இரு கிராம சேவகர்களிற்கும் உயிரோடு இருக்கும் தந்தையர் இறுதிப் போரின்போது மரணித்து விட்டதாக சான்றுப் பத்திரங்கள்பெறுவதற்காக தலா ஒரு லட்சம் வழங்கிய ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு புலம்பெயர்ந்த இரு இளைஞர்கள்.
நடராசா லோகதயாளன்.
போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில், வெளிநாட்டில் நிரந்தரமாகத் தங்கும் உரிமை பெறும் நோக்கில் சிலருக்கு சட்டவிரோதமாக உதவி செய்ததான குற்றச்சாட்டில் கிராம சேவகர்கள் இருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தபோதும் இவர்களுக்கு திணைக்கள ரீதியில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட பதிலில் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் நீடிக்கும் அசாதாரண சூழ்நிலைகள் (இனப் பிரசணையின், பொருளாதார நெருக்கடி) காரணமாக ஏதோ ஒரு வகையில் நாட்டை விட்டு பிரஜைகளின் வெளியேற்றம் தொடர்கின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து ஜரோப்பிய நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளிற்கு புலம் பெயர்கின்ற நிலைமைகள் தீவிரமடைந்துள்ளன. இதன் காரணமாக வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்து செல்பவர்கள் தங்களை அந்த நாட்டில் நிரந்தமாகத் தங்கும் நோக்கில் பிராஜா உரிமையை பெறுவதற்காக பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது.
இதற்காக அவர்கள் உள்நாட்டில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய ஆவணங்களை அவசர அவசரமாக செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அந்தந்த நாடுகளின் தேவைகளுக்கு இசைவாக தகுதிகளை பூர்த்தி செய்யக்கூடிய வல்லமை மிக்க ஆவணங்களை தயார் செய்து அவை ஆதாரபூர்வமாக தோன்றுவதாகவும் இருக்கும் வகையில் அவற்றை பெற்றுக்கொள்வதற்காக அரச, தனியார் கட்டமைப்புக்களின் அதிகாரிகளிற்கு லஞ்சம் வழங்கும் நிலைமைகள் காணப்படுகின்றது.
இந்தப் பின்னணியில் முல்லைத்தீவில் இருந்து ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு புலம்பெயர்ந்த இரு இளைஞர்கள் தமக்கான நிரந்தர வதிவிட உரித்தைப் பெறுவதற்காக குறிப்பிட்ட நாட்டினால் கோரப்பட்ட நிபந்தனையை பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. இதற்காக இவர்கள் தாங்கள் வசித்த கிராமத்தின் உத்தியோகத்தர்களை அனுகி ஆவணங்களை தயார் செய்ய முனைந்துள்ளனர். அதற்கு அமைவாக இரு கிராம சேவகர்களிற்கும் தலா ஒரு லட்சம் ரூபாவை வழங்கி உயிரோடு இருக்கும் தந்தையர் இறுதிப் போரின்போது மரணித்து விட்டதாக சான்றுப் பத்திரங்களை தயாரித்துள்ளனர்.
இத்துடன் புலம்பெயர் இளைஞர்களின் தேவை பூர்த்தியாகி அப்பணி நிறைவுற்றபோதும் அந்த இளைஞர்களின் உறவுகளிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறின் காரணமாக விடயம் அம்பலமாகியது.
இலங்கையில் மரணம் ஒன்று வைத்தியசாலையில் நிகழுமாயின், அது திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகளின் பரிந்துரையின் பெயரில் மரணச் சான்றிதழைப் பெறவும் அதுவே காலம் கடந்த இறப்பு பதிவாகின் கிராம சேவகரின் பரிந்துரையின் அடிப்படையில் திடீர் மரண விசாரணை அதிகாரியின் சான்றிதழ் இணக்கப்பட வேண்டும் என்ற சட்ட ஏற்பாடு காணப்படுகின்றது.
இதற்கமையவே புலம்பெயர்ந்த இளைஞர்கள் காலம் கடந்த இறப்பு பதிவு என்ற வகையறைக்குள் கிராம சேவகர்கள் ஊடாக சான்றுப் பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த விடயம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு தெரிய வந்தபோது உரிய இரு கிராம சேவகர்களும் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டதோடு திணைக்கள ரீதியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இவை தொடர்பில் கட்டுரையாளரால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்பட்ட வினாக்களிற்கு மாவட்டச் செயலகம் பதிலளித்தது.
அந்த பதிலில் “திணைக்கள ரீதியில் இரு கிராம சேவகர்களிற்கும் தாபன விதிக் கோவை 2ஆம் தொகுதி 48ஆம் அத்தியாத்தின் பிரகாரம் பணி இடை நிறுத்தப்பட்டு தொடர் நடவடிக்கை இடம்பெறுகின்றது.என பதிலளிக்கப்பட்டுள்ளது.
சுயலாபத்திற்காக இருக்கும் பெற்றோரை, இறந்துவிட்டதாகக் கூறி சான்றிதழ் பெறுவதற்கான முயற்சி தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் முகச்சுழிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் பல வழிகள் மூலம் கொழும்பிலுள்ள தூதரக வட்டாரங்களின் பார்வைக்கு சென்றுள்ளது என்றும், அவர்கள் அதை தமது நாடுகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறிய முடிகிறது.