அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் டிசம்பர் 4 காலை 10:30 தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
அதிமுக பொது செயலாளராக இருந்த ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொது செயலாளராக அவரது தோழி வி.கே.சசிகலாவும், துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பின்னர் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் கடந்த 2017ம் ஆண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனை அடுத்து, தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, தன்னை இடைக்கால பொதுச்செயலாளர் பதிவியில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது என தெரிவித்தார். கடந்தாண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கபட்டு, சட்ட விதியில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதாகவும், இந்த மனுவை தாக்கல் செய்த போது சசிகலா உறுப்பினராக இல்லை எனவும் தெரிவித்தார். பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளரை தவிர பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் மற்றவர்களுக்கு இல்லையே, பொதுக்குழு முறையாக நடைபெறவில்லை என்றால் அடிப்படை உறுப்பினர் என்ற முறையில் வழக்கு தொடர உரிமை இருக்கிறதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அதிமுக மற்றும் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் வழக்கு தொடர உரிமை உள்ளதாகவும், ஆனால் சசிகலாவின் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் தெரிவித்தார். வாதங்கள் நிறைவடையாததால் விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். இந்த நிலையில் வி.கே.சசிகலா வழக்கில் டிசம்பர் 4ம் தேதி (திங்கள் கிழமை) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் தீர்ப்பளிக்க உள்ளனர்.