கதிரோட்டம் 10-11-2023 வெள்ளிக்கிழமை
இலங்கையில் வடபகுதியின் கலாச்சாரத்தைப் பேணிய வண்ணம் மொழியாலும் கல்வியாலும் கலாச்சாரத்தாலும் செழித்திருந்த எமது பண்பாட்டுப் பிரதேசம் தற்போது சீனமும் சிங்களமும் இணைந்து பௌத்தத்தை காலூன்றச் செய்யவும் மதுவும் போதையும் கலாச்சாரத்தை பாழடிக்கவும் இன்னும் சில வருடங்களில் தமிழின் வாசம் பறிபோன ஒருபிரதேசமாக மாறி விடுமோ என்று அஞ்சும் அளவிற்கு அங்கு மறைமுகமாகவும் சதித்திட்டம் போன்று காரியங்கள் நகர்த்தப்படுவதை செய்திகள் வாயிலாக அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
இவ்வாறான மிகவும் இழிவான முறையில் மேற்கொள்ளப்படும் மோசமான ‘அபகரிப்பு’ முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் இவற்றை அரசாங்கமும் சீனத்தின் தூதுவராலயமும் அதிலும் மேலாக சமூக ஊடகங்கள் என்ற போர்வையில் எமது பண்பாட்டுப் பிரதேசத்தில் மெதுவாக ‘கால்பதித்து’ நடத்தும் மோசமான நடவடிக்கைகள் எமது மண்ணின் மகிமையை எவ்வாறு பாழடிக்கக் காத்திருக்கின்றன என்பதை எமது தமிழ்த் தலைவர்களோ அன்றி அங்கு பணியாற்றி உயர் அரச அதிகாரிகளோ கவனிக்கின்றார்களா? ஏன்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளுத.
இந்த நாசகார செயற் திட்டங்களில் சீனத் தூதரக அதிகாரிகள் நேரடியாக ஈடுபட்டுள்ளதையும் அதை வட மாகாணத்தின் ஆளுனர் போன்றவர்கள் மறுப்புத் தெரிவிக்காமல் ஏழை மக்களுக்கு உதவிகள் என்ற பெயரில் பௌத்தம் தொடர்பான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளதை இந்தப் பக்கத்தில் எச்சரிக்கும் எழுத்துக்களின் ஊடாக பதிவு செய்கின்றோம்.
இவ்வாறு, இலங்கையின் தூதுவர் தலைமையில் வழங்கப்படும் மேற்படி உதவித்திட்டம் சீனாவின் புத்த சங்கம், இலங்கை மற்றும் சீன பௌத்த நட்புறவுச் சங்கம் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது என்பதை செய்திகள் மூலமாக அறிகின்றபோது. நாம் அனைவரும் ஏன் மௌனிகளாகி விட்டோம் என்ற கேள்விகளையும் நமக்கும் எழுப்ப வேண்டும்.
இந்த பௌத்த மதத்திணிப்பு எமது பண்பாட்டுப் பிரதேசத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்ற அதே வேளையில் யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற சமூக ஊடகம் என்ற பெயரில் இயங்கும் சீரழிக்கும் குழு ஒன்று அங்கு எமது சமூகத்தை சீரழிக்கும் ‘போதை’ விருந்து ஒன்றை நடத்தியதாகவும் இதில் இளைஞர், யுவதிகள் அட்டகாசம் :செய்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கவலைக்குரிய தகவல்களை எமது மனங்களில் பதிய வைகக்கின்றன. ஆனால். நாம் பார்வையாளர்களாக மாத்திரம் அவற்றைப் படிக்கின்ற அளவில் மாத்திரமே உள்ளோம்.
எமது மக்களும் தலைவர்களும் கவனித்து உடனடியாக தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் நாம் எச்சரிக்க விரும்புகின்றோம்.
இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல்வேறு சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகள் அனைத்திலும் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பங்கெடுத்திருந்ததை எமக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
யாழ்ப்பாணம் பழைய கச்சேரியை சீன நாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சீனதூதுவர் பழைய கச்சேரியை பார்வையிட்டமை பாரிய சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சென்ற இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் நயினாதீவுக்கும் விஜயம் செய்து பார்வையிட்டதுடன் சீன அரசின் உலர் உணவுப் பொதிகளையும் பௌத்த சங்கங்களின் அன்பளிப்பு என்று பெயரிட்டு தமிழ் மக்களுக்கு வழங்கினர். இது மாத்திரமல்ல, திருகோணமலையிலும் புதிதாக இலுப்பைக்குளம் என்னும் கிராமத்தில் தமிழர்கள் வாழும் பகுதியில் புத்தர் சிலை ஒன்று அந்தப் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நிறுவப்பட்டுள்ளமையும் கிழக்கிலும் இதே பாதிப்புக்கள் தொடர்கின்றன என்பதை எமக்கு எச்சரிக்கையாக காட்டி நிற்கின்றன.