ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள இஷானியா கலாமன்றத்தில் கடந்த 02.09.2022 வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு மேற்படி நிகழ்வு ஆரம்பமானது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலாளர் சி.ஜெயக்காந்தும். சிறப்பு அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி பண்டிதர் ம.ந. கடம்பேசுவரனும் கலந்து கொண்டனர். இஷானியா கலாமன்ற நிறுவுநர் வை.கமலராஜா ஒழுங்கமைப்பில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
தொடக்க நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். சுடர் ஏற்றல் அகவணக்கம் என்பன இடம்பெற்றதனைத் தொடர்ந்து வரவேற்புரையினை ஆசிரியர் பாஸ்கரன் வழங்கினார். ஆசியுரையினை சிவஸ்ரீ நவரத்தினம் வழங்கினார்.
பிரதம அதிதி உரையினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்த் நிகழ்த்தினார். தொடர்ந்து சாதனையாளர் மதிப்பளிப்பு இடம் பெற்றது. விளையாட்டுச் சாதனையாளர் ம.அகிலத்திருநாயகி, மனிதநேயச் செயற்பாட்டாளர் ச.சுந்தரலிங்கம், அறநெறிச் செயற்பாட்டாளர் மா.பற்றிமா இராஜேஸ்வரி, குத்துச்சண்டை வீராங்கனை யோ.டிலைக்சனா, மாற்றுத்திறனாளி பெண் முயற்சியாளர் அ.வதனா ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியை கவிஞர் ஜெயம் ஜெகன் ஒழுங்கமைத்தார். மதிப்பளிப்பு பெற்றோருக்கு பொற்கிழி வழங்கலும் இடம்பெற்றது.
தொடர்ந்து இஷானியா கலாமன்றம் நிறுவுநர் வை.கமலராஜா உரை நிகழ்த்தினார். சிறப்புரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி பண்டிதர் ம.ந. கடம்பேசுவரன் நிகழ்த்தினார். இஷானியா கலாமன்றத்தில் பாடங்களை நடாத்தவுள்ள ஆசியர்களுக்கான வாழ்த்தளிப்பு இடம்பெற்றதோடு, முல்லைத்தீவு ஊடக அமையத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து 50 குடும்பங்களுக்கான உணவுப் பொருட்கள் வழங்கப்பெற்றன. .
பிற்பகல் 02.00 மணிக்கு மாணவர்களுக்கான கற்கைகள் ஆரம்பித்தல் நிகழ்வு இடம்பெற்றது. 50 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு, அவர்களுக்கான ஆரம்ப பாடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டன. செய்யப்பட்டுள்ளன தமிழ், கணிதம், ஆங்கிலம், புல்லாங்குழல், கராத்தே, யோகா உள்ளிட்ட பாடங்களின் நேர அட்டவணை வழங்கப்பட்டது. நிகழ்வில் நூற்றுக்கணக்கான பெரியோர்களும் சிறியோர்களும் கலந்து கொண்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது