தீபாவளி தினத்தன்று,யாழ் பண்ணை வெளியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். வழமையாக வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் அவ்வாறு ஜனங்கள் கூடுவதுண்டு. ஆனால் தீபாவளி தினத்தன்று விசேஷமாக ஜனங்கள் கூடினார்கள். கொழும்பை மையமாகக் கொண்ட “தயா ரேடிங் கொம்பனி” என்று அழைக்கப்படும் ஒரு நிறுவனம் யாழ். பண்ணை வெளியை நிர்வகிப்பதற்கான கொன்ட்ராக்டை மாநகர சபையிடமிருந்து பெற்றபின், அப்பகுதி களைகட்டத் தொடங்கி விட்டது.அங்கு வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு,சிறிய சிறிய கடைகள் திறக்கப்பட்டு,அப்பகுதி ஒரு பொழுது போக்கு வெளியாக மாற்றப்பட்டிருக்கிறது.
ஒருபுறம் பண்ணை வீதியில், மண்டை தீவு வரையிலும் தம் உடல் எடையைக் குறைப்பதற்காக நடக்கும் ஆண்களும் பெண்களும். இன்னொரு புறம் கடற்கரையில் பொழுதுபோக்க வரும் மக்கள். இப்படியாக அந்தப் பகுதி வார இறுதி நாட்களில் ஜனத் திரளாகக் காணப்படும். விஷேசமாக தீபாவளி தினத்தன்று அங்கு வழமையை விட அதிகமாக ஜனங்கள் கூடினார்கள்.
பண்ணை வெளியில், மட்டுமல்ல யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகே உள்ள பழைய பூங்கா இப்பொழுது புதிய பூங்காவாக மாற்றப்பட்டிருக்கிறது. பழைய பூங்காவை அழித்தமை என்பது ஒரு மரபுரிமைப் படுகொலை. அதைத் தனியாக ஆராய வேண்டும்.அதேசமயம் புதிய பூங்காவில் அப்பகுதியைச் சேர்ந்த பெருந் திரளானவர்கள் மாலை வேளைகளில் கூடுவார்கள்.
யாழ்ப்பாணத்தில் அவ்வாறான கடற்கரைகள்,பொழுது போக்கும் இடங்களை நோக்கிக் குவியும் மக்களின் தொகை அதிகரித்து வருகின்றது. இயக்கச்சியில், நாவற் குழியில், பூநகரியில் என்று பல்வேறு இடங்களிலும் அவ்வாறு பொழுது போக்கு மையங்கள், உல்லாச பயணத்தலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மக்கள் ஓய்வு கிடைக்கும் நாட்களில் அப்பகுதிகளை நோக்கிக் குவிகிறார்கள்.
தாயகத்தில் மட்டுமல்ல,புலம்பெயர்ந்த மக்கள் மத்தியிலும் கொண்டாட்டங்களுக்கும் விருந்துகளுக்கும் குறைவில்லை. புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒருவிதத்தில் தாயகத்தின் நீட்சிதான். அதே சமயம் தாயகத்தின் அரசியற் பொருளாதார ராணுவச் சூழ்நிலையும் புலம்பெயர்ந்த நாடுகளின் சூழ்நிலையும் ஒன்றல்ல. 2009க்குப் பின் உடனடுத்து வந்த ஆண்டுகளில் தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டத்தின் அஞ்சலோட்டக் கோல் புலம்பெயர்ந்த தமிழர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்ற ஒரு தோற்றம் எழுந்தது. இன்றுவரையிலும் தோல்வியை ஒப்புக் கொள்ளாத ஒரு சமூகமாக, புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் ஆங்காங்கே எதிர்ப்பைக் காட்டி வருகின்றது. ஆனால் அதற்காக புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆண்டு முழுவதும் போராடிக்கொண்டிருக்க வேண்டும்,ஆண்டு முழுவதும் துக்கப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும், ஒரு நினைவு நாளையும் விடாமல் அனுஷ்டிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
அண்மையில் கனடாவில் நடந்த சிட் சிறீராமின் இசை நிகழ்ச்சிக்காக இலங்கைக் காசில் பல கோடி ரூபாய்கள் புரண்டன. கனடாவில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் பொழுதுபோக்கிற்காக அடிக்கடி இந்தியக் கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சிகளை ஒழுங்குப்படுத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளில் புரளும் பணத்தின் தொகை பிரம்மாண்டமானது. இலங்கை காசில் அது மிகப்பெரிய முதலீடு. புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழ்க்கையைக் கொண்டாடுகிறார்கள். சந்தோஷமாக இருக்கிறார்கள். அதைப் பார்த்துவிட்டுத்தான் நாட்டிலிருந்து ஒரு தலைமுறை இப்பொழுது வேகமாகப் புலம்பெயர்ந்து வருகின்றது.
