நக்கீரன்
கொழும்பில் இருந்து இயங்கும் நியூஸ் 1 (News1st) என்ற செய்தித் தொலைக்காட்சியில் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும். நிகழ்ச்சியின் பெயர் தேசத்தை எதிர்கொள்ளுங்கள் (FACE THE NATION என்பதாகும். அந்த வாரத்தில் ஊடகங்களில் பெரிதாக அலசப்படும் முக்கிய பேசுபொருளில் அந்தந்த துறைசார்ந்த அறிவாளிகளை அழைத்து விவாதம் நடைபெறும். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் (Anchor) பெயர் ஷமீர் ரசூல்தீன்(Shameer Rasooldeen). பெரும்பாலும் விவாதங்கள் பக்க சார்பில்லாமல் இருக்கும்.
இந்த நியூஸ் ஃபர்ஸ்ட் (News1st) என்பது கப்பிட்டல் மகாராஜா (Capital Maharajah Organization Ltd) என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு இலங்கைச் செய்தி நிறுவனமாகும். நியூஸ் 1 முதன்மையாக செய்திகளை ஒளிபரப்புகிறது, மூன்று தொலைக்காட்சி சனல்களில் சிராசா டிவி, சக்தி டிவி, டிவி 1 (Sirasa TV, Shakthi TV, TV 1,) அய்ந்து வானொலி சேனல்கள் சிராசா எஃப்எம், யெஸ் எஃப்எம், சக்தி ஃஎவ்எம், வய் FM மற்றும் லெஜண்ட்ஸ் எஃப்எம் (Sirasa FM, Yes FM, Shakthi FM, Y FM and Legends FM), சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் மூன்று வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் (யூரியூப், முகநூல், ட்விட்டர்).
கடந்த ஒக்தோபர் 18, 2023 அன்று அந்தத் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தின் தலைப்பு “Looking for corruption in all the wrong places” (“அனைத்து தவறான இடங்களிலும் ஊழலைத் தேடுகிறோம்”) என்பதாகும். அதில் எரான் விக்கிரமரத்தின (நா.உ – ஐமச) Dr. ஹரினி அமரசூரிய (நா.உ – தேசிய மக்கள் சக்தி) எம்.ஏ. சுமந்திரன் (நா.உ- ததேகூ) சட்டத்தரணி ஷிரால் லக்திலக (மூத்த துணைத் தலைவர் ஐக்கிய குடியரசு முன்னணி) ஆகியோர் விவாதித்தில் கலந்து கொண்டனர்.
விவாதத்தின் இறுதிக் கட்டத்தில் அந்தத் தொலைக்காட்சியின் பார்வையாளர் ஒருவர் மின்னணு மூலம் எழுப்பிய கேள்வியின் அடிப்படையில் செய்தித் தொகுப்பாளர் ஷமீர் ரசூல்தீன், இந்தக் கேள்வி சுமந்திரனுக்கு எங்கள் பார்வையாளர்களில் ஒருவரிடமிருந்து வந்தது என்று கேட்ட கேள்விக்கு சுமந்திரன் சுருக்கமாகப் பதில் அளித்தார். சுமந்திரன் அளித்த பதிலைத் தொலைக்காட்சியில் பார்காதவர்களும் அரைகுறையாக செய்தித்தாள்களில் வாசித்தவர்களும் ‘சம்பந்தன் பதவி விலக வேண்டும்’ தொடர்பாக தங்கள் கருத்தை வெளியிட்டுள்ளார்கள்.
