சிற்றுண்டி வழங்கி வழியனுப்பி வைத்தார், முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ரூ.2.92 கோடி மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். இந்தப் பயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.29) முகாம் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 2.92 கோடி ரூபாய் மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்களில் அரசு சிறப்பு பள்ளிகளில் பயிலும் 60 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள அச்சுற்றுலா பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளை வழியனுப்பி வைத்தார்.
ஏராளமான உள்ளூர் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், அன்னியச் செலாவணியினை ஈட்டுதல் ஆகியவற்றில் சுற்றுலாத் துறை முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத்தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடத்தில் உள்ளது. தமிழகத்தில் பல்வகையான சுற்றுலா தலங்கள், பிரம்மாண்டமான திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய பெரும் வாய்ப்புகள் அடங்கிய சுற்றுலாத்துறையை மேம்படுத்திட தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சுற்றுலா பயண திட்டங்களை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் குளிர்சாதன வசதியுடன் கூடிய வால்வோ சொகுசு பேருந்துகள், உயர்தர சொகுசு பேருந்துகள், சாதாரண சொகுசு பேருந்துகள், 18 இருக்கைகளுடன் கூடிய சிறிய ரக சொகுசு பேருந்துகள், என மொத்தம் 14 சொகுசு பேருந்துகளை இயக்கி வருகிறது.
2023–24ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கையில், திருப்பதி சுற்றுலா மற்றும் பிற சுற்றுலாக்களை இயக்குவதற்கு ஏற்படும் கூடுதல் தேவைகளை பூர்த்தி செய்ய இரண்டு குளிர்சாதன வால்வோ சொகுசு பேருந்துகள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்புக்கிணங்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 2.92 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, பூவிருந்தவல்லி – பார்வைத்திறன் குறைவுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் சானிடோரியம்– செவித்திறன் குறைவுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் தாம்பரம் சானிடோரியம் அறிவுசார் குறையுடையோருக்கான அரசு நிறுவனம் ஆகிய மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவ, மாணவிகளை தமிழகத்தின் தலைச்சிறந்த சுற்றுலா தலங்களுள் ஒன்றான மாமல்லபுரத்துக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள அச்சொகுசு சுற்றுலா பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கி வழியனுப்பி வைத்தார்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.