– அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி.சுப்பிரமணியம்
பு.கஜிந்தன்
இன்றைய சூழலில் மீனவ மக்கள் கடும் இன்னல்கள் மற்றும் அந்நிய நாடுகளின் ஆக்கிரமிப்புக்கு மத்தியில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவரும், அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளருமான எம்.வி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாதகலில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அலோசிக்கப்படுகிறது. அதேவேளை இந்திய இழுவைப் படகுகளின் ஆக்கிரமிப்பை தடுப்பதற்கு அரசால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதைத்தாண்டி உள்ளூர் இழுவைப் படகுகளின் தாக்கம் பெரிதாக இருக்கின்றது. அதேவேளை தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் அவர்களுடைய வருகை மிகவும் மிகையாகவும் இங்குள்ள மீன்வளங்களை வாரிச்செல்லும் நோக்கத்திலே சகலதும் நடைபெற்றுவரும் வேளையில் நேற்றையதினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் வடக்கில் மீன்பிடி உற்பத்திக்கும் மீன்பிடியை அபிவிருத்தி செய்வதற்குமென 500மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு அனுமதியை கொடுத்துவிட்டு வெளிநாட்டு படகுகள் இங்கு வந்து ஆக்கிரமித்து மீனை அள்ளிக்கொண்டு போவதற்கு அனுமதி அளித்துவிட்டு எமது மீன்பிடி அபிவிருத்திக்காக நிதியை ஒதுக்கியிருப்பது மிகவும் சிந்திக்கவேண்டிய விடயமாக காணப்படுகின்றது.
அதேவேளை 30 வருடங்களுக்கு மேலாக போரினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இதுவரை ஒரு ஆக்கபூர்வமான நிவாரணமோ அல்லது இழப்பீடுகளோ வழங்கப்படாத நிலையில் மீனவர்களுக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கியிருப்பது எங்களை சிந்திக்க வைத்துள்ளது.
இது இங்கே அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காகவா அல்லது வெளிநாட்டு சக்திகளை இங்கே கொண்டுவந்து அவர்களுடைய இருப்புகள் மற்றும் அவர்களுடைய நிலையங்களை பலப்படுத்துவதற்காகவா என்று தெரியவில்லை. இந்த 500மில்லியன் ரூபா எதற்காக ஏன் இப்போது ஒதுக்கியிருக்கின்றார்கள் என்ற விபரத்தை நாம் தெளிவாக அறிந்த பின்னர் தான் இதற்கான முடிவுகளை எட்டவேண்டும். இந்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலே இதுவுமொரு சந்தேகமான விடயமாக பார்க்கப்படுகிறது.
இங்கே மீனவர்களுக்கு நிறைய பிரச்சினைகள் காணப்படுகிறது. எனவே அவற்றை முதலில் நிவர்த்தி செய்துவிட்டு இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 500 மில்லியன் ரூபாயை வடக்கிலுள்ள மீனவர்களுக்கு முழுமையாக பயன்படுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்.