சுமந்திரன் பதவி விலக வேண்டுமா வேண்டாமா என்பது பற்றிய சம்பந்தன் ஐயாதான் முடிவெடுக்க வேண்டும், தமிழ் அரசுக் கட்சியோ அல்லது மற்றவர்கடீளா அது பற்றிப் பேசக் கூடாது என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட நா.உ விக்னேஸ்வரன் “சம்பந்தன் தமிழரின் அடையாளம்! அவர் பதவி விலகத் தேவையில்லை, அவரைக் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சம்பந்தனின் நாடாளுமன்றக் காலம் 2025 வரை இருக்கிறது” என்றார். அடேங்கப்பா! சம்பந்தன் ஐயா மீது விக்னேஸ்வரனுக்கு பாசம் பொங்கி வழிகிறது. அவரது அருமை பெருமை தெரிகிறது. ஆனால் இதே விக்னேஸ்வரன்தான் தமிழரசுக் கட்சியை உடைத்தவர். புதிய கட்சியை தொடக்கியவர். கையைப் பிடித்து அரசியலுக்கு இழுத்து வந்து வடமாகாண சபையின் முதலமைச்சராக மகிடம் சூட்டி அழகு பார்த்த சம்பந்தன் ஐயாவுக்கு “உனக்குப் பேப்பே! உனது அப்பனுக்கும் பேப்பே” என்ற சொன்னவன் மாதிரி “வட மாகாண சபைக்கு நடந்த தேர்தலில் எனக்கு 132,255 விருப்பு வாக்குகள் கிடைத்தது. இது எனது சொந்தச் செல்வாக்குக் காரணமாகக் கிடைத்த வாக்குகள். தமிழ் அரசுக் கட்சியால் கிடைத்த வாக்குகள் அல்ல” என மார் தட்டினார். 2020 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் திருகோணமலைத் தேர்தல் தொகுதியில் அவரது தமிழ் மக்கள் தேசிய முன்னணி போட்டியிட்டது. விக்னேஸ்வரன் திருகோணமலை சென்று தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகப் பரப்புரை செய்தார். சம்பந்தனுக்கு வயதாகிவிட்டது. அவர் அரசியலில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டும். அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது, போட்டியிலிருந்து விலக வேண்டும்” என்று மேடைகளில் முழங்கினார். அவர்தான் இப்போது சம்பந்தன் தமிழர்களின் அடையாளம் என்கிறார்!
2015 இல் நடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்க ‘வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களியுங்கள்” என்று அன்றைய முதலமைச்சர் விக்னேஸ்வரன்தான் இரட்டை அர்த்தத்துடன் கொழும்பில் இருந்து ஒரு அறிக்கை விட்டார். இந்த அறிக்கையே விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் விரிசல் இருப்பது வெளியுலகத்துக்கு தெரியவந்தது. இப்போது “சம்பந்தன் தமிழரின் அடையாளம்! அவர் பதவி விலகத் தேவையில்லை” எனக் குடம் குடமாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
இன்னொருவர் கொழும்பு தமிழ் அரசுக் கட்சியின் ஆயுட்காலத் தலைவர் சனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா. இவர் ஓய்வுநேர நாற்காலி அரசியல்வாதி. நாய்க்குக் கல்லெறி எங்கே பட்டாலும் காலைத்தான் தூக்குமாம். சுமந்திரன் எது செய்தாலும் செய்யாவிட்டாலும் முதல் கல்லை வீசுபவர் இவரே. 2020 இல் நடந்த தேர்தலில் தொலைக்காட்சி, ஊடகவியலாளர் மநாடு எனக் கூட்டி அவர் இருக்கும் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் சுமந்திரன் மீது வசைபாடியவர். சேறு அள்ளிப் பூசினார். அதனைக் கட்சியின் தலைவர் கண்டு கொள்ளவில்லை என்பது இன்னொரு சோகம். தவராசா சொல்கிறார் “அரசியல் ரீதியில் இரா.சம்பந்தனை ஓரங்கட்டிவிட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டுவர எம்.ஏ.சுமந்திரன் சூழ்ச்சி செய்கிறாராம்!” சம்பந்தன் ஐயாவை எப்படி சுமந்திரனால் ஓரங்கட்ட முடியும்? சம்பந்தன் ஐயா கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லை. கட்சி அவர் கட்டுப்பாட்டிலும் இல்லை. இவரைப் பொருட்படுத்தத் தேவையில்லை.
