தெல்லிப்பழை, கட்டுவன் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஊரான் கூடையில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் மூன்று பிள்ளைகளுடன் தனிமையில் வசித்த பெண்ணைத் தாக்கிக் கொள்ளையிடவும், அவரைக் கொலை செய்யவும் முயன்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் நடந்துள்ளது. மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் முகமூடி அணிந்து, கைகளுக்கு கையுறை அணிந்து கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
மறைந்திருந்த கொள்ளையர்கள் இயற்கை உபாதைக்குச் சென்ற பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிக் கொள்ளையிட முயன்றுள்ளனர்.
பெண்ணை வீட்டுக்குள் கொண்டு செல்ல முயன்றபோது, பெண் கொள்ளையர்களுடன் முரண்பட்டுத்தன்னைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது கொள்ளையிட வந்தவர்களில் ஒருவரின் முகமூடியை அகற்றி பெண் அவர்களை இனங்கண்டுள்ளார்.
அதையடுத்து பெண்ணை அவர்கள் கொல்ல முயன்றுள்ளனர். ஆயினும் பெண் அவர்களிடம் இருந்து ஒருவாறு தப்பித்து வீட்டுக்குள் ஓடியுள்ளார். முகமூடி கழன்றதை அடுத்து கொள்ளையர்களும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
கழுத்தில் காயங்களுக்குள்ளான குடும்பப் பெண் தெல்லிப்பழை மருத்துவ மனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒரு வாரத்துக்கு முன்னர் அந்த வீட்டில் இருந்த எரி வாயு சிலிண்டர் திருடப்பட்டிருந்தது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.