(கனடா உதயனின் சிறப்பு புலானாய்வுக் கட்டுரை)
நடராசா லோகதயாளன்
இலங்கையில் பொலிசாரால் விசாரணைக்கென்று தமிழர் ஒருவர் அழைத்துச் செல்லப்பட்டால், அவர் உயிருடன் வீடு திரும்புவது என்பது நாளுக்கு நாள் கேள்விக்குறியாக மாறி வருகிறது. வீடு திரும்புவதோ அல்லது இறைவனிடம் திரும்புவதோ கைது செய்யப்படுவபவரின் கையில் இல்லை என்கிற அச்சம் நாளுக்கு நாள் மேலோங்கி வருகிறது. அதுவே வட்டுகோட்டைப் பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு இப்போது நேர்ந்துள்ளது. துரதிஷ்டவசமாக அவர் வீடு திரும்பவில்லை. உயிரோடு பொலிசாருடன் சென்றவர் உடலாக வீடு திரும்பியுள்ளது யாழ்ப்பாணத்தில் பெரும் கவலைகளை ஏற்படுத்தி, அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இப்போது, பொலிசாரின் இரு விசேட அணிகள், மனித உரிமை ஆணைக் குழு மற்றும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் துருவித் துருவி ஆராயும் விடயமாக நாகராசா அலெக்ஸ்சின் மரணம் அல்லது கொலை என்று அவர்களது குடும்பம் மற்றும் மற்றவர்களால் கூறப்படும் விடயம் மாறியுள்ளது.
யாழ்ப்பாணம் சித்தங்கேணி வடக்கம்பரைப் பகுதியில் ஓர் வீட்டில் 16 பவுன் நகை மற்றும் 90 ஆயிரம் ரூபா களவுபோன விடயத்தில் சந்தேகத்தின் பெயரிலேயே அலெக்ஸ் கைது செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதில் முதல் மர்மம் இந்த களவு தொடர்பில் எவ்வளவு பேர் ஈடுபட்டிருந்தனர் என்பதாகும். அதிலேயே மர்மம் நீடிக்கிறது.
முதலில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் கூறியதன் அடிப்படையிலேயே மற்றொருவர் கைது செய்யப்பட்டதாகவே பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.
கடந்த 2023-11-08 ஆம் திகதி நாகராசா அலெக்ஸ் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்து பொலிஸ் நிலையம் அல்லாத ஓர் தனியான இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதிலும் ஒரு மர்மல் நிலவுகிறது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் ஏன் பொலிஸ் நிலையம் அல்லாத ஒரு இடத்தில் தடுத்து வைக்க்ப்பட வேண்டும்?
அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த இடம் பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள ஓர் நீர்தொட்டியுடன் கூடியதான அறை எனப்படுகின்றது. அதுவும் அந்த இடம் தனியாருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்த இடம் ஏன் தேர்ந்தெடுக்கபப்ட்டது. அதிலும் மர்மம் விலகவில்லை.
அவ்விருவரும் அந்த இடத்திலேயே இம்மாதம் 8 ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையில் தடுத்து வைக்கப்பட்டு சத்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று நம்பத்தகுந்த செய்திகள் கூறுகின்றன.
இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளானோரை 2023-11-11 கைது செய்ததாக பதிவு பொலிஸ் பதிவேட்டில் பதிவு செய்து 2023-11-12 ஆம் திகதி அன்று பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்துவதற்காக முதலில் அதேதினமான 2023-11-12 ஆம் திகதி தெல்லிப்பளை சட்ட வைத்திய அதிகாரியிடம் வட்டுக்கோட்டைப் பொலிசார் கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்ட தினம் எது என்பதிலும் மர்மம் நீடிக்கிறது.
தெல்லிப்பளை சட்ட வைத்திய அதிகாரி சந்தேக நபரின் உடலில் வெளித் தெரியும் காயத்தை குறிப்பிட்டு வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு எழுதியுள்ளார். அதன் பின்பு நீதவான் முன்னலையில் ஆஜர் செய்தபோது நீதவான் தடுப்புக் காவலிற்கு அனுமதி வழங்கியதோடு உடன் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் கட்டளையிட்டுள்ளார்.
இதன்பெயரில் 2023-11-12 அன்றே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 28ஆம் விடுதியில் நாகராசா அலெக்ஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் மருத்துவரினால் கை நரம்புகள் சேதமடைந்துள்ளதாக எழுதப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அவரது கை நரம்புகள் எப்படி, ஏன் சேதமடைந்தது என்பதும் மர்மமே.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2023-11-12 அனுமதிக்கப்பட்ட நாகராசா அலெக்ஸ் மற்றும் அவருடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மற்றொருவரும் 2023-11-16 அன்று போதனா வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு சிறைச்சாலை அதிகாரிகள் அழைத்துச் சென்று யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ளனர்.
மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படும் அளவிற்கு அவர்கள் பூரண குணமடைந்து விட்டார்களா என்பதும் மர்மமாகவே உள்ளது.
2023-11-16 அன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறி சிறைக்கு அழைத்துச் செல்லபப்ட்டவர் 2023-11-18 அன்று மாலையில் சிறையிலே தனக்கு இயாலாமல் உள்ளது என்ற தகவலை தெரிவித்தபோது சிறைச்சாலை மருத்துவர் பார்வையிட்டுள்ளார். சிறை திரும்பிய இரு நாட்களில் ஏன் அல்லது எப்படி உடல்நிலை மோசமடைந்தது? அதுவும் மர்மமே.
2013-11-19 ஆம் திகதி காலை நாகராசா அலெக்ஸிற்கு சிறைச்சாலையில் நோய் அதிகரித்ததன் காரணமாக மீண்டும் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் இருந்தபோதும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் முன்னரே அவரது உயிர் பிரிந்துள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அவர் முதல் நாளே உடல்நிலை சரியில்லை என்று கூறிய நிலையில், அவர் உரிய நேரத்தில் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா, அதற்கு முன்னர் சிறைச்சாலை வைத்தியர் வந்து கவனித்தாரா, அவருக்கு உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால், ஏன் முன்னதாக அவர் மருத்துவமனையிலிருந்து மீண்டும் சிறைச்சாலைக்கு திருப்பி அழைத்துவரப்பட்டார் என்பதால் விளக்கப்பட வேண்டிய மர்மங்களின் பகுதியாகவே உள்ளது. வைத்தியசாலைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அவரது உடலில் இருந்து உயிர் பிரிந்துள்ளதாகவே வைத்தியசாலைத் தரப்பு தெரிவிக்கின்றது.
இதனிடையே உயிரிழந்த இளைஞனையும் அவருடன் இருந்த மற்றையவரும் வட்டுக்கோட்டைப் பொலிசாரின் தடுபில் இருந்த சமயம் ஓர் ஆயுள்வேத வைத்தியரிடம் அழைத்துச் சென்றதாக தற்போது கண்டறியப்படுகின்றது. அதற்கு முறையாக குடும்பத்தார் மற்றும் அலோபதி மருத்துவர்களிடம் ஆலோசிக்கப்பட்தா? மர்மம் நீடிக்கிறது.
பொலிஸ் காவலில் மரணமடைந்த அல்லது கொலை செய்யபட்ட நாகராசா அலெக்ஸை பொலிசார் 2023-11-08 ஆம் திகதி அழைத்துச் சென்றபோதும் 11 ஆம் திகதியென பொலிசாரின் பதிவேட்டில் பதியப்பட்டிருந்தாலும் 2023-11-08 அன்றே பிடித்துச் சென்றமைக்கான சி.சி.ரி கமராவின் வீடியோ ஆதாரங்களை தற்போது இரு விசாரணைப் பிரிவினர் மற்றும் மனித உரிமை ஆணைக்குழு என்பன எடுத்துச் சென்றுள்ளனர். அறிவியல் ரீதியான ஆதாரம் இப்போது சிக்கியுள்ள நிலையில், பொலிசார் எப்படி அவர்கள் இருவரும் 11ஆம் திகதி தான் பிடித்துச் செல்லப்பட்டனர் என்று கூறப்படுவதில் என்ன மர்மப் பின்னணி உள்ளது?
இதேநேரம் உயிரிழந்த இளைஞனின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த சட்ட வைத்திய நிபுணர் இது ஓர் இயற்கை மரணம் அல்ல என்று தனது ஆய்வறிக்கையில் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். தனது உடற்கூறாய்வு அறிக்கையில் மரணமடைந்த அலெக்ஸின் உடலில் பட இடங்களில் அடிகாயங்கள் இருந்தன என்றும் தெளிவாக எழுதியுள்ளார். எனினும் இந்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறும் என்றும் கூறியுள்ளார். அவரது உடற்பாகங்கள் மேலதிக ஆய்விற்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு மர்மங்களுக்கு மத்தியில் அந்த இளைஞனை கொண்டு சென்று சித்திரவதை மேற்கொண்டதான குற்றச்சாட்டுடனும் 4 பொலிசாரின் விபரங்கள் பிரஸ்தாபக்கப்படும் நிலையில் இளைஞனின் மரணம் கொலையென வழக்கிடப்படுமா இல்லையா எனபதே தற்போதுள்ள கேள்வியாகவுள்ளதனால் நீதிமன்றின் இடைக்கால கட்டளை பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இந்த மரணம் தொடர்பிலான மர்ம முடிச்சுக்கள் அவிழும் போது அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இந்த மரணம் அல்லது கொலை குறித்த புலனாய்வு அடுத்த வாரமும் தொடரும்….