மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா சென்னையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். விடுதலைப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக சங்கரய்யா தமிழகத்துக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவருக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்,என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா, சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் வசித்து வந்தார். அவருக்கு சளி தொந்தரவு, காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று (நவ 15) பிரிந்தது. அவரது வயது 102.
முன்னதாக, கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தனர். சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடன் இருந்து கவனித்து வந்தனர். ஆனால், சிகிச்சைக்கு அவர் உடல் ஒத்துழைக்காமல் உயிர் பிரிந்தது.அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
இந்நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சங்கரய்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது முதல்வருடன் வந்திருந்த அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், மக்களவை உறுப்பினர்கள், டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோரும் சங்கரய்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சங்கரய்யாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், குரோம்பேட்டை மற்றும் தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அரசு மரியாதை
சங்கரய்யா மரணம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
தகைசால் தமிழர், முதுபெரும் பொதுவுடைமைப் போராளி, விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா மறைந்த செய்தியால் துடிதுடித்துப் போனேன். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் விரைந்து நலம் பெற்று விடுவார் என்றே நம்பியிருந்த வேளையில் அவர் மறைந்த செய்தி வந்து அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தது.மிக இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, 102 வயது வரை இந்திய நாட்டுக்காகவும், உழைக்கும் வர்க்கத்துக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் வாழ்ந்து மறைந்த தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கையும் தியாகமும் என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.
மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவராக இருந்தபோதே விடுதலை வேட்கையோடு மாணவர் சங்கச் செயலாளராகப் போராட்டங்களை முன்னெடுத்தவர் தோழர் சங்கரய்யா . அவரது தேசியம் சார்ந்த செயல்பாடுகளால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டு படிப்பைத் துறந்தவர். இந்தியா விடுதலை பெறுவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்னர்தான் அவர் விடுதலை செய்யப்பட்டார். இப்படிப்பட்ட விடுதலைப் போராட்ட வீரருக்கு 2021-ஆம் ஆண்டு விடுதலை நாளினை முன்னிட்டு நேரில் சென்று முதல் ‘தகைசால் தமிழர்’ விருதை வழங்கியது எனக்குக் கிடைத்த வாழ்நாள் பேறு. விருதோடு கிடைத்த பெருந்தொகையைக் கூட கரோனா நிவாரண நிதிக்காக அரசுக்கே அளித்த தோழர் சங்கரய்யாவின் மாண்பால் நெகிழ்ந்து போனேன்.
கலைஞரின் உற்ற நண்பர்
தோழர் சங்கரய்யா ஒரு சிறந்த சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்து நினைவுகூரத்தக்க பல பணிகளை ஆற்றியவர். தலைவர் கலைஞரின் உற்ற நண்பராக விளங்கிய சங்கரய்யா , தலைவர் கலைஞர் நிறைவுற்றபோது, அவரது இறுதிப்பயணத்தைக் கண்டு கண்கலங்கிய காட்சி இருவருக்குமான நட்பைப் பறைசாற்றியது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியிலும் அதன் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலுமாக இருந்து அவர் நடத்திய போராட்டங்களும், தீக்கதிர் நாளேட்டின் முதல் பொறுப்பாசிரியர் முதலிய பல்வேறு பொறுப்புகளில் ஆற்றிய செயல்பாடுகளும் தமிழகத்தின் பொதுவுடைமை இயக்க வரலாற்றில் அவரது தவிர்க்க முடியாத ஆளுமையை வெளிக்காட்டும்.
பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த இச்செஞ்சட்டைச் செம்மலுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என இந்த ஆண்டு ஜூலை 15 அன்று நான் அறிவிப்பு செய்திருந்தும், தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றை அறியாத, குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் அது நடந்தேறாமல் போனதை எண்ணி இவ்வேளையில் மேலும் மனம் வருந்துகிறேன்.
தகைசால் தமிழர், முனைவர் மட்டுமல்ல, அவற்றிற்கும் மேலான சிறப்புக்கும் தகுதி வாய்ந்த போராளிதான் தோழர் சங்கரய்யா. சிறப்புகளுக்கு அவரால் சிறப்பு என்று சொல்லத்தக்க அப்பழுக்கற்ற தியாக வாழ்வுக்குச் சொந்தக்காரர் அவர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் தோழர் சங்கரய்யாவின் மறைவு எப்போதும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது அனுபவமும் வழிகாட்டலும் இன்னும் சில ஆண்டுகள் கிடைக்கும் என எண்ணியிருந்த எனக்கு அவரது மறைவு தனிப்பட்ட முறையிலும் பேரிழப்பு.
சாதி, வர்க்கம், அடக்குமுறை, ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடிய போராளி சங்கரய்யாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், பொதுவுடைமை இயக்கத் தோழர்கள், பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலைப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக அவர் தமிழகத்துக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்,
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியைச் சேர்ந்தவர்
சுதந்திரப் போராட்ட தியாகியும், இந்திய பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா 1967, 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் மதுரை மேற்கு, மதுரை கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு வென்று 3 தடவை தமிழக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.
இடதுசாரி இயக்கத்தில் என்.எஸ். என்று அன்போடு அழைக்கப்பட்ட கோவில்பட்டி நரசிம்மலு–ராமானுஜம் தம்பதியினருக்கு 1921-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி மகனாகப் பிறந்தவர் சங்கரய்யா.
மாணவர் பருவத்திலேயே கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். போலீசாரின் தடியடிகளையும் எதிர்கொண்டார். தலைமறைவு வாழ்க்கையையும் மேற்கொண்டார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசை அழைத்து சுதந்திரப் போராட்டத்துக்காக கூட்டத்தை நடத்திய சிறப்பு அவருக்கு உண்டு. 1938-ம் ஆண்டு இந்தித் திணிப்பை எதிர்த்து மாணவர்களுடன் போராட்ட பயணத்தை தொடங்கினார்.
அதன்பின் 1939-ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலித்தார். இதற்காக அவர் முன்னெடுத்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவு போராட்டம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் 1941-ல் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டத்துக்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்தியும், மொழிவாரி மாநிலமாக பிரித்தபோது தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்.
கம்யூனிஸ்டு கட்சியில் 1943-ல் மதுரை மாவட்ட கம்யூனிஸ்டு செயலாளராக பொறுப்பேற்று, பின்னர் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1964-ல் உருவானபோது இருந்த 36 முக்கிய தலைவர்களில் சங்கரய்யாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் 1995- 2002-ம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக பதவி வகித்தார்.
தமிழகத்தில் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தார். தொழிலாளர்களின் எண்ணற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார்.
சாதி மறுப்புத் திருமணம்
கொள்கைப் பிடிப்புடன் சாதி மறுப்பு திருமணம் பற்றி மேடையில் மட்டும் பேசாமல் தன்னுடைய குடும்பத்திலேயும் அதை நிறைவேற்றி காட்டினார்.
1997-ல் மதுரையில் தீண்டாமை ஒழிப்பு மாநாடு, 1998-ல் மத நல்லிணக்க பேரணியை கோவையில் நடத்தினார்.
தன்னுடைய வாழ்நாளில் 8 ஆண்டுகள் சிறையில் கழித்து இருக்கிறார். சிறை வாழ்க்கையில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர், முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் ஆகியோருடன் நட்பு கொண்டார்.
அதேபோல சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் ராஜாஜி, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் நெருக்கம் கொண்டவர்.
இவருக்கு தமிழக அரசு தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவப்படுத்தி இருந்தது. இந்த விருதை தமிழக அரசு அறிமுகப்படுத்தியபோது முதன்முதலாக அந்த விருதை 2021-ல் சங்கரய்யா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.