இப்படி சுமந்திரன் மீது வசைபாடுபவர்கள் அந்தத் தொலைக்காட்சியில் சம்பந்தன் ஐயா தொடர்பாக ஒரு பார்வையாளர் கேட் ட கேள்விக்கு “Some of us in the party about a year ago when we spoke to him and asked him to step down” (“ஓராண்டுக்கு முன்பு கட்சியில் இருந்த சிலர் அவரிடம் பேசி அவரைப் பதவி விலகச் சொன்னோம்”) என்ற பதிலை வசதியாக மறந்து விட்டு “சுமந்திரன் சம்பந்தனைப் பதவி விலகக் கேட்கிறார்” என ஒரே குரலில் ஒப்பாரி வைக்கிறார்கள். “கட்சியில் இருந்த சிலர் அவரிடம் பேசி அவரைப் பதவி விலகச் சொன்னோம்” எனப் பனக்மையில் விடையளித்தார். “நான் பதவி விலகச் சொன்னேன்” என அவர் சொல்லவே இல்லை.
சம்பந்தன் ஐயாவை பதவி விலகக் கேட்பது என்ற தீர்மானம் கடந்த செப்தெம்பர், 2022 இல் வவுனியாவில் கூடிய தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் நிறைவேற்றப்பட்டது. அதே மத்திய குழுக் கூட்டத்துக்கு வந்திருந்த திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டினார்கள். திருகோணமலையில் தற்போது தமிழர் பிரதேசங்களும், தமிழர் வழிபாட்டு இடங்களும் திட்டமிட்டு பவுத்த மயமாக்கப்படும் நிலையில், அங்கு செயற்றிறன் மிக்க மக்கள் பிரதிநிதி ஒருவர் தேவை என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அண்மையில் திருகோணேஸ்வரர் ஆலயத்தின் காணிகளைக் கையகப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளை முன்வைத்த அவர்கள், சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய உடல் நலத்துடன் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்கர்.
இந்த நிலைமையால் திட்டமிட்ட சிங்கள – பவுத்த ஆக்கிரமிப்பை எதிர்த்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர். மூப்புக் காரணமாக உடல் நிலை தளர்வடைந்துள்ள இரா.சம்பந்தன், நாடாளுமன்ற அமர்வுகளில் சீராகக் கலந்துகொள்வதும் நடைமுறைச் சாத்தியமற்றதாகவுள்ளது எனக் கூறினர்.
இதுவரை நடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் சிலவற்றிலேயே கலந்துகொண்டுள்ளார். அதனால் மாவட்டத்தின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசுவதற்காக சந்தர்ப்பங்களும் குறைந்துள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இவை தொடர்பாகக் ஆராந்த மத்திய குழு, இரா.சம்பந்தனிடம் பதவி விலகுவது தொடர்பாகக் அவருடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக குழுவொன்றை நியமித்தது. அதன் உறுப்பினர்கள் பின்வருமாறு:
வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நா. உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம். (https://ibctamil.com/article/sambandhan-left-political-1663724715_)
இதனை அடுத்து இந்தக் குழு கட்சியின் பொதுக் குழுவில் எடுத்த முடிவின் அடிப்படையில், கட்சித் தலைவர் சேனாதிராசாவும் கட்சியின் உப தலைவர் சுமந்திரன் இருவரும் சம்பந்தன் ஐயாவை அவரது கொழும்பு இல்லத்தில் சந்தித்து அவரது உடல்நிலையை காரணம் காட்டி அவர் பதவி விலக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால் “எனக்கு வாக்களிதபோது திருகோணமலை வாக்காளர்களுக்கு எனது உடல்நிலை பற்றித் தெரியும். தெரிந்துதான் வேட்பாளர் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த எனக்கு வாக்களித்து தெரிவு செய்தார்கள். எனவே தன்னை விலகுமாறு கட்சி கேட்க முடியாது” எனக் கூறிவிட்டார்.
