உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பா.உ த.சித்தார்த்தன் பாராளுமன்றில் கோரிக்கை
சங்கானைப் பிரதேச செயலகத்திலே அராலி தொடக்கம் பொன்னாலை வரை, ஏறக்குறை பத்து கிலோமீற்றர் அங்கு என்ன நடக்கின்றது என்றால், வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், அவர்கள் வன ஜீவராசிகள் என்பதை விட்டுவிட்டு வன வளங்கள் பாதுகாப்பு என அந்த இடங்களுக்கு ஏற்றவாறு பெயர்களை மாற்றி அதனை தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப் பார்க்கின்றார்கள். ஏறக்குறைய 354 ஏக்கர். 07 மயானங்கள், விளையாட்டுத் திடல்கள், தனியார் காணிகள் எல்லாமே அதற்குள் அடங்குகின்றது. இதுபற்றி அரச அதிபர் சங்கானை பிரதேச செயலாளரைக் கேட்டிருக்கின்றார், பொதுமக்களையும் பொது அமைப்புக்களையும் அழைத்து இது சம்பந்தமான அவர்களுடைய அபிப்பிராங்களை எடுக்கும்படி. அங்கு சென்ற எல்லோருமே அதை செய்யக்கூடாது என்றே சொல்லியிருக்கின்றார்கள்.
ஏனென்றால் பின்பு அப்பகுதி கடலில் மீன்பிடிக்கச் செல்பவர்கள் அங்கு செல்ல முடியாமல் போகும், அந்த மயானங்களை பாவிக்க முடியாமல் போகும் ஏனென்றால் வன வளங்கள் பாதுகாப்பு என்று அவர்கள் விட மாட்டார்கள்.
இது மாத்திரமல்ல, ஜனாதிபதி அவர்கள் சொல்லியிருக்கிறார், அமைச்சர் அவர்கள் சொன்னார்கள், 85ஆம் அண்டுக்கு முந்திய நிலைமைக்குத் தான் கொண்டுசெல்லப் போகின்றோம் என்று, ஆனாலும் அங்கு இந்த விடயம் நடந்து கொண்டிருக்கிறது. அவற்றை வனஜீவராசிகள் பாதுகாப்பு வலயமாக எடுப்பதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றது. நிச்சயமாக இவைகள் எல்லாம் நிற்பாட்டப்பட வேண்டும். ஏனென்றால் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் நம்பிக்கையை உருவாக்க வேண்டியது உங்களுடைய கடமை.. எனவே அதை கட்டாயமாக செய்ய வேண்டுமென்று கேட்டு கொள்ளுகின்றேன்.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் அத்துடன் பிடிக்கப்பட்டவர்கள் முழுமையாக விடுவிக்கப்படுவதுடன் கைதுகளையும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பா.உ த.சித்தார்த்தன் பாராளுமன்றில் கோரிக்கை….
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் பிடிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகின்றபோது மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் புதிதாக கைது செய்யப்படுகின்றார்கள். அண்மையில் கூட இவ்வாறு பலர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள். இறந்தவர்களை நினைவுகூருகின்ற நிகழ்வுகளிலே கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள்.
மட்டக்களப்பிலே தரவை பகுதியிலே நடாத்தப்பட்ட நிகழ்வுக்கு ஒலிபெருக்கி கட்டுவதற்குச் சென்ற தந்தையும் அவருடன் சென்ற உயர்தர வகுப்பில் படிக்கின்ற மகனும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் கடந்த வருடமும் கட்டியிருக்கின்றார்கள். இந்த வருடமும் சென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியாது இப்படியொரு நிலைமை இருக்கின்றது என்று, இதிலே அந்த மாணவர் இந்த டிசம்பரிலே உயர்தர பரீட்சை எடுக்க வேண்டியிருக்கின்றது. அவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார். அவர் மட்டக்களப்பு வந்தாறுமூலை மகா வித்தியாலயத்தில் படிக்கின்ற நியூட்டன் தனுசன் ஆவர். அவருக்கு அது ஒரு தொழில். அவரின் தந்தைக்கு அதை வைத்துத்தான் அவர்களின் குடும்பம் நடக்கின்றது. அவர் தந்தையுடன் சென்று ஒலிபெருக்கி கட்டுவது வழக்கம். இது கடந்த காலத்திலும் நடந்திருக்கின்றது இம்முறை சென்றபோது அவரும் தந்தையுமாக கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள்.
