பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என இலங்கை நாடாளுமன்றத்தில் சித்தார்த்தன் எம்.பி நேற்றையதினம் தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
வரவுசெலவுத் திட்டம் சம்பந்தமான சில கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பு இன்று வட்டுக்கோட்டை பகுதியிலே நடந்திருக்கக் கூடிய இறப்பு தொடர்பான ஒரு விடயத்தை இந்த சபையிலே கூறுவதற்கு நான் விளைகிறேன்.
முதலாவதாக, இந்த மாதம் எட்டாம் திகதி நாகராஜா அலெக்ஸ் என்ற 28வயதான ஒரு இளைஞர் சித்தங்கேணி பகுதியிலே வட்டுக்கோட்டைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரை 8ம் திகதி பிடித்தவர்கள் பின்பு 12ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்படி நீதிபதி அவர்கள் கட்டளையிட்டு 12ம் திகதி தொடக்கம் 16ம் திகதிவரையும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்பு அவர் வைத்தியசாலையால் விடுவிக்கப்பட்ட பின்பு அவரை யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் கொண்டுபோய் வைத்தார்கள். மீண்டும் அவர் 19ம் திகதி நோய்வாய்ப்பட்டு விட்டார் என்ற காரணத்திற்காக மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டுவந்தபோது கொண்டுவந்து ஏறக்குறைய ஒரு மணித்தியாலத்தில் அவர் இறந்துவிட்டார்.
அவரை பிரேத பரிசோதனை செய்த வைத்திய அதிகாரி மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார் அது ஒரு இயற்கை மரணமல்ல, அவருக்கு கிட்னியிலே பிரச்சினை, அடித்த காயத்தால் ஏற்பட்ட வருத்தங்கள் இருக்கின்றது. பல அடிகாயங்கள் இருக்கின்றது ஆகவேதான் அவர் இறந்திருக்கிறார் என்று சொல்லியிருக்கின்றார்.
இதன் காரணமாக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்கள். இந்த இடமாற்றம் என்பது, சாதாரணமாக தமிழ் பகுதிகளிலே இப்படியான நிலைமைகள் நடந்துவிட்டால் இடம் மாற்றுவதும் அதை மறந்து விடுவதும் இப்படியான ஒரு நிலைப்பாடே தொடர்ந்து இருந்துகொண்டு வருகின்றது.
இதற்கு ஒரு சரியான விசாரணை வைக்கப்பட்டு அந்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலேயொழிய இப்படியான நிலைமைகளை ஒருபோதும் திருத்த முடியாது. நிற்பாட்டவும் முடியாது. இது ஒரு மிகப் பாரதூரமான விசயம் என்பதைக் கருத்திற்கொண்டு அரசாங்கம், முக்கியமாக பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
ஜனாதிபதி அவர்களும் இதில் தலையிட்டு நிச்சயமாக உடனடியான ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த குடும்பம் மிக வறிய குடும்பம். அவரை முதலில் மரம் கடத்துகிறார் என்று பிடிக்கப்பட்டது. இப்போது களவு என்று பொலிசார் சொல்லுகிறார்கள். இப்படியான விசயங்கள் அங்கு நடந்துகொண்டிருகின்றது. இவைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.