நடராசா லோகதயாளன்
ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவின் காஷ்மீர் பகுதியிலுள்ள இந்து பண்டிட்களின் ஆதரவு தொடரும் என அந்த அமைப்பின் மூத்த தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இந்தியத் தலைநகர் புதுடில்லிக்குச் சென்றுள்ள ஈழத்தமிழர் குழு ஒன்று பல்தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர். அவ்வகையில் காஷ்மீரிலுள்ள இந்து மக்களைப் பிரதானமாகப் பிரதிநிதித்துவபப்டும் பண்டித் மக்களின் மூத்த தலைவர்களான சுஷில் பண்டித் மற்றும் ரவீந்திர பண்டித்தையும் அவர்கள் சந்தித்தனர்.
இந்த கலந்துரையாடலின் பின்னர் தமது ஆதரவு ஈழத் தமிழர்களுக்கு தொடரும் என்று அவ்விருவரும் உறுதியளித்தனர். இந்தச் சந்திப்பிற்கு கருத்து வெளியிட்ட தமிழர் தரப்பு தெரிவித்ததாவது:
வடக்கு கிழக்கு தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் காஷ்மீரின் முக்கிய பிரமுகர்களான சுஷில் பண்டித், ரவீந்திர பண்டித் ஆகியோருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அத்தோடு, ஆழமாக ஆராய்ந்து பார்க்கின்றபோது காஷமீர் மக்களும், வடக்கு,கிழக்கு மக்களும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளும் ஒரேவகையானவையாக இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதேநேரம், இந்தக் கலந்துரையாடலின்போது தமிழர்களையும்; அவர்களின் தாயகத்தையும் பாதுகாக்க இந்தியாவிடமிருந்து பாதுகாப்பு மற்றும் நீதிக்கான ஒத்துழைப்புகளை எதிர்பார்ப்பதாக வடக்கு, கிழக்கு அரசியல், சிவில், புலம்பெயர் தரப்பினர் எடுத்துரைத்தனர்.
அத்துடன், தமிழர் தாயகத்தில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் இணைப்பு திட்டங்களை ஊக்குவித்தல், சுயநிர்ணய உரிமை மற்றும் சிவபூமியைப் பாதுகாத்தல், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இந்தியா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இவற்றுக்கான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு காஷ்மீரின் இந்து மக்கள் தயாராகவுள்ளதாகவும், தொடர்ச்சியான இருதரப்பு கலந்துரையடல்களை எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.