கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள மீனடம் பகுதியை சேர்ந்தவர் வினோத் தாமஸ்(வயது 47) பிரபல நடிகர். ஐயப்பனும் கோஷியும், ஒரு முறை வந்து பார்த்தாயா, ஹேப்பி வெட்டிங், ஜூன், அயாள் சசி உள்பட ஏராளமான மலையாள படங்களின் நடித்துள்ளார். இது தவிர மலையாள டிவி தொடர்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வினோத் தாமஸின் கார் கோட்டயம் பாம்பாட்டி அருகே உள்ள ஒரு மது பாரில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்போது காருக்குள் வினோத் தாமஸ் இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து பாம்பாடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து நடிகர் வினோத் தாமசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் காருக்குள் தொடர்ந்து ஏசி
இயக்கப்பட்டதால் அதிலிருந்து வெளியான விஷப்புகை மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.