ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மீட்பார் என அவர் சார்ந்த வட்டாரங்கள் புகழாராம் சூடினாலும் புள்ளிவிபர ரீதியாக மாற்றம் எதுவும் நிகழவில்லை மாறாக நாட்டின் கடன் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆனால் ஜனாதிபதியின் ஒவ்வொரு தீர்மானங்களும் தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை திசை திருப்புவனவாகவும் அதற்கான தீர்வுகளை பலவீனப்படுத்துவதாகவும் வலுவடைந்து வருகின்றது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ரணிலின் எதேத்சதிகார போக்கை இராஜதந்திர ரீதியாக சமநிலைப்படுத்த தமிழர் தரப்பில் ஆளுமையான துணிச்சலான தலைமை தமிழ் கட்சிகளில் இல்லை என்பது வேதனையான விடயம். அத்துடன் தமிழ் புத்தியீவிகள் தரப்பில் பலனமான குரல் இல்லை புலம்பெயர் தரப்பிலும் வறிதாகவே உள்ளது இதனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எல்லை இன்றி தமிழர்களின் அபிலாசைகளை கபளீகரம் செய்ய துணிந்துள்ளார் அத்துடன் தன்னை சிங்கள பௌத்த மக்களின் தலைவனாக காட்டவே முயற்சிக்கின்றார் ஜேர்மன் ஊடகத்திற்கு கொடுத்த நேர்காணல் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
தமிழர் தரப்பு பழைய பல்லவிப் போராட்டங்களை அறிவிப்பதும் அதன் மூலம் தமிழ் கட்சித் தலைமைகள் தங்கள் இயலாமையை வெளிப்படுத்துவதும் பலவீனப்பட்டு விரக்தி நிலையில் உள்ள மக்களின் வெறுப்பை அதிகரிப்பவர்களாகவும் மாறி உள்ளனர் இது தமிழ்த் தேசிய இருப்புக்கு சாதகமில்லை மிக ஆபத்தானது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு பதிலாக அதைவிட மேலும் மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றார் ஜனாதிபதி
எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் தென்னிந்திய மீனவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடும் வடக்கு மீனவர்களுக்கு தீர்வு காணப்படாமல் தென்னிந்திய மீனவர்கள் வடக்கு கடலில் மீன் பிடியில் ஈடுபட ரணில் அரசாங்கம் அனுமதி வழங்க இருப்பதாக கூறும் அறிவிப்பு மேலும் வடக்கு மீனவர்களை நெருக்கடிக்கு தள்ளும் ஏற்கனவே இருந்த பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் இரட்டி மடங்காக்கும்.
தமிழர் தரப்பு மக்கள் ஆணையில் இருந்து ஒரு படி கீழிறங்கி சமஷ்டி தீர்வுக்கு முன்பாக அரசியல் அமைப்பில் உள்ள பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக அமுழ்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் கோரினர் இதனை எதிர்பாக்காத ரணில் அதற்கும் ஒரு ஆப்பு வைத்தார் பொலிஸ் அதிகாரம் தரமுடியாது என கூறினார் உண்மையில் அரசியல் அமைப்பில் உள்ள அதிகாரத்தை பாராளுமன்ற முடிவு இல்லாமல் நினைத்தவுடன் ஜனாதிபதி தரமாட்டேன் என கூற முடியாது ஆனால் ரணில் விக்கிரமசிங்க சர்வாதிகாரி போல செயற்பட்டுள்ளார்.
தமிழர் தாயகத்தில் சட்டவிரோத காணி அபகரிப்பு, விகாரைகள் அமைத்தல் , சிங்கள குடியேற்றங்கள் அமைத்தல் , மேச்சல் தரைகள் அபகரித்தல் போன்றன கடந்த காலத்தை விட தற்போது வேகமாக நடைபெறுகின்றன.
நிகழ்நிலைக் காப்பு சட்டம் என்ற போர்வையில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த கொண்டுவர உத்தேசித்துள்ள சட்டம் நாட்டு மக்களுக்கான அடக்குமுறை என பலரும் கூறினாலும் தமிழர்களுக்கு மிக ஆபத்தானது காரணம் சட்டம் நிறைவேறினால் நில அபகரிப்பு ,சட்டவிரோத விகாரை அமைப்பு போன்ற வற்றுக்கான மக்கள் போராட்டங்கள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் போன்றவற்றுக்கு நிரந்தர ஆப்பாகும் மீறினால் சிறைதான் அத்துடன் அரச செயற்பாட்டை விமர்ச்சித்து சமூக ஊடகங்களில் பதிவு செய்தால் பொய்யான செய்தியை பதிவு செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிறையுடன் கூடிய தண்டனை.
பல்லின மக்கள் வாழும் நாட்டில் சகல மக்களின் பிரச்சினைகளையும் நியாயமான முறையில் பார்க்க வேண்டிய ஐனாதிபதி பெரும்பாண்மை சிங்கள மக்களின் தலைவராக தன்னை காண்பிக்க முயற்சிக்கும் சம நேரம் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் விரிவு படுத்தி திசை திருப்ப முயற்சிக்கின்றார் இச் செயற்பாடுகள் தொடருமாயின் தமிழ் மக்களின் அபிலாசைகள் மேலும் பலவீனம் அடையும் அபாயம் ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.