இதுதான் நடந்தது. ஆனால் ஊடகங்கள் மனம்போன போக்கில் “வளர்த்த கிடாய் மார்பில் பாய்ந்தது” , “சம்பந்தனை ஓரங்கட்டி தலைமை யை பிடிக்க சூழ்ச்சி செய்யும் சுமந்திரன்!” என கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் சிலர் விமர்சனம் செய்தார்கள். கட்சித் தலைமையை பிடிப்பதற்கு சுமந்திரன் ஏன் சம்பந்தன் ஐயாவை ஓரங்கட்ட சூழ்ச்சி செய்ய வேண்டும்? தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கும் சம்பந்தன் ஐயா அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? மறுபுறம் கட்சியின் தலமைப் பதவியைப் பிடிக்க சம்பந்தன் ஐயாவை பகைக்காமல் தன் பக்கம் வைத்திருப்பதுதானே புத்திசாலித்தனம்? அவருக்கு அனுகூலம்? மேலும் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு சுமற்திரன் போட்டியிட முன்வந்தால் அதில் என்ன பிழை இருக்கிறது? அதென்ன பஞ்சமா பாதகமா?
சுமந்திரன் அவர்களுக்கு தலைமைப் பதவிக்கு வருவதற்கான எல்லாத் தகுதிகளும் குணங்களும் அவரிடம் இருக்கிறது. பூகோள அரசியல், சட்ட அறிவு, மும்மொழிப் புலமை, கடினமான உழைப்பு, நேர்மை எல்லாம் அவரிடம் இருக்கிறது. எது எப்படியிருந்தாலும் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு யாரைத் தெரிவு செய்வது என்பது அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள். மற்றவர்கள் தங்கள் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது.
உண்மை என்னவென்றால் சுமந்திரன் எதைச் சொன்னாலும் என்ன செய்தாலும் அதில் நொட்டை சொல்ல, குற்றம் பிடிக்க, சேறு பூச கட்சிக்குள்ளேயும் வெளியேயும் சிலர் நாயாய் பேயாய் அலைகிறார்கள்! அவர் மீது பாய்ந்து பிராண்டுகிறார்கள்! ஆனால் எதையும் ஒளிவு மறைவின்றி அறம் சார்ந்து நேர்படப் பேசுவது அவரது பாணி. அவருக்கு உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் வித்தை தெரியாது. அவர் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. தமிழ்மக்களின் நலங்கள்தான் அவருக்கு முக்கியம். தனிப்பட்டவர்களது நலங்கள் முக்கியம் இல்லை. அதனால் சிலரது கோபத்துக்கும் தாபத்துக்கும் ஆளாக வேண்டியிருக்கிறார். ஆனால் அது பற்றி அவர் கவலைப்படுவதில்லை. அரசியலில் சிலர் கல்லெறிவார்கள். சிலர் மாலை போடுவார்கள். இரண்டையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும்.
கடந்த ஒக்தோபர் 18,2023 அன்று FACE THE NATION தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு பார்வையாளர் சம்பந்தர் ஐயா மின்னணு மூலம் ” நாடாளுமன்றம் 288 நாட்கள் கூடியுள்ள நிலையில், இரா.சம்பந்தன் 39 நாட்கள் மாத்திரமே முன்தோன்றி இருந்தார், அதாவது 13.6%. அவருக்கு வழங்கப்பட்ட மொத்த தொகை உரூபாய் 4 மில்லியன். தொலைபேசி, அலுவலகம் மற்றும் போக்குவரத்து போன்ற கொடுப்பனவுகளுக்கு மாதமொன்றுக்கு உரூபா 419,000. இது வரி செலுத்துவோரின் பணம். இது மற்றொரு வரை ஊழல். அது சரியா? என சுமந்திரனைப் பார்த்துக் கேட்டார். அதற்கு சுமந்திரன் அளித்த பதிலை அடுத்த வாரம் பார்ப்போம். ( தொடரும்)