யுத்தம் முடிகின்றபோது அந்த மாணவனுக்கு ஐந்து, ஆறு வயதுதான் இருந்திருக்கும். அவர் விடுதலைப் புலிகளுக்குமோஇ யுத்தத்திற்குமோ எந்தவித சம்பந்தமும் இல்லாதவர். அவர் எந்தவொரு விடயமுமோ தெரியாத ஒருவர். அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்வது என்பது ஒரு மிக அநியாயமான விடயம் என்றே நான் கருதுகிறேன். அப்படியானவர்களை விடுதலை செய்வதற்கு அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்ததாக நகுலேஸ்வரன் சங்கரப்பிள்ளை என்பவர் விடுதலைப் புலிகளின் ஒரு முன்னைநாள் போராளி. இவர் புனர்வாழ்வு பெற்றுஇ ஆயுதப்போராட்டத்தை விட்டு முன்னைநாள் போராளிகள் கட்சி ஒன்றை ஆரம்பித்துஇ நாங்கள் ஐந்து கட்சிகளாக இயங்குகின்ற எங்களுடைய கூட்டணியிலே அவரும் அதில் இயங்கிக் கொண்டிருக்கின்றார். அவர் முன்னாள் போராளிகள் கட்சியிலே உப தலைவராக இருக்கின்றார். அவர் செய்த குற்றமெல்லாம் அவருடைய அலுவலகத்திலே அதாவது அந்தக் கட்சியினுடைய அலுவலகத்திலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வயோதிபர்களுக்கு உலருணவு வழங்கியது. இதற்காக அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தமட்டிலே பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டுமென்று நாங்கள் திரும்பத் திரும்ப கேட்கிறோம். நீங்கள் அதை மாற்ற வேண்டும்இ திருத்த வேண்டும் என்று கூறுகிறீர்கள்.
ஒரு நேரத்திலே CTA (Counter Terrorism Act) என்று கொண்டு வந்தீர்கள். இப்போது ATA (Anti Terrorism Act)). இவை எல்லாம் இருக்கின்றபோதும் அந்த TA(Terrorism Act) இருக்கின்றது. அதை நிச்சயமாக முழுமையாக நீக்க வேண்டும்.
நீங்கள் இங்கிருந்து எதைச் சொன்னாலும் இந்த சட்டங்கள் இருக்கின்ற வரையும் அந்தப் பகுதிகளிலே வேலைசெய்கின்ற பொலிசார் நிச்சயமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து கொண்டுதான் இருப்பார்கள். அவர்களை பிணையில்லாமல் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கின்றார்கள்.
ஆகவே இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இல்லாமல் செய்தால்தான் இந்த நிலைமைகள் இல்லாமல் போகும்.
இன்று நல்லிணக்கம் பற்றி பேசுகின்றபோதுஇ தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் ஒரு பயத்தைக் கொடுக்கின்றது. கடந்த காலங்களில் கூட மிக சிறு சிறு விடயங்களுக்கெல்லாம் பல இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு காலவரையின்றி சிறைகளில் இருந்தனர். தொடர்ந்து அவர்களை சிறையில் தடுத்து வைத்திருந்த காரணத்தினால் தான் இந்த போராட்டமானது மிகப் பெரிய ஆயுதப் போராட்டமாக உருவானற்கு காரணமாக இருந்தது. அது என்றுமே நிற்பாட்டப்படவில்லை. இன்று கூட அது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
ஆகவே, இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டியது ஒரு மிக முக்கியமான விடயமாகும்.