இன, மத வேறுபாடின்றி பல்வேறு மனிதாபிமானப் பணிகளை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வரும் தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்களது சேவை கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் நிதியத்தின் இணைப்பாளரும் ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் அவர்களினால் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் யானை மற்றும் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் இக்குடும்பங்களின் நிலைமை குறித்து தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்களது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கிணங்க, இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் பெண் தலைமை தாங்கி வந்த குடும்பத்தலைவி யானை தாக்குதலுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ள மூன்று பிள்ளைகளின் தாயான பீ.எஸ்.விபாணி (வயது – 43) இவரின் (பெண் பிள்ளை வயது -15 ஆண் பிள்ளைகள் 17, வயது -13) பிள்ளைகளின் பராமரிப்பு மற்றும் அவர்களின் கல்விக்காகவும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் ஒலுவில் பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான எஸ்.நிஜாம்தீன் (வயது-34) இவரது (பெண் பிள்ளை வயது -10 ஆண் பிள்ளை வயது – 12, 08, 05 வயது) பிள்ளைகளின் பராமரிப்புக்காகவும் அவர்களின் குடும்ப. நிலைமையைக் கருத்திற்கொண்டும்
முதற்கட்டமாக தலா ஐம்பதாயிரம் ரூபாய் வீதம் ஒரு இலட்சம் ரூபாய் உதவித்தொகை ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் பணிப்பாளர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் அவர்களின் மூலம் குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளின் உதவிப்பிரதேச செயலாளர்களான எம்.ஏ.சீ. அஹம்மட் நஸீல் ,சட்டத்தரணி நஹீஜா முஸாபீர், ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் ஆகியோர்களின் பங்குபற்றுதலுடன் கையளிக்கப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த உதவிப்பிரதேச செயலாளர்கள், ” இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து மனிதாபிமான அடிப்படையில் இவ்வாறான உதவிகளை தனது சொந்த நிதியிலிருந்து மேற்கொண்டு வரும் வாமதேவன் தியாகேந்திரன் ஐயா சமூக நல்லிணக்கத்தின் ஒரு சிறந்த முன்மாதிரி” எனத் தெரிவித்தனர்.
அவருக்கும் இவ்வாறான பணிகளை ஒருங்கிணைத்து தந்த ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளர் ஊடகவியலாளர் பாரிஸ் அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் ” இவ்வாறான மனிதாபிமான உதவிகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு தியாகி ஐயா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அதற்கான முயற்சிகளை அரச அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள், சமூக நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டார்.