நானாட்டான் பிரதேச செயலாளர் மா.ஸ்ரீஸ்கந்த குமார் தெரிவிப்பு
(மன்னார் நிருபர்)
(8-11-2023)
நானாட்டான் பிரதேசத்தில் உள்ள கால்நடைகளுக்கு ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் நிலம் தற்போது காணாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே – மாற்று வழியை அமைக்க வேண்டிய தேவை உள்ளது என நானாட்டான் பிரதேச செயலாளர் மா.ஸ்ரீஸ்கந்த குமார் தெரிவித்துள்ளார்.
மன்னார்-நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலத்தை அடையாளப்படுத்துவது தொடர்பான பிரச்சனை நீண்டகாலமாக இழுபறி நிலையில் உள்ள நிலையில் குறித்த விடயம் குறித்து பிரதேச செயலாளரிடம் இன்று (8) தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,
நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்காக மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்வது சம்பந்தமான கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மற்றும் பிரதிநிதிகளும் கால்நடை வளர்ப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
கால் நடைகளை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ‘பெருவெளி’ பகுதிக்கு கொண்டு செல்வது தொடர்பாக ஏற்கனவே கலந்துரையாடப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக நானாட்டான் பிரதேச செயலாளர், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், இலுப்பக்கடவை கமக்கார அமைப்பின் தலைவர் போன்றவர்களுடன் கலந்துரையாடப்பட்டு குறித்த விடயங்கள் தெளிவு படுத்தப்பட்ட பின்னர் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் நானாட்டான் பிரதேசத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவை தெரிவு செய்வது தொடர்பாக கடந்த மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கட்டுக்கரை குளத்தினுள் அடையாளம் காணப்பட்ட புல்லறுத்தான் கண்டல் என்று அழைக்கப்படுகின்ற 350 ஏக்கர் விஸ்தீரணம் உடைய நிலப்பகுதி ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைபடத்தின் உள்ளே முருங்கன் ரயில் நிலையமும் அதனுடைய தண்டவாள பகுதிகளும் புகையிரத விடுதிகளும் விதைப் பண்ணை யும் ஏனைய பிரதேசங்களும் அடங்குகிறது. அத்தோடு கட்டுக்கரை குளத்தின் நீரைக் கொண்டு வருகின்ற உள் வரத்து வாய்க்காலும் காணப்படுகின்றது.
இவற்றைத் தவிர அங்கு மேய்ச்சல் தரவை க்கு பொருத்தமான பிரதேசமாக 150 தொடக்கம் 200 வரையான ஏக்கர் நிலப்பரப்பு அடையாளம் பட்டுள்ளது. இந்த 150 ஏக்கர் தொடக்கம் 200 வரையான நிலப்பரப்பானது நானாட்டான் பிரதேசத்தில் காணப்படுகின்ற 25,000 திற்கும் மேற்பட்ட கால் நடைகளுக்கும் 2500 எருமை மாடுகளுக்கும் போதுமானதாக அமையாது.
அத்தோடு வருங் காலத்திலே கட்டுக்கரை குளத்தின் கட்டு அமைப்பானது இரண்டு அடிக்கு உயர்த்தப்படும் போது அதனுடைய நீர் பிடிப்பினுடைய அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கட்டுக்கரைக்குள் தற்பொழுது கிடைக்கக் கூடியதாக இருக்கின்ற 150 தொடக்கம் 200 வரையான ஏக்கர் நிலப்பரப்பு மேலும் குறைந்து போவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.
நீர்ப்பாசன பணிப்பாளரின் கருத்துப்படி கட்டுக்கரை குளத்தின் உச்ச நீர்மட்ட எல்லையில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் கால் நடைகளை வைத்துக் கொள்வது தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்ற கருத்துக்கு அமைவாக இந்த கருத்து தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் இங்குள்ள கால்நடைகளுக்கான வேறு மேய்ச்சல் தரைகளை எங்களால் கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்படுகிறது. ஏனென்றால் நானாட்டான் பிரதேச செயலக பிரிவு மன்னார் மாவட்டத்தினுடைய மொத்த நிலப்பரப்பில் ஆறு சதவீதமாக மட்டுமே இருக்கிறது.
எனவே இந்த ஆறு சதவீதமான நிலப்பரப்பின் உள்ளேயே வங்காலை பறவைகள் சரணாலயம், கட்டுக்கரை குளத்தில் உள்ளே இருக்கின்ற பறவைகள் சரணாலயம் கண்டல் உற்பத்தி காடுகள் இவை எல்லாமே இதற்குள் காணப்படுகிறது.
