கனடா ஸ்காபரோ நகரில் முதன்முதலாக மருத்துவக் கல்லூரியை உருவாக்க அடித்தளமிட்டு ஒன்றாரியோ அரசாங்கம் வரலாறு படைத்துள்ளது. கனடாவில் ஒவ்வொரு மாகாணத்திலும் பல மருத்துவக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. ஆனால் தமிழ் மக்களும் ஏனைய பல்லினங்கள் சார்ந்த மக்களும் அதிகளவில் வாழும் ஸ்காபுறோ நகரில் இந்த மருத்துவக் கல்லூரி அமைய இருப்பது பல்லினக் கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்கும் கனடிய தேசத்திற்கு ஒரு சான்றாக விளங்கவுள்ளது
ஸ்காபரோ ஒருங்கிணைந்த மருத்துவ சுகாதார கல்லூரியானது (SAMIH) சுகாதார பாதுகாப்பு வல்லுநர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவத் தாதிகள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் உடல்நல சிகிச்சை வல்லுநர்கள் ஆகியோரின் பயிற்சிக் களமாக இருக்கும். இம்மருத்துவக் கல்லூரியைப் பற்றி ஒன்றாரியோ மாநில சட்டமன்ற உறுப்பினரும் போக்குவரத்து அமைச்சின் இணை அமைச்சருமான விஜய் தணிகாசலம் அவர்கள் குறிப்பிடுகையில், ‘எங்கள் அரசாங்கத்தின் உறுதியான ஆதரவுடன், ஏறத்தாள 200 ஆண்டுகளுக்குப் பின்னர், எங்கள் குடியிருப்பாளர்கள் அனைவரின் நலனுக்காக, ஸ்காபரோவின் சிறந்த சுகாதார பாதுகாப்புக்கான புதிய சகாப்தத்தை தொடங்குகிறோம். இத்திட்டத்தின் மூலம் அடுத்தடுத்து வரும் பல தலைமுறைகளுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றுவதற்கான மருத்துவ நிபுணர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
ரொரன்றோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தில் இம்மருத்துவ பீடத்திற்கான முதலாம் கட்ட கட்டுமானத் திட்டம் கடந்த திங்கட்கிழமை 06.11.2023 அன்று நிறைவேறியது. இப்பீடத்துக்கான கட்டுமானங்கள் 2026ஆம் ஆண்டில் நிறைவுபெறும். SAMIH மருத்துவக் கல்லூரி செயற்படத் தொடங்கியவுடன், ஓராண்டிற்கு 30 மருத்துவர், 30 மருத்துவ உதவியாளர், 30 மருத்துவத் தாதிகள் பயிற்சியாளர், 40 உடல்நல சிகிச்சை வல்லுநர்கள் மற்றும் 300 உயிரியல் வல்லுநர்கள் இளங்கலை பட்டதாரிகளாக பயிற்றுவிக்கப்படுவார்கள். இது ரொரன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தின் விரிவாக்கப்பட்ட உயிரியல் திட்டத்தையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
YouTube: