை, நீதி, இழப்பீடு, மீள்-இடம்பெறாமல் நடைபெறாமல் இருப்பதை உத்தரவாதங்களை மேம்படுத்துவதற்கான சிறப்புத் தூதுவர் ஆகியோரால் 1989 மாத்தளை மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பாளரின் வகிபாகம் தொடர்பாக 2022 நவம்பரில் எழுதிய கடிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் வழங்குதல்.
• 1987 -1990 இடைப்பட்ட காலப்பகுதியில் கடமையாற்றிய ஒவ்வொரு மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பாளர்களதும் பெயர்களை வெளியிடுதல்.
• இக்காலப்பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறை, இராணுவம், மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகப் பரிந்துரைக்கப்பட்ட நீதிமன்ற வழக்குகள் மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுக்களின் முன்னேற்றம் தொடர்பில் பாராளுமன்றத்திற்குத்
தெரியப்படுத்தல்.
• தற்போது 2030 வரை ஜனாதிபதியின் பாதுகாப்பின்கீழ் வெளியிடப்படாமல் வைக்கப்பட்டிருக்கும் ஜே.வி.பி காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான அகில இலங்கை மற்றும் வலயங்களுக்கான ஜனாதிபதி ஆணைக்குழுக்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட சாட்சிய வாக்குமூலங்களை வெளியிடுதல்.
உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் காணாமல் போனவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் குறித்த சிரத்தை இருக்குமாயின், இலங்கை அரசாங்கம் பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்திட்டம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
• ஆட்கொணர்வு மனு வழக்கில் வழக்கறிஞர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதுபோன்று 2009 மே 18 இல் சரணடைந்தவர்களின் பட்டியலை ஒப்படைக்கும்படி 58ஆவது படைப்பிரிவுக்கு கட்டளையிடல்.
• வட்டுவாகல் பாலத்தில் வைத்து 2009 மே 18 இல் இராணுவத்திடம் சரணடைந்த சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களால் கேட்டுக்கொள்பட்டது போன்று, சிறிலங்கா இராணுவத்தில் 58, 59, 53, டிவிசன்களின் பற்றாலியன்கள் மற்றும் சிறப்புப் படைகள் மற்றும் கொமாண்டோ ஜெறிமன்ட் ஆகியவற்றின் கட்டளைத் தளபதிகள் மற்றும் துணைத்தளபதிகள் ஆகியோர் காணாமற்போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தால் நேர்காணலுக்கு உள்ளாக்கப்படுத்தப்படுகின்றார்கள் என்பதை உறுதிப்படுத்துதல்.
• (செனல் 4 இன் படுகொலை காணொளி போன்ற) காணொளிகளில் படைவீரர்களின் முகங்கள் தெளிவாகத் தெரிகின்றன – இவர்களது படங்கள் இராணுவத்தினரின் விபரக்கோவைகளில் ஒப்பீட்டுப் பார்க்கப்பட்டன என்பதற்குரிய ஆதாரத்தினையும், அவர்கள் கண்டறிந்தவற்றையும் வழங்கமுடியுமா?
பல தசாப்தங்களுக்கும் மேலான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாரதூரமான நிலைமையினையும் – உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு என்னும் பெயரில் – அரசாங்கம் பிறிதொரு ஆணைக்குழுவினை அமைக்கும் நோக்கத்தினைக் கொண்டுள்ளது என்று மீண்டும் அறிவித்திருப்பதையும் கருத்தில்கொண்டு, ஐ.நா மற்றும் ழுர்ஊர்சு உட்பட சர்வதேச சமூகமானது தங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைத் தெரிந்துகொள்வதில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இருக்கும் உரிமையினை நிவர்த்தி செய்வதில் அரசாங்கம் உண்மையான அர்ப்பணிப்புடன் இருக்கின்றதா என்பதைத் தீர்மானிப்பதற்கு மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
இந்த ஆண்டு யூனில் ஐ. நா. செயலாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட நிலைமாற்று நீதியின் புதிய வழிகாட்டல் குறிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மீளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.