ஆகவே அரச காணி என்று எந்த ஒரு காணிகளும் எங்களால் அடையாளம் காண முடியவில்லை. இவ்வாறு அடையாளம் கண்டாலும் அவை 10 பேர்ச்சுக்கு உள்ளாக பொது மக்களின் வாழ்விடங்களுக்கு உள்ளேயே இருக்கிறது. அதனால் எங்களுடைய கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவை களை பெற்றுக் கொள்வதற்காக வேறு மாற்று வழிகளை நாட வேண்டிய சூழல் எழுந்துள்ளது.
எங்களுக்கு கிடைக்கப்பெற்று இருக்கின்ற மேய்ச்சல் தரைகளுக்கு மேலதிகமாக மேய்ச்சல் தரவை களை தேடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மேய்ச்சல் தரவை க்கு பொறுப்பான திணைக்களம் விலங்கு உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் ஆகும். கால்நடைகள் தொடர்பான விடயங்களுக்கு குறித்த திணைக்களம் பொறுப்பு கூற வேண்டும்.
அந்த வகையில் விலங்கு உற்பத்தி சுகாதாரத் திணைக்கத்தினரோடு சேர்ந்து அனைவரும் இதற்கான மாற்று வழிகளை அமைக்க வேண்டும்.
கடந்த சிறுபோகத்தில் கட்டுக்கரை குளத்தின் கீழ் இருக்கும் 33,000 ஏக்கர் காணியில் பத்து ஏக்கருக்கு ஒன்று என்ற விகிதத்தில் 3000 ஏக்கரில் சிறு போகத்தை மேற் கொண்டிருந்தோம். இந்த சிறுபோகம் யாவும் கட்டுக்கரை குளத்தின் கீழ் குளத்துக்கு நீர் வருகின்ற நீரேந்து பகுதியிலேயே அதாவது புலவு என்ற சொல்லப்படுகின்ற பகுதியில் வழங்கப்பட்டிருந்தது.
காலப் போக்கத்திலே புலவு செய்கை மேற் கொள்ளப்படாத படியினால் பொருத்தமான நீர் பிடிப்பற்ற புலவுகளை அடையாளம் கண்டு அந்தப் பகுதிகளில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளாக அடையாளப் படுத்துவதோடு அதற்கும் மேல் அதிகமாக கால்நடை வளர்ப்பவர்களும் விவசாயிகளும் ஒருவராக இருப்பதனால் இந்த கால்நடைகளுக்கான தீவனங்களை ஒதுக்கப்பட்ட விவசாய காணிகளில் வளர்த்தெடுப்பதன் ஊடாகவும் அதே நேரத்தில் விவசாய அறுவடையின் பின்னர் கிடைக்கும் வைக்கோல்களை பாதுகாத்து சேமித்து வைப்பதன் ஊடாகவும் ஏனைய மாற்று வழிகளில் கால்நடைகளுக்கான தீவனத்தை உற்பத்தி செய்வதன் ஊடாகவும் கால்நடைகளுக்கான தீவனங்களை பெற்றுக் கொள்ள முடியும்.
நானாட்டான் பகுதியில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகளை 150 தொடக்கம் 200 ஏக்கர் வரை அடையாளம் கண்டால் கூட இதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்கனவே மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டு உள்ள மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெருவெளிப் பகுதியை பொருத்தமான நடவடிக்கைகள் ஊடாக கால் நடைகளுக்கான மேய்ச்சல் நிலமாக பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் காணப்படுகிறது.
இதில் பல்வேறு தரப்பினர் உடைய இணக்கப்பாட்டில் சரியான முறையில் இவை மேற்கொள்ளப்பட வேண்டும். நானாட்டான் பிரதேசத்தில் உள்ள 25000ற்கு மேற்பட்ட கால் நடைகளுக்கும் 2500க்கும் மேற்பட்ட எருமை மாடுகளுக்கும் மேய்ச்சல் நிலங்களை நானாட்டான் பிரதேசத்தில் முழுமையாக பெற்றுக் கொள்வது என்பது தற்போது அரச காணிகள் இல்லாத நிலையில் சாத்தியம் இல்லை என நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் ஸ்ரீஸ்கந்த குமார் மேலும் தெரிவித்தார்.