பாவக் கதைகள் இணைத்தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார் காளிதாஸ் ஜெயராம். அந்தத் தொடர் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுத்தந்தது. லோகேஷ் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் கமலின் மகனாக சிறிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் காளிதாஸின் நடிப்பு கவனம் ஈர்த்தது. தற்போது “அவள் பெயர் ரஜ்னி” என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார். நவரசா பிலிமிஸ் தயாரிப்பில் வினிஸ் ஸ்காரியா வர்கீஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. நமீதா பிரமோத் நாயகியாகவும் ரெப்பா மோனிகா, அஸ்வின் குமார், கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். கிரைம் திரில்லர் பாணியில் உருவான இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.