மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் விரைவில் தொடங்கயிருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் குறித்து பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. 2020 இல் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் 2 திரைப்படம் முதல் ஷெட்யூல்டிலேயே கைவிடப்பட்டது. அந்தப் படத்தின் தயாரிப்பாளரான விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் இடையில் பட்ஜெட் விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் விலகினார்.
பிறகு ஆன்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கினார். பொருளாதார நெருக்கடி காரணமாக அப்படம் பல வருடங்களாக வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில், மிஷ்கின் தொடர்ச்சியாக படங்களில் நடித்தார். இதற்கிடையே, தனது சகோதரர் ஜி ஆர் ஆதித்யா இயக்கிய ‘டெவில்’ படத்துக்கு இசையமைத்தார். பிசாசு 2 திரைப்படத்தால், மிஷ்கினுக்கு விளைந்த நல்ல விஷயம் விஜய் சேதுபதி என கூறலாம். மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க விஜய் சேதுபதியே விரும்பிப் போய் கேட்க, பிசாசு 2 படத்தில் அவருக்காக சின்ன வேடம் உருவாக்கப்பட்டது.
தற்போது விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படத்தை மிஷ்கின் இயக்க உள்ளார். தாணு இதனை தயாரிக்கிறார். படத்தின் கதை எழுதும் பணியில் மிஷ்கின் தீவிரமாக உள்ளார். இந்தப் படத்துக்கு மிஷ்கின் இசையமைப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. டெவில் படத்தின் இசை பரவலான கவனம் பெற்ற நிலையில் இந்த முடிவை மிஷ்கின் எடுத்துள்ளார். தனது படத்துக்கு தன்னைவிட வேறொருவர் இசையில் பங்களிப்பு செலுத்திவிட முடியாது என்ற நம்பிக்கையில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இயக்குநர், இசையமைப்பாளர் என பல்திறப்பட்ட திறமைகளை இந்த படத்தின் மூலம் மிஸ்கின் வெளிப்படுத்த உள்ளார்.