அதே சமயம் நினைவு நாட்களை விமரிசையாக அனுஷ்டிப்பதும் புலம்பெயர்ந்த தமிழர்கள்தான். நீதிக்கான போராட்டத்தில் தீவிரமாக செயல்படுவதும் புலம்பெயர் தமிழர்கள்தான். இதை எப்படி விளங்கிக் கொள்வது?
புலம் பெயர்த்து வாழும் களச் சூழல் வேறு. தாயகக் களச் சூழல் வேறு. தாயகத்தில் நீதிக்காகப் போராடும் ஒரு மக்கள் கூட்டம் புலன்களை அடக்கி, சுகபோகங்களைத் துறந்து போராடினால் அந்த போராட்டம் உன்னதமானதாகவும் வேகமானதாகவும் இருக்கும் என்பதில் மறு கருத்துக்கு இடமில்லை.தியாகத்தின் அளவே போராட்டத்தின் வேகத்தைத் தீர்மானிக்கின்றது. ஆனால் அது யுத்த காலத்தில் இருந்தது போல இப்பொழுது இருக்காது என்பதுதான் இங்குள்ள பிரச்சினை. யுத்த காலத்தில் வாழ்க்கை நெருக்கடியானதாக இருக்கும். சமூகம் காவலரண்களால் மூடப்பட்டிருக்கும். அக்காலகட்டத்தில் கொண்டாட்டங்களுக்கு அடிப்படையான வரையறைகள் இருக்கும். ஆனால் ஆயுத மோதல்கள் இல்லாத ஒரு சமூகத்தில் குறிப்பாக, யுத்த வெற்றிகளின் மூலம் திறந்து விடப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் நிலைமை வேறாக இருக்கும். அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நிலைமை தாயகத்துக் கள யதார்த்தத்துக்குப் புறத்தியானதாகவே இருக்கும்.
எனவே இங்கு கள தார்த்தங்களைக் கவனத்தில் எடுக்க வேண்டும். போர் வெற்றிகளின் மூலம் திறந்து விடப்பட்ட ஒரு சமூகத்தை யார் யாரோ கவரப் பார்க்கின்றார்கள். யார் யாரோ வழிநடத்தப் பார்க்கின்றார்கள். யார் யாரோ தங்களுடைய நிகழ்ச்சி நிரல்களின் கீழ் இழுத்துக் கொண்டு போக பார்க்கின்றார்கள். அந்த மக்களை நீதிக்கான போராட்டத்தில் ஒரு மையத்தில் குவிப்பதற்கு அரசியல் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் மேலும் தீவிரமாக உழைக்க வேண்டியிருக்கிறது என்பதைத்தான் அண்மைக்கால நிலைமைகளும் அவற்றின் மீதான விவாதங்களும் நமக்கு உணர்த்துகின்றன.
கலைஞர்கள் படைப்பாளிகளுக்கு கட்டளையிடும் கலாச்சார போலீசாரை “கலாச்சார கொமிசார்கள்” என்று பகிடியாக அழைப்பதுண்டு. கொமிசார் என்ற பதவி நிலை ரஷ்ய புரட்சியின் பின் ரஷ்ய ஆட்சிமுறையில் காணப்பட்டது. இப்பொழுது தமிழ்ச் சமூகத்திலும் தங்களைத் தாங்களே கலாச்சாரக் கொமிசார்களாக பிரகடனப்படுத்திக் கொண்டவர்களும் தங்களை தாங்களே ஆயுதப் போராட்டத்தின் வாரிசுகளாகப் பிரகடனப்படுத்தி கொண்டவர்களும் அதிகரித்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்கள் அவர்களுக்கு வசதியான மேடைகளை அமைத்துக் கொடுக்கின்றன. பாதுகாப்பான இறந்த காலத்தை பெற்றவர்களெல்லாம் நிகழ்காலத்தின் பேச்சாளர்களாக மாறிவிட்டார்கள். அசிங்கமான, அருவருப்பான சொந்த வாழ்க்கைப் பின்னணியைக் கொண்ட பலர் சமூக வலைத்தளங்களில் கலாச்சாரக் காவலர்களாகப் பூதக்கண்ணாடிகளோடு திரிகிறார்கள். சில பாடசாலைகளில் ஆசிரியர் தினக் கொண்டாட்டங்கள் மற்றும் அதுபோன்ற ஏனைய கொண்டாட்டங்களில் சினிமாப் பாட்டுக்கு ஆசிரியர்கள் ஆடுவதை ஒரு குற்றமாகக் காட்டுகிறார்கள்.
ஆனால் தமிழ்ச் சினிமாவில் இருந்து தமிழ் மக்களின் வாழ்க்கையை பிரித்துப் பார்க்க முடியுமா ?அப்படி என்றால் கேபிள் தொலைக்காட்சிகளையும் ஏனைய சற்ற லைற் தொலைக்காட்சிகளையும் இழுத்து மூட வேண்டும். ஈரானில் அப்படித்தான் நிலைமை இருந்தது.அண்மையில் நேபாளம் சீனாவின் கைபேசிச் செயலி ஒன்றைத் தடை செய்தது. சீனாவும் அதுபோல மேற்கத்திய நாடுகளை மையமாகக் கொண்ட இலத்திரனியல் செயலிகளை தடை செய்திருக்கிறது.
