பு.கஜிந்தன்
நேற்றையதினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இருந்து மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மற்றும் மூன்று உறுப்பினர்களுக்கு நீதிமன்றில் தோன்றுமாறு அழைப்பு கட்டளை ஒன்று விடுக்கப்பட்டிருந்தது.
மானிப்பாய் பொலிஸாரினால் நீதிமன்றில் ஒரு விண்ணப்பம் செய்யப்பட்டது. அதாவது இந்த நான்கு நபர்களும் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் இறந்த உறுப்பினர்களுடைய நினைவுகூரல் நிகழ்வுகளை அவர்கள் செய்யப் போகின்றார்கள் என்றும், அதனாலே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்றும், மானிப்பாய் பிரதேச சபையின் பூங்கா ஒன்றில் இந்த நிகழ்வுகளை செய்யப் போகின்றார்கள் என்றும், அதற்கு தடையுத்தரவை வழங்குமாறும் ஒரு கட்டளையை கோரி இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக கட்டளை எதையும் வழங்காத நீதிமன்று நேற்றையதினம் மன்றிலே தோன்றுமாறு அழைப்பு விடுத்திருந்தது. அதனடிப்படையில் நேற்றையதினம் முன்னாள் தவிசாளர் தவிர்ந்த ஏனைய மூன்று உறுப்பினர்களும் மன்றில் சமுகமளித்தனர் இருந்தனர். அவர்கள் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உட்பட பட சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.
பொலிஸாரின் விண்ணப்பங்களை நிராகரிக்கின்ற விதமாக சட்டத்தரணிகள் சமர்ப்பணங்களை செய்திருந்தனர். அவர்கள் எந்தவிதமான பயங்கரவாத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என மன்றுக்கு தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த உறவுகளை அஞ்சலிப்பது எந்தவித தவறும் இல்லை என மன்றுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
அதேநேரம் பொலிஸாரின் செயற்பாடானது எதிர்வரும் கார்த்திகை விளக்கீட்டினை கூட பயங்கரவாதமாக சித்தரிக்கின்ற ஒரு தன்மையை கொண்டது. பொலிஸாரின் விண்ணப்பத்திற்கு ஏற்ப கட்டளை வழங்கினால் கார்த்திகை விளக்கீட்டினை அனுஷ்டிப்பவர்கள் கூட தண்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என மன்றிற்கு எடுத்துக் கூறப்பட்டது.
பொலிஸாரின் விண்ணப்பம் குறித்து கட்டளை ஒன்றினை ஆக்குவதற்கு நீதிமன்றம் திகதி ஒன்றினை நியமித்திருக்கிறது. எதிர்வரும் 20.11.2023 அன்று இந்த வழக்கு கட்டளைக்காக நியமிக்கப்பட்டுள்ளது.