தமிழ் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக சினிமா எப்பொழுதோ மாறிவிட்டது. எனவே ஆட்டம் பாட்டம் என்று வரும் பொழுது சினிமாப் பாடல் தான் வரும். பதிலுக்கு வேறு பாடல்களை நாட்டில் யாராவது தயாரிக்கின்றார்களா? இல்லையே. இதுதான் பிரச்சினையே.
பொதுவாக ஜெனரஞ்சகமானது புத்திசாலித்தனமானதாக இருப்பதில்லை. அதற்கு மிகக் கூர்மையான ஒரு உதாரணத்தை இங்கு எடுத்துக் காட்டலாம். தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மணிவண்ணனும் அவரைப் போல சிந்திக்கும் ஈழ அபிமானிகளும் இணைந்து ஒரு கட்டமைப்பை உருவாக்கி, அதன் மூலம் சில இணையச் சந்திப்புகளை ஒழுங்குபடுத்தினார்கள். அவ்வாறு நிகழ்த்தப்பட்ட ஒரு சூம் சந்திப்பின் காணொளி யூ டியூப்பில் இப்பொழுதும் இருக்கிறது. ஆனால் அந்தக் காணொளியை பார்த்தவர்களின் எண்ணிக்கை 1002 ஐத் தாண்டவில்லை.
சீரியசானதை புறக்கணிக்கின்ற, அல்லது ஜனரஞ்சகமானதை நோக்கி எடுபடுகின்ற ஒரு போக்கு தமிழ் சமூகத்தில் எப்பொழுதும் இருந்தது. இப்பொழுது அரசியல் தலைமைத்துவம் இல்லாத வெற்றிடத்தில், பண்பாட்டுத் தலைமைத்துவம் இல்லாத வெற்றிடத்தில், மதத்தின் இடத்தை தொழில்நுட்பம் கைப்பற்றியிருக்கும் ஒரு காலகட்டத்தில், தமிழ் மக்களை தேசமாக திரட்டுவதற்குரிய எந்த ஒரு கட்டமைப்பும் இல்லாத வெற்றிடத்தில், தமிழ்ப் பொதுப் புத்தியை கவர்ந்திழுப்பதற்கு பலரும் முயற்சிக்கிறார்கள்.
சினிமா ஜனரஞ்சகமானது. குறிப்பாக தமிழ் வணிக சினிமா ஒரு கனவுத் தொழிற்சாலை. அங்கு உற்பத்தி செய்யப்படும் கனவுகள் பொதுப் புத்தியை அவமதிப்பவை; பொதுப் புத்தியைத் திசை திருப்புபவை; பொதுப் புத்தியை பிழையாக வழிநடத்துபவை. எனவே,பொதுப் புத்தி எவ்வாறு சிந்திக்க வேண்டும்? செயல்பட வேண்டும்? என்று விரும்புகின்றவர்கள் அப்பொதுப் புத்தியை வசப்படுத்தும் கலை இலக்கிய வடிவங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். பரவலாக்க வேண்டும்.
பூகோள மயமாதலுக்கு எதிராக, உள்ளூர்ப் பண்பாட்டை; உள்ளூர்ப் பழக்க வழக்கங்களை; உள்ளூர் உணவை; உள்ளூர் வழிபாட பலப்படுத்த வேண்டும். ஆனால் அவ்வாறெல்லாம் சிந்தித்து பொது புத்தியை வழிநடத்தத் தக்க கட்சிகளோ கலை பண்பாட்டு அமைப்புகளோ தமிழ் மக்கள் மத்தியில் உண்டா? இல்லையே. பொது புத்தியை வழிநடத்துவது என்றால் முதலில் பொதுவான ஒரு கட்டமைப்பு வேண்டும். அது பலமான கட்டமைப்பாகவும் இருக்க வேண்டும். பொதுப் புத்தி எப்பொழுதும் பொழுதை எப்படிச் சந்தோஷமாகப் போக்கலாம் என்றுதான் சிந்திக்கும். ஆனால் அந்த சமூகத்துக்கு வழிநடத்துபவர்கள்தான் பொது புத்தியை சீரியஸானதின் மீதும் உன்னதமானவைகளின் மீதும் நாட்டம் கொள்ளச் செய்யவேண்டும்.
அதாவது, கைபேசிச் செயலிகளின் காலத்தில், பொழுதுபோக்கிககளின் காலத்தில், செயற்கை நுண்ணறிவின் காலத்தில்; எப்படித் தேசமாகத் திரள்வது என்று சிந்திப்பது. அதற்கு கலையை எப்படி ஒரு கருவியாகப் பயன்படுத்துவது என்று சிந்திப்பது.